மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
10-01-2017 02:26 PM
Comments - 0       Views - 8

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு கடற்கரை  சிறுவர் பூங்கா, சுனாமி நினைவாலயம் மற்றும்  மக்கள் குடியிருப்புகளுக்கு  அருகில் பொருத்தமற்ற இடத்தில்  அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றுமாறு கோரிக்கை விடுத்து, முல்லைத்தீவு பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து, திங்கட்கிழமை  மாலை 3 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுனாமி நினைவாலயத்தில் ஒன்றுகூடிய  நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டகாரர்கள்,  “பொருத்தமற்ற இடத்திலிருந்து மதுபானசாலையை அகற்று”, அரச அதிகாரிகளே வாங்காதே  வாங்காதே இலஞ்சம் வாங்காதே, கொடுக்காதே கொடுக்காதே மதுபானசாலைக்கு அனுமதியை கொடுக்காதே” , “முல்லை குடும்பங்களை குலைத்திடும் மதுபானசாலையை அழித்திடுவோம்” போன்ற கோசங்களை எழுப்பியவாறும் சுலோகங்களை தாங்கியவாறும்  கடற்கரை வீதியூடாக முல்லை நகரத்தை அடைந்து அங்கிருந்து மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி கண்டன அறிக்கைகளை வாசித்தனர்.

இந்த ஆர்ப்பாதட்டத்தில் கலந்துகொண்ட, வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன், மதுபானசாலையை பொருத்தமான இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் அரச அதிகாரிகள், மக்களின் நலனை கருத்தில் கொள்ளாது அனுமதி வழங்குவது கண்டிக்கத்தக்க விடயம் என்றுக் கூறினார்.

தொடர்ந்து, ஜனாதிபதி, வடமாகாண முதலமைச்சர், நீதியரசர் லால் ரஞ்சித்சில்வா, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுசெயலாளர், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, மதுவரி ஆணையாளர் நாயகம் மற்றும் மாகாணசபை  உறுப்பினர் ரவிகரன் ஆகியோருக்க வழங்குமாறு கோரி, மகஜர்களை ரவிகரனிடம் மக்கள் கையளித்தனர்.

இந்த மதுபானசாலையானது,  ஆறு மாதங்களுக்கு மட்டுமே தற்காலிகமாக  இயங்குவதற்கு முல்லைத்தீவு அரச அதிபராலும் கரைதுறைப்பற்று பிரதேச செயலராலும் கடந்த ஆண்டு,  அனுமதி வழங்கப்பட்டிருந்ததோடு ஆறுமாதங்கள் முடிந்தபின், மதுபானசாலை வேறு இடத்துக்கு   மாற்றவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 எனினும், இந்த மதுபானசாலை அதே இடத்தில் தொடரந்து ஒரு வருடத்துக்கு இயங்க, முல்லைத்தீவு அரச அதிபர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

"மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty