மன்னாரிலும் டெங்கு அபாயம்
10-01-2017 03:01 PM
Comments - 0       Views - 9

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 10 தினங்களில் 63  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,  நாளுக்கு நாள் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட், தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2016 ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் 185 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை 25 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். தொடர்ந்த 5 தினங்களில் 38 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் உப்புக்குளம், மூர்வீதி, சாவட்கட்டு,பெரியகடை, தாழ்வுபாடு,பேசாலை உள்ளிட்ட கிராமங்களிலே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பின் தாக்கம் மற்றும் பரவல் காணப்பட்டுள்ள இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தாழ்வுபாட்டு கிராமத்தில் டெங்கு நுளம்பின் பரவல் காணப்பட்ட நிலையில் மூடப்பட்ட பாடசாலை, நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 மன்னாரில் உள்ள தனியார் கல்வி நிலையங்களினூடாக டெங்கு நுளம்பு பெருகுவதற்கான வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், சில தினங்களாக மூடப்பட்டிருந்த தனியார் கல்வி நிலையங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்துள்ளவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தினூடாக  மேற்கொள்ளப்படும்” என அவர் குறிப்பிட்டார்.

"மன்னாரிலும் டெங்கு அபாயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty