சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் சிறந்த வீரராக ரொனால்டோ
10-01-2017 06:22 AM
Comments - 0       Views - 35

சுவிற்ஸர்லாந்துத் தலைநகர் சூரிச்சில் இடம்பெற்ற, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன கால்பந்தாட்ட சிறப்பு விருதுகளில், உலகத்தின் சிறந்த வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயரிடப்பட்டார். 

போர்த்துக்கல், றியல் மட்ரிட்டின் முன்கள வீரரான, 31 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ; ஆர்ஜென்டீனா, பார்சிலோனாவின் முன்கள வீரரான லியனல் மெஸ்ஸி; பிரான்ஸ், அத்லெட்டிகோ மட்ரிட் முன்கள வீரரான அந்தோனி கிறீஸ்மன் ஆகியோரைத் தோற்கடித்தே, சிறந்த வீரராகத் தெரிவாகியுள்ளார். மொத்த வாக்குகளில், 34.54 சதவீதமான வாக்குகளை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றதுடன், 26.42 சதவீதமான வாக்குகளை லியனல் மெஸ்ஸி பெற்றதுடன், 7.53 சதவீதமான வாக்குகளை அந்தோனி கிறீஸ்மன் பெற்றார்.   

கடந்தாண்டு யூரோ கிண்ணத்தையும் சம்பியன்ஸ் லீக்கையும் வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கான அங்கிகாரமாக இவ்விருது நோக்கப்படுகிறது. கடந்த டிசெம்பரில், பலோன் டோர் விருதையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றிருந்தார். கடந்தாண்டில், 44 போட்டிகளில் பங்குபற்றி 42 கோல்களைப் பெற்ற ரொனால்டோ, 14 கோல்கள் பெறப்படுவதற்கான பந்துப்பரிமாற்றங்களையும் வழங்கியிருந்தார்.

அத்லெட்டிகோ பில்பாவோ அணியுடனான முக்கியமான போட்டியொன்று இன்று இருப்பதன் காரணமாக, மெஸ்ஸி உள்ளிட்ட அழைப்பு அனுப்பப்பட்ட பார்சிலோனா வீரர்கள், விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளமாட்டார்கள் என, விருது வழங்கும் விழாவுக்கு சில மணிநேரங்கள் முன்பதாக இறுதி நேரத்தில் பார்சிலோனா அறிவித்திருந்தது.  

இதேவேளை, உலகப் பதினொருவர் அணியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ், அன்றே இனியஸ்டா, டொனி க்ரூஸ், லூகா மோட்ரிக், சேர்ஜியோ றாமோஸ், ஜெராட் பிகே, டனி அல்விஸ், மார்ஷெல்லோ, மனுவல் நோயர் ஆகியோர் இடம்பிடித்தனர். இதில், றியல் மட்ரிட்டிலிருந்து ஐவரும், பார்சிலோனாவிலிருந்து நால்வரும் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், இங்கிலாந்து பிறீமியர் கால்பந்தாட்டக் கழகங்களிலிருந்து எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, சிறந்த வீரருக்கான குறும் பட்டியலில் இடம்பிடித்த அந்தோனி கிறீஸ்மன், இப்பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. 

இந்நிலையில், உலகின் சிறந்த வீராங்கனையாக ஐக்கிய அமெரிக்காவின் கார்லி லொய்ட் பெயரிடப்பட்டிருந்தார். மொத்த வாக்குகளில், 20.68 சதவீதமான வாக்குகளை கார்லி லொய்ட் பெற்றதுடன், பிரேஸிலின் மார்த்தா, 16.60 சதவீதமான வாக்குகளைப் பெற்றதுடன், மெலனி பெஹ்ரிங்கர் 12.34 சதவீதமான வாக்குகளைப் பெற்றார்.  

ஆண்களின் சிறந்த பயிற்சியாளராக, லெய்செஸ்டர் சிற்றியின் கிளாடியோ றைனேரி பெயரிடப்பட்டிருந்தார். றைனேரி, மொத்த வாக்குகளில் 22.6 சதவீதமான வாக்குகளைப் பெற்றார்.  றியல் மட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஸினேடி ஸிடன் 16.56 சதவீதமான வாக்குகளைப் பெற்றதுடன், போர்த்துக்கல் அணியின் பயிற்சியாளரான பெர்ணான்டோ சான்டோஸ் 16.24 சதவீதமான வாக்குகளைப் பெற்றார்.  

பெண்களின், சிறந்த பயிற்சியாளராக சில்வியா நெய்ட் தெரிவானார். மொத்த வாக்குகளில், 29.99 சதவீதமான வாக்குகளை நெய்ட் பெற்றார். ஐக்கிய அமெரிக்காவின் பயிற்சியாளரான ஜில் எல்லிஸ் 16.68 சதவீதமான வாக்குகளைப் பெற்றதுடன், சுவீடனின் பயிற்சியாளரான பியா சண்ட்ஹேக் 16.47 சதவீதமான வாக்குகளைப் பெற்றார்.   

சிறந்த கோலுக்கான புஸ்கஸ் விருது, பெனாங் அணியைச் சேர்ந்த மொஹ்ட் பைஸ் சுப்ரிக்கு கிடைத்தது. மலேஷியன் சுப்பர் லீக்கில் மேற்படி கோல் பெறப்பட்டிருந்தது. 35 அடி தூரத்திலிருந்து அவர் உதைத்த “பிறீ கிக்”, கோல் கம்பத்தின் இடது மூலைக்குள் செல்வது போன்று ஆரம்பித்து, கோல் கம்பத்தின் வலது மூலைக்குள் சென்றிருந்தது. மொத்த வாக்குகளில், 59.46 சதவீதமான வாக்குகள் சுப்ரிக்கு கிடைத்திருந்தன.

இதேவேளை, சிறந்த இரசிகர்களுக்கான விருது, பொரிசியா டொட்டமுண்ட், லிவர்பூல் ஆதரவாளர்களுக்கு கிடைத்தது. லிவர்பூல் இரசிகர்கள் 96 பேர் இறந்த ஹில்ஸ்பொரோ அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், “நீங்கள் தனித்து நடக்க மாட்டீர்கள்” என்ற பாடலை, இரண்டு அணிகளினது இரசிகர்களும் சேர்ந்து பாடியிருந்தனர். மொத்த வாக்குகளில், 45.92 சதவீதமான வாக்குகள் அவர்களுக்கு கிடைத்திருந்தன.  

இவை தவிர, கோப்பா சுடாஅமெரிக்கானா கிண்ணத்தை சப்பிகுயின்ஸ் அணிக்கு வழங்கிய அத்லெட்டிகோ நெஷியோனல் அணிக்கு, சிறந்த நன்நடத்தையை வெளிப்படுத்திய விருது வழங்கப்பட்டது. சப்பிகுயின்ஸ் அணியின் வீரர்களும், பயிற்சியாளர்களுமாக 19 பேர் விமான விபத்தில் இறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.     

"சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் சிறந்த வீரராக ரொனால்டோ " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty