சம்பியனானது கற்பிட்டி ட்ரகன்ஸ்
02-01-2017 06:49 AM
Comments - 0       Views - 15

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் நகரில் கிரிக்கெட் துறையில் வெற்றிக்கு மேல் வெற்றிபெற்று பிரகாசித்து கொண்டிருந்த புத்தளம் ட்ரகன்ஸ் கிரிக்கெட் கழகத்தை கல்பிட்டி பிரதேசத்தில் அன்று பிறந்த பாலகனாக உதித்த கற்பிட்டி ட்ரகன்ஸ் அணி வீழ்த்தி, புத்தளம் ட்ரகன்ஸ் அணியினை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இந்த பரபரப்பான கிரிக்கட் போட்டி தொடர் புத்தாண்டு தினத்தன்று புத்தளம் தில்லையடி முஸ்லிம் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. புத்தளம் ட்ரகன்ஸ் அணியின் உரிமையாளர் ஏ.ஆர்.எம். ரிஸ்பாக் இந்த போட்டி தொடருக்கு பூரண அனுசரணை வழங்கி இருந்தார்.

அணிக்கு ஆறு பேர்களை கொண்ட நான்கு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் போட்டித் தொடரில் மொத்தமாக 13 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், புத்தளம் ட்ரகன்ஸ் அணியும் கற்பிட்டி ட்ரகன்ஸ் அணியும் மோதின.

கற்பிட்டி ட்ரகன்ஸ் அணியானது, புத்தளம் ட்ரகன்ஸ் அணியின் உரிமையாளர் ஏ.ஆர்.எம். ரிஸ்பாக்கினால் புத்தாண்டு தினத்தன்று (01.01.2017) ஆரம்பிக்கப்பட்ட அணி என்பது இங்கு கோடிட்டு காட்டப்படவேண்டிய ஒன்று. ஆரம்பித்த முதல் நாளிலேயே பிரபலமான அணி ஒன்றினை ஆட்டம் காண வைத்துள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கற்பிட்டி ட்ரகன்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. இதன் அடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாடிய புத்தளம் ட்ரகன்ஸ் அணி நான்கு ஓவர்கள்  நிறைவில் 22 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கற்பிட்டி ட்ரகன்ஸ் அணி, மூன்று ஓவர்கள் முடிவில் வெற்றியிலக்கை அடைந்து வெற்றிபெற்று சம்பியனாகியது. புத்தளம் ட்ரகன்ஸ் அணி, இரண்டாம் இடத்தோடு ஆறுதலடைந்தது.

போட்டிக்கு நடுவர்களாக, புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ரபீக், எம்.ரிஸ்மி ஆகியோர் கடமையாற்றினர். சம்பியனான கற்பிட்டி ட்ரகன்ஸ் அணிக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வெற்றிக்கிண்ணமும், இரண்டாமிடத்தினைப் பெற்ற புத்தளம் ட்ரகன்ஸ் அணிக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டன.

வெற்றிக்கிண்ணத்தினை, நடுவராகக் கடமையாற்றிய எம்.எஸ்.எம். ரபீக் வழங்கி வைத்தார்.

"சம்பியனானது கற்பிட்டி ட்ரகன்ஸ் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty