சம்பியனானது புத்தளம் கால்பந்தாட்டக் கழகம்
05-01-2017 06:51 AM
Comments - 0       Views - 16

- எம்.யூ.எம். சனூன்

உடப்பு தமிழ் கிராமத்தில், அண்மையில் நடைபெற்ற, அணிக்கு ஏழு பேர்களைக் கொண்ட கால்பந்தாட்டத் தொடரில், புத்தளம் கால்பந்தாட்டக் கழகம் சம்பியனாகியுள்ளது.

உடப்பு கடற்கரை விளையாட்டு மைதானத்தில், புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற இந்த கால்பந்தாட்டத் தொடரினை, உடப்பு ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் அமைப்பினர் ஏற்பாடு  செய்திருந்தனர்.

புத்தளம், உடப்பு, ஆண்டிமுனை, மாதம்பை போன்ற பிரதேசங்களிலிருந்து மொத்தமாக 18 அணிகள் இந்தப் போட்டித் தொடரில் பங்குபற்றின. இரு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரில், முதல் நாள்  உள்ளூர் அணிகளும், இரண்டாம் நாள் வெளியூர் அணிகளும் கலந்து கொண்டன.

இறுதிப் போட்டியில், புத்தளம்  கால்பந்தாட்டக் கழக அணியும் உடப்பு வசந்தன் அணியும் மோதின. இப்போட்டியில், புத்தளம் கால்பந்தாட்டக் கழக அணிக்கு கிடைக்கப் பெற்ற பெனால்டி உதையினை அவ்வணியின் வீரர் ஏ.எம். சபீக் கோலாக்கினார். இறுதி வரைக்கும் இரு அணிகளாலும் வேறு எந்த கோல்களும் பெற்றுக் கொள்ளப்படாததால் அந்த ஒரு பெனால்டி உதை கோல், வெற்றிக் கோலாக மாற, புத்தளம்  கால்பந்தாட்டக் கழக அணி வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

சம்பியனான புத்தளம் கால்பந்தாட்டக் கழக அணிக்கு 20  ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வெற்றிக்கிண்ணமும், இரண்டாமிடத்தினைப் பெற்ற  உடப்பு வசந்தன் அணிக்கு 15  ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதோடு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.

போட்டிக்கு நடுவர்களாக புத்தளம் மத்தியஸ்தர்  சங்க உறுப்பினர்களான,  எம்.ஓ.எம். ஜாகீர், எம்.ஐ.எம். அலி, எம். சர்ஜூன் ஆகியோர் கடமையாற்றினர்.

"சம்பியனானது புத்தளம் கால்பந்தாட்டக் கழகம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty