2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதித் தேர்தல் 2020இல் இல்லை

George   / 2017 ஜனவரி 12 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ், ப.பிறின்சியா டிக்சி

“புதிய அரசியலமைப்பின் ஊடாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து விட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, ஜனாதிபதித் தேர்தல் 2020ஆம் ஆண்டு நடைபெறாது” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோது, அதில் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்தே புதிய அரசாங்கம், ஆட்சிக்கு வந்தது. அதிகாரத்தை ஒழிப்பதாகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்துப் பலமிக்க நாடாளுமன்ற ஆட்சியை உருவாக்குவோம் என்றும் அவர் கூறினார்.    

ஜனாதிபதி முறைமை இல்லாமற் செய்யப்பட்டே புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்படுகிறது. தாங்கள் ஜனாதிபதியானால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகவே முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கூறினார். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை.  

ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகத் தெரிவித்து சந்திரிகா, 1994 இல் ஆட்சிக்கு வந்தார். 2000 ஆம் ஆண்டு தேர்தலிலும் இதனையே சொன்னார் ஆனால் செய்யவில்லை.  

2005ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகத் தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதனையே கூறி வாக்குகளைப் பெற்று ஆட்சியை கைப்பற்றினார். ஆனால், முறைமையை ஒழிக்கவே இல்லை.  

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக சந்திரிகா மற்றும் மஹிந்த கூறினாலும், நாட்டில் காணப்பட்ட பயங்கரவாத சூழ்நிலை மற்றும் சர்வதேச விவகாரங்கள் காரணமாக அதனை செய்வது கடினமானதாக இருந்ததால், அதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை.   

2011ஆம் ஆண்டுவரை, இந்த நிலை மஹிந்தவுக்கும் இருந்தது. எனினும், அதன் பின்னர் அதனை செய்ய மஹிந்தவுக்கு, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பலமும் இருக்கவில்லை என்பது வேறு விடயமாகும். எனினும், 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கான அவசியம் இருக்கவில்லை.   

எனினும், நாம் சொன்னதும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புமாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே காணப்படுகின்றது. அதனை நிச்சயமாக நாம் செய்வோம்” என்றார்.  

“இதேவேளை, அரசாங்கத்தில் முக்கிய அங்கமாகவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறையையே தொடரத் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றதே?” என ஊடகவியலாளர்கள் கேட்டதுக்கு பதிலளித்த ராஜித,  

“அது ஒரு சிலரின் நிலைப்பாடு, அவர்களின் இந்த முடிவுக்கு காரணம் என்னவென்று இன்று (நேற்று) காலை அவர்களிடம் நான் பேசினேன். அக்கூட்டத்தில் ஜனாதிபதி இருக்கும் போது இவ்வாறான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.  

நாம் அவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவோம். மக்களின் பலம் எமக்கு உள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியுடன் உள்ளது. இதனை நிச்சயம் நாம் செய்து காட்டுவோம்” என்றார்.  

“2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?” என ஊடகவியலாளர்கள் கேட்டதுக்கு, “2020இல் தான் ஜனாதிபதி தேர்தலே நடைபெறாது. அப்போது அவர் எப்படி போட்டியிடுவார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் முடிவில் எவ்வித பயனும் இல்லை.

எவ்வளவு தீர்மானங்களை அவர்கள் எடுத்துள்ளார்கள். சந்திரிகா காலத்தில் கூட்டாட்சி ( பெடரல்) என்றனர். மஹிந்த காலத்தில் ஒற்றையாட்சி என்றார்கள். எதுவுமே நடக்கவில்லை. எனினும், இந்த ஆட்சியில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நிச்சயமாக ஒழிக்கப்படும்” என்றார்.  

அதன்போது, “ஐக்கிய தேசியக் கட்சியும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் உறுதியாக உள்ளது” என இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .