2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காங்கிரஸைப்போல் பா.ஜ.கட்சியும் தமிழகத்தில் செல்வாக்கை இழக்கிறது

Administrator   / 2017 ஜனவரி 16 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜல்லிக்கட்டு தமிழக இளைஞர்கள் மத்தியில், மிகப்பெரிய உணர்ச்சி மிக்க போராட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர் பிரச்சினை உச்சத்தில் இருக்கும் போது போராடியது போலவும் இந்தி எதிர்ப்புக்காகப் போராடியது போலவும் ஆங்காங்கே போராடிக் கொண்டிருப்பதால் தமிழக அரசு, இந்தப் போராட்டத்தை எப்படிக் கையாளுவது என்று தவித்துக் கொண்டிருக்கிறாது.   

 ஜல்லிக்கட்டு விளையாட்டு, தமிழர்களின் வீர விளையாட்டு. இதனை இல்லாமல் செய்வதற்குத் திட்டமிட்டு, முன்பிருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கமும் இப்போது இருக்கின்ற பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கமும் செயல்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதே, இப்படியொரு உணர்வு மிக்க போராட்டத்துக்குக் காரணமாகும்.  

அரசியல் கட்சிகள் போராடுவது வேறு; இளைஞர்களே தன்னெழுச்சியாகப் போராடுவது வேறு.   

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இளைஞர்கள் தன்னெழுச்சியாகப் போராடுகிறார்கள். அரசியல் கட்சிகளின் பிரசாரங்களுக்கு, கூட்டங்களுக்கு இலவசங்களைக் கொடுத்துக் கூட்டத்தை அழைத்து வர வேண்டிய நிலை உள்ள நேரத்தில், வெறும் சமூக வலைத்தளங்களில் விடப்பட்ட அழைப்பினை ஏற்று, சென்னை மெரினா கடற்கரையில் கூடிய இளைஞர்கள் கூட்டத்தைப் பார்த்து, ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் மிரண்டு போயிருக்கின்றன.   

இது மாதிரி இளைஞர் கூட்டம், 1965 களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்தது. 2009 ஆம் ஆண்டு வாக்கில், இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் இருந்தது.  

 அதன் பிறகு, இப்போது 2016 இல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தடை என்றதும், அந்த எழுச்சி வந்திருக்கிறது.  
மூன்றாவது வருடமாகப் பொங்கல் திருநாளன்று, ஜல்லிக்கட்டு நடக்காமல் போயிருக்கிறது. உச்சநீதிமன்றமும் வழக்கில் பொங்கலுக்கு முன்னால் தீர்ப்பளிக்க முடியாது என்று கூறி விட்டது.   

இதனால், போராட்டத்தின் ஆக்ரோஷம் மேலும் அதிகரித்து இருக்கிறது. ஜல்லிக்கட்டு, காளைகளைத் துன்புறுத்தும் விளையாட்டு என்பது ‘பீட்டா’ அமைப்பின் வாதம்.  

 “இல்லை! இது தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டுடன் தொடர்புடையது” என்பது தமிழக அரசின் வாதம். ஏன், மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் கூட, “விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில், சில நெளிவு சுளிவுகள் தேவை.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழி விட்டால் பரவாயில்லை” என்ற நிலையில்தான் உச்சநீதி மன்றத்தில் வாதிட்டது.  

ஆனால், இந்திய உச்சநீதிமன்றமோ விடாப்பிடியாக, ஜல்லிக்கட்டுக்கு இதுவரை அனுமதி வழங்க மறுத்து விட்டது. இனி, நிலுவையில் உள்ள வழக்கில் என்ன தீர்ப்பை வழங்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

 அதேநேரத்தில், உச்சநீதிமன்றத்தின் கருத்து என்னவாக இருக்கிறது என்றால்,“விலங்குகள் வதை செய்யப்படுவதைத் தடுப்பதே, மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டத்தின் நோக்கம். அந்த அடிப்படை நோக்கத்துக்கு எதிராக ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எப்படி அனுமதி கொடுக்க முடியும்” என்று கேள்வி எழுப்புகிறது.  

 இந்தக் கேள்விக்கான பதிலை, மத்திய அரசாங்கம் கொடுத்திருக்க வேண்டும். விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் ‘காளை’களை வைத்து, உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு நடத்துவது, ‘வதை படுத்துதல்’ ஆகாது என்று ஒரேயொரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து விட்டால், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விட முடியும்.   

ஆனால், மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம், ‘காளைகளைக் காட்சிப் படுத்தப்படக் கூடாத பட்டியலில்’ சேர்த்து விட்டுப் போனது.   

இப்போது இருக்கும் மத்திய அரசாங்கமோ, முந்தைய அரசாங்கத்தின் அந்த அறிவிக்கையை (அரசின் அதிகாரபூர்வமான அறிவிப்பு) இரத்துச் செய்யாமல், காளைகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்குச் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் சேர்த்தது. அதனால் ‘காளைகள் காட்சிப்படுத்தப்படக் கூடாத விலங்கினம்’ பட்டியலில் இன்னும் தொடருகிறது. அதனால்தான் உச்சநீதிமன்றம் தொடர்ந்து மறுத்து வருகிறது.   

ஆகவே, விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வந்தால் தவிர, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு வழியில்லை என்பதே இன்றைய நிலை.  

அதனால்தான், முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம், அவசரமாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘உடனே அவசரச் சட்டம் கொண்டு வாருங்கள்’ என்று கடிதம் எழுதியிருக்கிறார்.   

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ‘அவசரச் சட்டம் வேண்டும்’ என்று கோரி ஆர்பாட்டம் நடத்தியிருக்கிறார். அனைத்துக் கட்சிகளும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.   

ஆனால், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இதுவரை சாத்தியக்கூறான வழி முறைகள் பற்றி, பா.ஜ.க அரசாங்கம் யோசிக்கவில்லை. காரணம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்தைத்தான் சொல்லி வருகிறது.  

இந்த ஜல்லிக்கட்டு அரசியல், பா.ஜ.கவுக்கு எதிரான மனப்போக்கைத் தமிழகத்தில் உருவாக்கியிருக்கிறது என்பதை ஏனோ மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் யோசிக்க மறுக்கிறது.  

 காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை; வர்தா புயலுக்கும் வறட்சி நிவாரணத்துக்கும் இன்னும் நிதி ஒதுக்கவில்லை; ‘நீட் தேர்வில்’ கிராமப்புற மாணவர்களுக்காக வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்கவில்லை; இப்போது, ஜல்லிக்கட்டு விடயத்திலும் தடை நீடிக்கிறது.  

 இதற்கிடையில் ‘பொங்கல் லீவை’ இரத்துச் செய்து, பின்னர் பல்டி அடித்தது போன்ற நிகழ்வுகள், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.கவுக்கு மாநிலத்தில் எந்தச் செல்வாக்கையும் பெற்றுத் தரும் விதத்தில் இல்லை.   

இதை, மாநிலத்தில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால், மத்தியில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் உணரவில்லை.

இதே நிலை நீடித்தால் ‘இலங்கை தமிழர் பிரச்சினையில் துரோகம் செய்து விட்டது’ என்று குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு, எப்படி தமிழகத்தில் வெற்றி வாய்ப்புப் பறி போனதோ, அதே மாதிரியான சூழல் பா.ஜ.கவுக்கும் தமிழகத்தில் உருவாகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.  

குறிப்பாக, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, இறந்து விட்ட சூழலில் பா.ஜ.கவுக்கு ஒரு வாய்ப்பு, தமிழகத்தில் இருக்கிறது என்ற ‘இமேஜ்’ உருவானது. 

 அதிலும், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவே சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘இந்தியா டுடே ‘கான்கிளேவில் இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். “பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தமிழகத்தில்தான், அதிக வரவேற்பு இருக்கிறது.

ஆகவே, நரேந்திரமோடிக்கு உள்ள இமேஜ் பா.ஜ.க மாநிலத்தில் வளர உதவும்” என்று வெளிப்படையாகவே பேசினார்.  
 இன்னும் சொல்வதென்றால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவுக்கு உள்ள ஆதரவில் கனிசமான வாக்குகளை பா.ஜ.க பெறும் என்றே ஒரு கருத்துருவாக்கம் ஏற்பட்டது.  

 ஆனால், இது எல்லாவற்றையும் ‘ஜல்லிக்கட்டுத் தடை’ தவிடு பொடியாக்கி விட்டது என்பதுதான் இன்றைய நிலை.  
 தமிழ்நாட்டில், பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில், ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற நிலையில்தான் இருக்கிறது. 

அதனால், ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தி.மு.க போன்ற கட்சிகள், பா.ஜ.கவுக்கு அ.தி.மு.க வாக்குகள் போகாது என்ற முடிவுக்கு வந்து விட்டன.  

 அதைவிட, முக்கியமாக ‘ஜல்லிக்கட்டு விளையாட்டை’ முன்னிறுத்தி பா.ஜ.க மீது எந்தளவுக்கு வெறுப்பை ஏற்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு எதிர் பிரசாரத்தில் அ.தி.மு.கவும் தி.மு.கவும் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளுமே முன்னிற்கின்றன.  

குறிப்பாக, தமிழர் கலாசாரம், பண்பாடு போன்றவற்றுக்கு எதிராகப் போர் தொடுத்திருக்கிறது பா.ஜ.க என்ற குற்றச்சாட்டை தமிழகம் முழுவதும் அனைத்து எதிர்கட்சிகளும் ‘தீ’ யாகப் பரப்பி வருகிறது.   

இந்நிலைமை, பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெற மட்டுமல்ல, 2019 ஆண்டி​ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியுடன் தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள், கூட்டணி வைப்பதற்கும் தடையாக அமைந்து போனாலும் வியப்பதற்கில்லை. 

காங்கிரஸ் கட்சியும் ‘ஜல்லிகட்டு’ க்கு தடை ஏற்பட்டதற்கு காரணம். அந்த காலகட்டத்தில் தி.மு.க அந்தக் கட்சியுடன் கூட்டணியாக இருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜல்லிகட்டு தி.மு.க ஆட்சியில் நடத்தப்பட்டது.

ஆனால், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அதே உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் இன்றைக்கு ஜல்லிக்கட்டு தடைப்பட்டு நிற்கிறது.  

 ஆகவே, அ.தி்.மு.க ஆட்சியில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தினால் மட்டுமே, பொதுமக்களின் குற்றச்சாட்டிலிருந்து அ.தி.மு.கவும் தப்பிக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் பா.ஜ.கவும் தப்பிக்க முடியும்.  

ஆனால், ‘ஜல்லிக்கட்டுக்கான கடிவாளம்’ இப்போது உச்சநீதிமன்றத்திடம் இருக்கிறது. தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது என்பதைத் தமிழக மக்கள் மட்டுமல்ல மத்திய அரசாங்கம் கூட, உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய சூழ்நிலையில் இருக்கும் எதார்த்தமான நிலை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X