2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'யுத்தத்தால் பாதிப்புற்ற வட மாகாணத்தை கட்டியெழுப்ப பேதமின்றி முன் வாருங்கள்'

Princiya Dixci   / 2017 ஜனவரி 18 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தால் மோசமாகப் பாதிப்புற்ற வட மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இன, மத பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார்.

வவுனியாவில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற நவீன பஸ் நிலைய அங்குரார்ப்பண விழாவில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

அமைச்சர் ரிஷாட் இங்கு மேலும் கூறியதாவது,

'வவுனியா மாவட்டம், யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த மாவட்டத்தின் கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியவையும் பாதிக்கப்பட்டதனால் பொருளாதார ரீதியில் நாம் மிகவும் நலிவடைந்துள்ளோம்.

வறுமைக்கோட்டின் கீழே வாழும் மக்கள், இந்த மாவட்டத்தில் ஏராளமானோர் உள்ளனர். யுத்தத்தின் பாதிப்புக்களால் விதவைகள், அநாதைகள், மாற்றுத் திறனாளிகளென உருவாகி அவர்களும் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்கின்றனர். சமூகத்தில் இவ்வாறு கஷ்டத்தில் வாழ்பவர்களுக்கு நாம் முன்னுரிமை கொடுத்து உதவ வேண்டும்.

வவுனியா மாவட்டத்தில் போக்குவரத்து சேவையை சீர்படுத்தி ஒழுங்கான நிலையிலும் சிறந்த முறையிலும் இந்தச் சேவையை முன்னெடுப்பதற்காகவே இவ்வாறான பாரிய பஸ் நிலையமொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. வட மாகாண மக்களை தென்னிலங்கையுடன் மாத்திரமன்றி ஏனைய மாகாணங்களுடனும் இலகுவில் இணைப்பதற்கான ஒரு முயற்சியாக நாங்கள் இதனை கருதுகின்றோம். இதன் மூலம் இந்த மாவட்ட மக்கள் பல்வேறு வழிகளில் மேம்பாடு அடைவதற்கு வழிசமைக்கப்பட்டுள்ளது' என்றார்.

அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பிரதம அதிதியாகப் பங்கேற்ற இந்த நிகழ்வில், பிரதிப்போக்குவரத்து அமைச்சர் அசோக அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டொக்டர் சிவமோகன், கே.கே மஸ்தான், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண சபை அமைச்சர் டெனீஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர்களான கமலநாதன், லிங்கநாதன், ஜயதிலக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார, தேசிய போக்குவரத்து ஆனைக்குழு தலைவர்ம் மற்றும் போக்குவரத்து சபை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .