2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய நட்சத்திரங்கள்

George   / 2017 ஜனவரி 19 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

நடிகர் விஜய், ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் பேசிய வீடியோ பதிவு அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

“எல்லோருக்கு வணக்கம். நான் உங்கள் விஜய் பேசுறேன். உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களுடைய கலாசாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கத்தான், பறிக்கிறதுக்கு அல்ல. தமிழனுடைய அடையாளம் ஜல்லிக்கட்டு.
எதையும் எதிர்பார்க்காமல், யாருடைய தூண்டுதலும் இல்லாமல், எந்தவிதமான கட்சி பேதமும் இன்றி, தமிழ் என்ற ஒரே உணர்வோடு இந்த போராட்டத்தில் குதித்திருக்கிற அத்தனை இளைஞர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்தால் நான் சந்தோஷப்படுவேன். இத்தனைக்கும் காரணமான அமைப்பை (பீட்டா) வெளியே அனுப்பிட்டால் தமிழ்நாடே சந்தோஷப்படும்” என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜயை தொடர்ந்து தனுஷ் மற்றும் விக்ரம் இருவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தனுஷ், “ஜல்லிக்கட்டுக்காக இணைந்து போராடும் அனைத்து தமிழர்களால் பெருமை கொள்கிறேன். தமிழ் கலாசாரமான ஜல்லிக்கட்டை நடத்த ஒருங்கிணைந்துள்ளதால் வெற்றி நிச்சயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விக்ரம் கூறுகையில், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தும் அனைத்து தமிழர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இயக்குநர் அமீர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் தீவிரமாக போராட்டக் களத்தில் பங்கு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் முடிந்துவுடன் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமும் முடிந்தது. ஆனால் இம்முறை இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர், ஆகியோர்களின் ஒட்டுமொத்த எழுச்சி ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றி பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், தமிழர்களின் போராட்டம் குறித்து பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “மேற்கத்திய கலாசார விளையாட்டுக்கள் நம் மக்களின் பொழுது போக்குக்கு மட்டுமே சிறந்தது. ஆனால் நம் ஜல்லிக்கட்டு என்பது ஆண்மைக்கும், வீரத்துக்கும் உரியதானது.

சுமார்  5000ம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் வீர விளையாட்டாக கொண்டாடப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு தடையா? ஆச்சரியம் தான். ஆண்டு முழுவதும் தங்களது செல்ல குழந்தைகளாக கருதப்படும் காளைகளை ஜல்லிக்கட்டுக்காக மூன்றே நாள் தான் விளையாட வைக்கிறார்கள்.

ஆனால், நாள் முழுவதும் எத்தனை இலட்சம் உயிர்கள் நம் உணவுக்காகவும், உடைகளுக்காகவும், தோலுக்காகவும் கொல்லப்படுகிறன.

ஜல்லிக்கட்டுக்காக மூன்றே நாட்கள் பயன்படுத்தப்படும் காளைகள் வதை செய்யப்படுகிறது என்றால், உணவுக்காகவும், தோலுக்காகவும், உடைக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் என்ன தாங்களாகவே தங்கள் தலையை நீட்டி கொல்லப்படுவதை வரவேற்கின்றனவா?

வீர விளையாட்டுக்கு மிருகவதை என்று பெயராம். வியாபாரத்துக்கு அன்னிய செலாவணி என்று பெயராம். கடந்த சில நாட்களாக சகோதரர், சகோதரிகள் வீதியில் நின்று போராடுகிறார்கள் எதற்காக?

நமக்கு பிடித்த விளையாட்டை விளையாட விடுங்கள் என்று. அதற்காக அடித்து உதைத்து துன்புறுத்துவதா? மாடுகளை துன்புறுத்துகிறோம் என்று தடை செய்து விட்டு மனிதர்களை அடித்து துரத்தி துன்புறுத்துவது என்ன நியாயம்?

தமிழன் போராடுவது எதற்காக? தாங்கள் வீரன் என சொல்லப்படுவதற்காக. ஜல்லிக்கட்டு வேண்டி போராடுபவர்களை முடக்கி கோழைகளாக்க வேண்டாம். தயவுசெய்து மாநில அரசும், மத்திய அரசும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும்” என ராகவா லோரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிகட்டு போராட்டம் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு புறம் பீட்டாவுக்கு எதிரான குரலும் வலுத்து வருகிறது. இந்நிலையில், பீட்டாவுக்கு ஆதரவு அளித்த திரையுலகினர் மீது கடுமையான விமர்சனம் பாய்ந்து வருகிறது. நடிகர் விஷால், பீட்டாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் இதுகுறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

“பீட்டா என்பதன் விரிவாக்கமே எனக்கு சில நாட்களுக்கு முன்புதான் தெரிந்தது. நான் ஜல்லிக்கட்டை எதிர்க்கின்றேன் என்று கூறுவது முழுக்க முழுக்க வதந்தி. நான் ஒரு விடயத்தை சொல்கிறேன் என்றால் அதை எனது சமூக வலைத்தளத்திலோ, அல்லது பேட்டியிலோதான் தெரிவிப்பேன். எனது புகைப்படைத்தை போட்டு நான் சொல்லாத கருத்தை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது.

இன்று இளைஞர்களின் போராட்டம் மத்திய அரசின் கவனத்துக்கு நிச்சயமாக சென்றிருக்கும். அதனால் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றப்படும் என்று நம்புகிறேன். இந்த வெற்றி இளைஞர்களின் வெற்றி. என்மீது தேவையில்லாத வதந்தி பரப்புவதை விட்டுவிட்டு போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு ஆதரவு கொடுங்கள். அதுதான் இப்போதைக்கு முக்கியம். மேலும் அடுத்த வருடம் ஜல்லிகட்டு முறையாக நடைபெற என்னால் முயன்ற உதவியை கண்டிப்பாக செய்வேன்” என விஷால் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, “ஜல்லிக்கட்டு தடை என்பது மிருகவதை குறித்த புரிதல் இல்லாமல் நடந்துள்ளது என்றும் உண்மையில் மிருகவதை என்றால் முதலில் தடை செய்ய வேண்டியது தீபாவளி பண்டிகையும் விநாயகர் சதூர்த்தி பண்டிகையும் தான்” என்று பிரபல இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ஏறுதழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு, தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், மிருகவதை எனக் கூறி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின்போது எண்ணற்ற விலங்குகளும் உயிரினங்களும் பட்டாசு வெடிச் சத்தத்தால் பீதி அடைகின்றன. பல பறவைகள் இறக்க நேரிடுகிறது. மிருகவதை என்றால் முதலில் தடை செய்ய வேண்டியது தீபாவளி பண்டிகைதான்.

இதேபோல, விநாயகர் சதுர்த்தியின்போது ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சிலைகள் கடலில் கரைக்கப்படுகின்றன. அவ்வாறு கரைக்கப்படும் சிலைகளில் உள்ள வேதியியல் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றன. கடல்வாழ் உயிரினங்கள் வதைக்கு காரணமான விநாயகர் சதுர்த்திக்கும் தடை விதிக்கப்படுமா? உண்மையான மிருகவதையை விட்டுவிட்டு, ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு தடை கோருவதில் வேறொரு நோக்கம் இருப்பது தெளிவாகிறது. ஒவ்வொரு பூர்வ குடியும் தங்களது அனுபவங்களை அடுத்த தலைமுறையினருக்கு கடத்தி வருகிறது. இதனுடைய தொடர்ச்சியாகவே ஜல்லிக்கட்டு உள்ளது.

காளை இனத்தை மேம்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும்தான் ஜல்லிக்கட்டு போன்ற விழாக்களை முன்னோர்கள் கொண்டாடி வந்துள்ளனர். நாட்டு மாடுகளின் பாலை குடிக்க மக்கள் மறந்ததுதான் கடந்த 30 ஆண்டுகளில் நீரிழிவு நோய் தாக்கம் அதிகரிக்க காரணம். இதுபோன்ற சூழலில் நாட்டு மாடுகளை பாதுகாப்பதற்கான ஒரு அம்சமாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது. சில விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு பிரச்சினையில் அடிப்படை புரிதல் இல்லாததே இந்த விவகாரம் தீவிரம் அடையக் காரணம்” என்று இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறு இருக்க நடிகர் ஜி.வி.பிரகாஷ், சேலம் அருகேயுள்ள ஆத்தூரில் போராட்டத்தில் கலந்து கொண்டதுடன், இன்னொரு பக்கம் அலங்காநல்லூரில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, அமீர், கருணாஸ் ஆகியோர் மக்களோடு மக்களாக போராட்டத்தில் அங்கம் வகித்துள்ளனர்.

இதேபோல் சென்னை மெரீனாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் டி.ராஜேந்தர் உள்பட ஒருசில திரையுலகினர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் இமயம் பாரதிராஜா, “பொங்கல் முடிந்தாலும் ஜல்லிக்கட்டு தடை நீங்கும் வரையிலும், பீட்டா அமைப்பு தடை செய்யப்படும் வரையிலும் இந்த போராட்டம் நீட்டிக்கும்” என்று கருத்த தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, “ஜல்லிக்கட்டுக்கு சட்டரீதியாக ஆயிரம் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால், ஒரு மாநிலத்தின் கலாசாரம், பண்பாட்டு விடயத்தில் யாரும் கைவைக்க கூடாது. மக்களுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்துக்காக மக்கள் அல்ல. மக்களுடைய பழக்க வழக்கத்துக்க ஏற்ப தான் சட்டங்கள் இருக்க வேண்டும்.
எனவே, இந்த பிரச்சனை இந்த ஆண்டு கண்டிப்பாக முடிவுக்கு வந்துவிடும். இந்த பிரச்சினையின் திறவுகோலை தமிழக அரசு கண்டிப்பாக கண்டுபிடித்து திறக்க வேண்டும். பொங்கல் முடிந்தாலும் பீட்டா என்ற அமைப்பை தடை செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும்” என்று பாரதிராஜா கூறியுள்ளார்.

இதேவேளை, முதல்முறையாக பிரபல நடிகை நயன்தாரா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். “இளையதலைமுறையின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டுவரும் எழுச்சி வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இந்த தருணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவள் என்னும் பெருமை என்னை தலைநிமிர வைக்கிறது. இளையதலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே நடப்பது நம்மை பெருமைப்பட வைக்கிறது.

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எடுத்து இருக்கும் இந்த உணர்ச்சிகரமான நடவடிக்கை, நிச்சயமாக தமிழக கலாசாரத்தின் பெருமையை உலகமெங்கும் ஒலிக்க செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொண்டு தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று தொடர்ந்து இந்த இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு சராசரி குடிமகளாக நான் அவர்களின் ஒற்றுமைக்கும், தைரியத்திற்கும் தலை வணங்குகிறேன். இவர்களின் இந்த முயற்சி தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டை எந்தவித காலதாமதமும் இன்றி மீண்டும் தமிழகத்தில் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நாடெங்கும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்க செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் இளைஞர்கள் பட்டாளம் முதன்முதலில் ஒன்று சேர்ந்து நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு  ஆதரவு பெருகிக் கொண்டே வரும் நிலையில், பல திரை நட்சத்திரங்கள் போராட்ட களமான சென்னை மெரீனா கடற்கரையில் நேரில் வந்து இளைஞர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயனும் போராட்டம் நடைபெறும் மெரினாவுக்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளதுடன். இளைஞர்களோடு இளைஞராக அவர் போராட்டத்தில் பங்குபெற்றது இளைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரீனாவில் இளைஞர்களிடம் பேசிய ஆர்ஜே பாலாஜி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இதைவிட ஒரு அமைதியான ஒரு போராட்டம் இதுவரை நடந்ததில்லை. ஒரு வன்முறை இல்லை, ஒரு பஸ் உடைப்பு இல்லை, யாரும் குடித்துவிட்டு கலாட்டா செய்யவில்லை. ஒட்டு மொத்த போராட்டக்காரர்களும் தெளிவாக உள்ளனர், என்ன வேணும் என்பதில் தெளிவாக உள்ளனர். நாளை விவசாயிகள் தற்கொலை பிரச்சனை என்றாலும், கல்லூரி கட்டணம் அதிகமாக கேட்டாலும், எந்த பிரச்சனை என்றாலும் இதே கூட்டம்தான் தெருவுக்கு வந்து போராடும். எங்களை இனிமேல் யாரும் ஏமாற்ற முடியாது, ஏமாற்ற முயற்சி செய்தால் தெருவில் இறங்கி போராடுவோம். நான் தமிழன் என்று கூறுவதில் பெருமை அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .