2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிழக்கில் எழுதல்; காலத்தின் தேவை

Administrator   / 2017 ஜனவரி 18 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணியின் இரண்டாவது கட்டம் வரும் சனிக்கிழமை (ஜனவரி 21) மட்டக்களப்பில் நடைபெறவிருக்கின்றது. கல்லடி மற்றும் ஊறணி பகுதிகளிலிருந்து காலை 09.30 மணிக்கு ஆரம்பிக்கும் பேரணி, பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெறும் கூட்டத்துடன் நிறைவுக்கு வரும்.

 தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பிரதான உரையை ஆற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

சரியாக 13 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2004, ஜனவரி 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற ‘பொங்கு தமிழ்’ எழுச்சி நிகழ்வில் ஓர் இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர்.   

 தமிழ்த் தேசியப் போராட்டம், மிகவும் வெற்றிகரமான மனநிலையோடு ஒருங்கிணைத்த இறுதித் தருணம் அது. ஆம்! அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது.   

2000களின் ஆரம்பத்தில் ஆயுதப் போராட்டத்தில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சுக்களின் போது, அதிக வலுவோடு இருந்த தருணம் அது. 2004ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பின்னர் அந்த நிலை முற்றாக மாறியது.  

இப்போது, ஆயுதப் போராட்ட வடிவம் தமிழ் மக்களிடம் இல்லை. அதற்கான முனைப்புக்களும் இல்லை. ஆனால், அரசியல் உரிமைகளுக்காக போராட வேண்டிய பொறுப்பு மட்டும் எஞ்சியிருக்கின்றது. 

அது, 70 ஆண்டுகாலத் தொடர்ச்சி. அந்தத் தொடர்ச்சியை வடிவங்கள், திட்டங்கள், அமைப்புக்கள், தலைமைகள் மாறினாலும் இடைவிடாது தொடரோட்டம் போல ஒவ்வொரு கட்டமாகக் கொண்டு சுமக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கானது.   

இங்கு கட்சி அரசியல், அமைப்புசார் நிலைகள் கடந்து தார்மீகம் ஒன்று இருக்கின்றது. அது, தமிழ்த் தேசியப் போராட்டங்களுக்காக நாம் கொடுத்த விலைகளுக்கான நீதியையும் எங்களின் அடிப்படை உரிமையையும் பெறுவதற்கானது. அதன்போக்கில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணியும் முக்கியமானது.  

‘பொங்கு தமிழ்’ எழுச்சி நிகழ்வு வெற்றி வாதத்தில் தோற்றம் பெற்ற ஒன்று. ஆனால், எழுக தமிழுக்குப் பின்னால் வெற்றி வாதம் இல்லை. ஆனால், பொங்கு தமிழைத் தாண்டிய கடப்பாட்டினைக் கொண்டது.  

ஏனெனில், 2009 களுக்குப் பின்னரான தோல்வி மனநிலையிலிருந்து தமிழ் மக்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முனைப்புக்களில் எழுக தமிழையும் ஒன்றாகக் கொள்ள முடியும்.   

வெற்றி வாதத்திலிருந்து அடுத்த கட்டங்களை நோக்கி நகர்வது இலகுவானது. வெற்றிவாதம் மக்களை ஒருங்கிணைக்கும் பெரும் சக்தி கொண்டது. ஆனால், தோல்வி மனநிலை அவ்வாறானதல்ல. மக்களை சோர்வாக வைத்துக் கொண்டிருப்பது.  

முதலில் அந்தச் சோர்வினைப் போக்க வேண்டுமெனில், ஊட்டங்களை வழங்க வேண்டும். அதன்போக்கிலேயே ‘எழுக தமிழ்’ கவனம் பெறுகின்றது. ‘எழுக தமிழ்’ பேரணி ஊட்டங்களை வழங்கும் கட்டங்களில் ஒன்று.   

ஊட்டங்களை வழங்குவதன் ஊடகவே தமிழ் மக்களைச் சோர்வு நிலையிலிருந்து தெம்பூட்ட முடியும். அதன்மூலமே அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்த முடியும். அதன் மூலமே தோல்வி மனநிலையிலிருந்து எழுந்துவர வைக்க முடியும்.   

ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், தேர்தல் அரசியல் ஊடாகத் தொடர்ந்தும் ஒருங்கிணைந்து வந்திருக்கின்ற தமிழ் மக்கள், செயற்பாட்டு அரசியல் சார்ந்தும் ஒருங்கிணைக்க வேண்டும். அதன்போக்கிலும் ‘எழுக தமிழ்’ கவனம் பெறுகின்றது.  

‘எழுக தமிழ்’ பேரணியை அதன் உண்மையான நோக்கங்களுக்கு அப்பால், குறுகிய நலன்கள் சார்ந்து மாற்றுவதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது. தனித்து யாரையும் உரிமை கொண்டாடவும் அனுமதிக்கவும் கூடாது.   

அதுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியும் எந்தவித தலையீடுகளையும் தேவையற்ற வடிவங்களில் செய்யாது இருக்க வேண்டும்.   

‘எழுக தமிழ்’ பேரணியை உண்மையான மனதோடு நடத்தினாலும், அணுகினாலும் அது முன்னேற்றகரமானது. ஆனால், சிலரின் தனிப்பட்ட ஈகோ ஊடாடல்கள், வேறு வகையான விடயங்களை மேல் நோக்கிக் கொண்டு வருகின்றன.   

அது, மக்களை நோக்கி எதிர்மறையான எண்ணங்களை விதைத்துமிருக்கின்றன. அதனை, நாம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதலாவது ‘எழுக தமிழ்’ பேரணிக்கு முன்னரும் பின்னருமான காட்சிகளில் கண்டிருக்கின்றோம். ஆக, அவற்றைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி, இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகின்றது. முதலாவது, தமிழ்த் தேசியப் போராட்டத்தின் கோரிக்கைகளைத் தொடரோட்டமாகக் கொண்டு ஓட வேண்டிய கட்டத்தின் சார்பிலானது.   

இரண்டாவது, தொடர்ச்சியாக வடக்கினை முன்னிறுத்திய தமிழ்த் தேசியப் போராட்டத்தின் அக முரண்பாடுகளைக் களைந்து சமப்படுத்துவதற்கானது. எப்போதுமே அக முரண்பாடுகளை அதன் தன்மைகள் அறிந்து களைவது, போராடிக் கொண்டிருக்கின்ற சமூகத்துக்கு அவசியமானது.   

அதுவே, அரசியல் பற்றிய உண்மையான உரையாடல்களைத் தொடர்ச்சியாக நடத்திச் செல்லவும் உதவும்.  
 தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் என்பது கிட்டத்தட்ட அல்லது திட்டமிட்டு வடக்குக்குள் (யாழ்ப்பாணத்துக்குள்) சுருக்கப்படும் காட்சிகளை நாம் கடந்த சில ஆண்டுகளாகக் காண்கிறோம்.   

அதனை, இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் திட்டமிட்ட ரீதியில் செய்து கொண்டிருக்க, தமிழ்த் தரப்புக்களும் எந்தவித விழிப்புணர்வுமின்றி உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்க ஆரம்பித்துவிட்டன.  

 தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை என்பது, கிட்டத்தட்ட வடக்கு மக்களின் பிரச்சினை என்று இன்றைக்கு தெற்கினாலும் சர்வதேசத்தினாலும் வியாக்கியானப்படுத்தப்பட்டு வாசிக்கப்படுகின்றது. ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான காலத்தில் இப்படித்தான் இருக்கின்றது.   

அது, கிழக்கிலுள்ள தமிழ் மக்களைத் தமிழ்ப் பாரம்பரிய அடையாளங்களுக்குள் இருந்து அகற்றுவதற்கான முனைப்புக்கள் சார்ந்தவை. அது, பிரித்தாளும் சதியின் போக்கிலுமானது. ஆனால், இவற்றைத் தமிழ்த் தரப்புக்கள் வெற்றிகரமாகக் கடந்து செல்ல வேண்டும்.  

ஆனால், அதற்கான பொறுப்பு என்பது அக முரண்பாடுகளைக் களைவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதற்குத் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் இருக்கும் அனைத்துத் தரப்புக்களின் குரல்களையும் சம அளவில் உள்வாங்கிப் பிரதிபலிக்க வேண்டும்.  

 மாறாக, ஒரு தரப்பின் அல்லது ஒரு பிராந்தியத்தின் குரலை மாத்திரம் முதன்மைப்படுத்துவது என்பது, மற்றைய தரப்பினை ஏமாற்றமடைய வைத்துவிடும். இது, உண்மையில் தமிழ்த் தேசிய அரசியலின் இருப்புக்கே அச்சுறுத்தலானது.  

ஒரு தரப்பு தங்களின் தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக வடக்கினை மாத்திரம் முதன்மைப்படுத்த முயலலாம். ஆனால், அது தமிழ் மக்களின் தாயகத்தினையும் உரிமை கோரலுக்கான பெரும் உரித்தினையும் அகற்றச் செய்யும்.

அதாவது, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் குரலினைப் பிரதிபலிக்காத எந்தவொரு போராட்டமும் வெற்றி பெற முடியாது. ஏனெனில், அது ஒரு வகையில் குறுந்தேசியவாதமாக மாறியிருக்கும்.  

கிழக்கு தமிழ் மக்களின் குரல்கள், அண்மைய நாட்களில் பெரிதாக கவனிக்கப்படவில்லை. அதனைத் தமிழ்த் தரப்புக்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும். மேலோட்டமான உரையாடல்கள் அல்லது பொதுவான காரணங்கள் சார்ந்தே இவை கவனம் பெறுகின்றன.   

மாறாக, கிழக்கு மக்களின் பிராந்தியப் பிரச்சினைகள் குறிப்பாக, அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றிய குரல்களை யாரும் கண்டுகொள்வதில்லை.  

அது, அந்த மக்களையும் ஒரு வித வெறுமையின் பக்கத்தில் தொடர்ச்சியாக நகர்த்தி வந்திருக்கின்றது. அவ்வாறானதொரு நிலையில், கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மூர்க்கத்தோடு எழுந்து வர வேண்டும்.   

அது, பொது எதிரிக்கான செய்தியைச் சொல்வதோடு, அக முரண்பாடுகளை அல்லது அகப் புறக்கணிப்பினை உடைக்கும் வல்லமையைக் கொண்டாத இருக்க வேண்டும்.  

வடக்கோடு ஒப்பிடுகையில், கிழக்கே தமிழர் தாயகப் பகுதிகளை பெருமளவு பறி கொடுத்திருக்கின்றது. பொருளாதார ரீதியிலும் பெரும் முன்னேற்றத்தை நோக்கி வளர வேண்டியிருக்கின்றது. ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்த சமூகமொன்று தன்னுடைய அபிவிருத்தி கட்டங்களைத் தவறவிடுவது இயல்பானது.   

ஆனால், மட்டக்களப்பும் வன்னியும் சந்தித்து நிற்கின்ற ஏழ்மையும் அபிவிருத்திப் பின்னடைவும் தெளிவான திட்டமிட்டலோடு மாற்றப்பட வேண்டியவை. அதற்கான அழுத்தங்களை உள்ளக ரீதியில் வழங்க வேண்டியதும் அவசியமானது.   

அது, உள்ளூர் அரசியல் தலைமைகளில் இருந்து, அமைப்புக்கள், அரசாங்கம், சர்வதேசம், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வரை நீள வேண்டும். அதற்கான குரலைப் பதிவு செய்யும் நோக்கிலும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தங்களை எழுக தமிழின் பின்னால் ஒருங்கிணைத்துக் கொண்டு அழுத்தங்களை வழங்க வேண்டும்.  

வடக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்பிட்டவான மக்களை ஒருங்கிணைத்த போராட்டங்கள் அல்லது அது சார் வடிவங்கள், கடந்த ஆண்டுகளில் இடம்பெற்றிருக்கின்றன.

ஆனால், கிழக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்ட வடிவங்கள் சில ஆண்டுகளாகவே நடைபெறவில்லை. அப்படியான நிலையில் எழுக தமிழின் பக்கத்தில் ஒருங்கிணைவது என்பது, எதிர்காலத்திலும் போராட்ட வடிவங்களை கட்டமைக்கவும் தக்கவைக்கவும் உதவும். அதனை மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ பதிவு செய்ய வேண்டும். அதனைக் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் நிரூபிப்பார்கள் என்று நம்பலாம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X