2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சல்லிக்கட்டை தடைசெய்தமை துர்ப்பாக்கியம்’

Princiya Dixci   / 2017 ஜனவரி 24 , மு.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சல்லிக்கட்டுப் போட்டிகள், இந்தியாவில் பன்நெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தபோதும், கடந்த ஒரு சில ஆண்டுகளாக இப்போட்டிகளைத் தடுத்து நிறுத்த முயல்வதும் அதற்கு எதிராகப் பல அணிகள் போர்க்கொடி தூக்குவதும் துர்ப்பாக்கிய நிலைமையாகும்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

வடக்கு விவசாய அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்குரிய சாதனை விவசாயிகளைக் கௌரவிக்கும் உழவர் பெருவிழா, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,“தைப்பொங்கல் விழாவுடன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளாக சல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவல், உறியடித்தல், பட்டம் ஏற்றும் போட்டி எனப் பல்வேறு போட்டிகளிலும் மக்கள் ஈடுபடுகின்றனர். சல்லிக்கட்டுப் போட்டிக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டு, சிறந்த காளைகள் கொண்டுவரப்பட்டு, அக்காளைகளை அடக்கும் போட்டி முன்னெடுக்கப்படுகின்றது.  

இப்போட்டி தொடர்பில் இரு சாராரும் முன்வைக்கும் விடயங்களில் பல உண்மைகள் காணப்படும் போதும், தொன்றுதொட்டு இடம்பெற்றுவந்த பாரம்பரிய விளையாட்டுக் கலைகளை திடீரென்று மாற்றுவது சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும். அதுவே இன்று தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது.  

பொறுமையுடன் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் இப்பிரச்சினையை அணுகி உரிய தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும்” என்றார்.  

“மேலும், எமது இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதுடன், நவீன தொழில்நுட்ப அறிவுடன் விவசாயத்தில் தன்னிறைவைக் காண அவர்கள் முன்வரவேண்டும். தமிழ் மக்கள் விவசாயத்தில் கொண்டுள்ள நாட்டத்தையும் விவசாயத்தின் மூலம் அவர்கள் பெற்றுக்கொள்ளும் நன்மைகளையும் கண்ணுற்ற பலர், அம்மக்களின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவதில் குறியாக இருக்கின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. இவ்வாறு கையகப்படுத்தியுள்ளவர்கள் தாம் குடியேறியிருக்கும் காணிகளை மக்களிடம் திரும்பக் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.  

எது எவ்வாறிருப்பினும், எமது மக்களின் விவசாய நிலங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். எமது தரிசு நிலங்களில் சிறு பகுதி கூட, விவசாய முயற்சிகளுக்கு பயன்படுத்தாது எஞ்சியிருக்கக் கூடாது. ஏதாவது காரணங்களால் சில நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் தொடர முடியாத விடத்து, அக்காணிகளை தற்காலிகமாகவேனும் விவசாய அமைச்சு பொறுப்பேற்று அந்நிலங்களில் தோதான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எமது உற்பத்திகள் அதிகரிக்க முடியும்.  

வெளிநாட்டிலுள்ள நிலச் சொந்தக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து அனலைதீவு போன்ற இடங்களில் இருக்கும் தரிசு நிலங்கள் எமது விவசாய அமைச்சால் பொறுப்பேற்கப்பட்டு, பயிர்ச் செய்கைகளில் ஈடுபட வேண்டும்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .