2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 24 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், வா.கிருஸ்ணா, பைஷல் இஸ்மயில், எம்.எஸ்.எம்.ஹனீபா, எப்.முபாரக், கே.எல்.ரி.யுதாஜித் துசா, எஸ் .எல். அப்துல் அஸீஸ்,எம்.எல்.எஸ்.டீன்

கிழக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்; தெரிவிக்கின்றன.

அம்பாறை

அம்பாறையில் பெய்து வரும் அடை மழையால்  பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், கல்முனை, நிந்தவூர் உள்ளிட்ட பிரதேசங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று (24) காலை 8 மணிவரையான கடந்த  24 மணித்தியாலங்களில் ஆகக்கூடுதலாக அக்கரைப்பற்றில் 312.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.  சாகாமத்தில் 180.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் அம்பாறையில் 165.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பொத்துவிலில் 138.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும்  பதிவாகியுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய உத்தியோகஸ்தர் எம்.ஐ.எம்.நஹீம் தெரிவித்தார்.

மேலும் ஆலையவேம்பு கோட்டத்துக்கு உட்பட்ட  பெருநாவலர் பாடசாலை, அன்னை சாரதா பாடசாலை,  விவேகானந்தா பாடசாலை ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக அப்பாடசாலைகள் இன்று மூடப்பட்டதாக அக்கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் தெரிவித்தார்.

மழையைத் தொடர்ந்து கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால், தொழில் நடவடிக்கைக்காக  மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என ஒலுவில் மீனவர் சங்கத்; தலைவர் ஐ.எல்.மன்சூர் தெரிவித்தார்.
ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் சுமார் 500 மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை எனவும் அவர் கூறினார்.  

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால், தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்று (24) காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில்  86 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.
மேலும், மழை காரணமாக மட்டக்களப்பிலுள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்தது.

திருகோணமலை

திருகோணமலையில்  தொடர்ச்சியாக  மழை பெய்து  வருவதால் தாழ்நிலப் பகுதிகளிலும் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கந்தளாய், கிண்ணியா, புல்மோட்டை, மூதூர், தோப்பூர் போன்ற பிரதேசங்களில் பரவலாக மழை பெய்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் 92.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருகோணமலை வானிலை அவதான நிலையத்; தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .