2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாற்றம் காண வேண்டிய தமிழகத்தின் ‘பொங்குதமிழ்’

Administrator   / 2017 ஜனவரி 24 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ப. தெய்வீகன்

தமிழகத்தில் சல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையுத்தரவினால் ஏற்பட்டுள்ள மாணவர் பேரெழுச்சி, இந்த ஆண்டின் மிகப்பெரிய செய்திகளுடன் ஊடகங்களை அலற வைத்திருக்கிறது.   

வெறுமனே அரசியல் செய்திகளாலும் சினிமா பிரமாண்டங்களினாலும் தன் மீதான கவனத்தையும் சுவாரஸ்யத்தையும் பேணிவந்த தமிழகம், முதல் முறையாக மாணவர்களின் பேரெழுச்சி என்ற புரட்சிமொழியின் ஊடாக உலகையே வியந்து பார்க்க வைத்திருக்கிறது.   

மக்கள் கட்டமைப்பின் பிரதான இயங்கு சக்திகளில் ஒன்றான மாணவர்களின் போராட்டம் என்பது எப்போதும் உணர்வுபூர்வமான ஒரு புள்ளியிலிருந்துதான் தனது கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கம்.   

ஆக, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சல்லிக்கட்டுக்கு எதிரான தடையின் மீதான அறப்போராட்டம் என்பதும் அதுபோன்ற புள்ளியில்தான் வெடித்துக் கிளம்பியது என்பது அனைவரும் அறிந்ததே.   

ஆனால், இந்தப் போராட்டம் தனியே சல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் மட்டும்தானா? இந்தப் போராட்டம் பயணிக்கின்ற பாதையின் உறுதித்தன்மை என்ன? இதன் இயங்குவலு எதிர்காலத்தில் எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படப்போகிறது என்பவற்றை ஆராய்வதுதான் இந்தப் பத்தியின் நோக்கம்.   

முதலில் குறிப்பிட்டதுபோல தமிழகம் என்பது எப்போதும் செய்திகளின் புதையல். ஓவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சர்சைக்குரிய விடயம் ஊடகங்களில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கும். அதை அள்ளித்தின்றுவிடுவதுபோல இன்னொரு பிரச்சினை ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொள்ளும்போது பழைய பிரச்சினை மக்கள் மனங்களிலிருந்து மறைந்துவிடும். 

இப்படியே சங்கிலித்தொடரான பிரச்சினைகளின் நடுவால் அரசியல்வாதிகள் மிகச்சாணக்கியத்துடன் தங்களது காரியங்களை முன்னகர்த்திக் கொண்டு செல்லும்போது, மக்கள் எப்போதும் அப்பாவிகளாய் அந்தப் பிரச்சினைகள் எவற்றுக்குமே தீர்வுகள் அற்றவர்களாக, மௌனித்துப் போய்விடுவார்கள்.   

ஆனால், தொடர்ச்சியான இந்தப் பாரம்பரியத்தினால் உள்ளுக்குள் வெகுண்டு கொண்டிருந்த இளைய சமுதாயம் அண்மையில் மோடி அரசாங்கம் கொண்டுவந்த ரூபாய் நோட்டுகளுக்கு எதிரான தடையினால் குரல் கொடுக்க ஆரம்பித்தது.   
நாடளாவிய ரீதியில் இந்த எதிர்ப்பு, பொதுவாகக் காணப்பட்டாலும் தேசிய கட்சிகளின் செல்வாக்குகள் அறவே இல்லாத தமிழகத்தில் சற்று அதிகமாகவே இருந்தது.   

இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில், ஜெயலலிதாவின் இறப்பும் அதனைச் சூழ்ந்திருந்த மர்மமும் அதனைத் தொடர்ந்து சசிகலா குழுவினர் தமிழகத்தின் ஆட்சியை மெல்லமெல்லத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் தமிழகம் என்ற மாநிலம் தேசிய கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுமோ என்ற அச்சத்தை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழக இளைஞர்கள் விழித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.   

இந்த மாதிரியான ஒரு நிலையில்,வெடித்துக் கிளம்புவதற்கு ஒரு தீப்பொறியாகக் கிடைத்த விடயம்தான் சல்லிக்கட்டுத் தடை. மத்திய அரசாங்கத்தின் மீதான தங்களது சகலவிதமான எதிர்ப்புக்களையும் இதுவரை காலமும் அடக்கி வைத்திருந்த ஒட்டுமொத்தக் கோபத்தையும் வெளிக்காட்டுவதற்கு சல்லிக்கட்டு விவகாரம் வசதியான ஒரு காரணமாக அமைந்தது.   

அந்தப்புள்ளியில் ஆரம்பித்த நெருப்புத்தான் இன்று உலகெங்கும் பற்றியெரிகிறது. சமூக வலைத்தளங்களின் உச்சப்பயன்பாடு எனப்படுவது இந்தப் போராட்டத்தின் அச்சாணியாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.  

இந்த ஆர்ப்பாட்டங்களில் காணக்கூடிய மிகப்பெரிய சாதகமான விடயம் யாதெனில், 2008 - 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உக்கிரமடைந்திருந்த ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான புலம்பெயர்ந்த மக்களின் போராட்டத்துடன், தமிழர்களுக்கு வலுவான புலம்பெயர்ந்த சக்தி, ஈழத்தமிழர்கள் மட்டும்தான் என்ற உண்மை, உலக நாடுகள் எங்கிலும் ஆழமாகப் பதிவாகியிருந்தது.   

ஆனால், தற்போது தமிழக மக்களுக்கு ஆதரவாக, உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்கள் தமிழக மக்களுக்கும் செறிவான புலம்பெயர்ந்த சக்தி உண்டென்பதையும் அந்தச் சக்தி ஈழத்தமிழர்களின் புலம்பெயர்ந்த தரப்புக்களுடன் இணைந்து செயற்படக்கூடியது என்ற வலுவான செய்தியையும் பதிவு செய்திருக்கிறது.   

இது உண்மையிலே மிகவும் சாதகமாக நோக்கப்படவேண்டிய ஒரு விடயம். ஏனெனில், தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு விடயத்தை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கும் எந்தச் சக்தியும் உலகெங்கும் பரந்துவாழும் இந்தப் புலம்பெயர்ந்த மக்கள் தரப்புக்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்ற ஓர் அச்சத்தை தற்போது நடைபெறுகின்ற போராட்டம் மிகப்பெரிய செய்தியாக சொல்லியிருக்கிறது.   

ஆனால், இதற்கு அப்பால் இந்தப் போராட்டத்தினால் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் அனைத்தும் இப்போதைக்கு தளம்பல் நிலையிலேயே உள்ளன. அறிவார்ந்த நிலையிலிருந்து சிந்தித்தால், இதுதான் யதார்த்தம். இதனால்தான், இந்தப் போராட்டத்தை இலகுவாகக் கலைப்பதற்குக்கூட நேற்றைய தினம் பொலிஸாருக்கு முடிந்தது.   

அதற்கான காரணங்களை நோக்கினால், தற்போது நடைபெற்றுவரும் மாணவர்களது போராட்டம் அனைத்துத் தரப்பிடமிருந்தும் வலுக்கட்டாயமான ஓர் ஆதரவைக் கோரி நிற்கிறது.  

போராட்டத்துக்கு ஆதரவற்றவர்கள் மற்றும் மௌனமாக இருப்பவர்கள் அனைவரையும் தமிழினத்தின் ஒட்டுமொத்த துரோகிகளாக முத்திரை குத்துகிறது. சொல்லப்போனால், இவர்களது இந்தப் போராட்டம் உணர்வுநிலைப் போராட்டம் என்ற புள்ளியிலிருந்து ஓர் அடிகூட முன்னே நகராமல் ஒரே இடத்திலேயே தேங்கி நிற்கிறது.   

அடுத்த கட்டத்துக்கு எப்படி எடுத்து செல்வது? யார் யாரையெல்லாம் அதில் இணைத்துக்கொள்வது போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதில், இந்தப் போராட்டங்களை மேற்கொள்பவர்கள் மிகவும் குழம்பிப் போயிருக்கிறார்கள்.   

சல்லிக்கட்டு என்ற விடயத்தைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு இந்தப் போராட்டத்தை முன்னகர்த்த முடியாது.சல்லிக்கட்டு என்பது பண்பாட்டு ரீதியாகத் தமிழர்கள் இழக்கமுடியாத விடயம் என்றும் பன்னாட்டு கம்பனிகளின் அரசியலுக்குள் இழந்துவிட முடியாதது என்றும் இந்தப் போராட்டக்காரர்கள் வலியுறுத்திவரும் கருத்து மிகப்பெரிய துவாரம் நிறைந்த வாதம் ஆகும்.   

தமிழர்கள் இன்று இழந்துவிட்ட பாரம்பரிய முறைகள் எத்தனையோ எத்தனையோ. அதேபோல பன்னாட்டு நிறுவனங்களிடம் சரணாகதி அடைந்துகிடக்கும் துறைகளும் எத்தனையோ எத்தனையோ.

அவை எல்லாவற்றையும் வசதியாக மறைத்துக்கொண்டு சல்லிக்கட்டு என்ற விடயத்தை மாத்திரம் பிரதான பேசுபோருளாக, பாரம்பரிய விளையாட்டாக முன்வைத்துத் தொடர்ச்சியாகப் போராடுவதும் அதற்காக நாட்டின் நீதித்துறைக்கு சவால் விடுவதும் அடிப்படையே இல்லாதது; சிறுபிள்ளைத்தனமானது.   

இந்தப் போராட்டத்தின் ஊடாக, மாநிலத்தில் வெளிநாட்டுப் பொருட்களைத் தடை செய்யப்போவதாகவும் தமிழரின் அடையாளங்களைக் காப்பாற்றப்போவதாகவும் ‘தூயதேசம்’ ஒன்றைக் கட்டியெழுப்பப் போவதாகவும் இந்தப் போராட்டக்காரர்கள் உறுதிபூண்டால், அது நல்ல விடயம்தான். 

ஆனால், அது நடைமுறை ரீதியாக மிக மிகக் கடினமான ஒரு விடயம். கிட்டத்தட்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரித்தெடுக்கப்பட்டதுபோல அல்லது அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியானதுபோல இமாலய மாற்றமொன்றின் ஊடாகச் சாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த மாற்றத்துக்கு ஒட்டுமொத்த தமிழகமும் திருவுளம் கொள்ளவேண்டும்.   

ஆனால், அதற்குத் தமிழகம் இன்றுவரை தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது நடைபெற்றுவரும் மாணவர்களது போராட்டம் இன்னமும் மக்களது போராட்டமாக மாற்றமடையவில்லை. அது, இன்றுவரைக்கும் நடைபெறுவதற்கான சாத்தியத்தையும் காணவில்லை. 

தமிழகத்தில் பெருவாரியான மக்கள் தொடர்ந்தும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்துகொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களது போராட்டத்தை ஒரு கொண்டாட்டமாக பார்க்கிறார்கள். நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டமானது, தாங்கள் வாழுகின்ற தேசத்தின் எதிர்காலம் பற்றியது என்ற விழிப்புணர்வினை போதியளவு உள்வாங்கியவர்களாகத் தெரியவில்லை.

குறிப்பாகச் சொல்லப்போனால், ஒரு காலத்தில் ஈழவிடுதலைப்போராட்டம் ஆயுத வழியில் ஆரம்பிக்கப்பட்டபோது அதனை வெளியிலிருந்து ஆதரித்துக்கொண்டு பெரும்பான்மையான ஈழ மக்கள் எந்தப் பங்களிப்பும் செய்துகொள்ளாமல் எவ்வாறு வசதியாக இருந்துகொண்டார்களோ, அதே மாதிரியான நிலையே இன்று தமிழகத்தில் காணப்படுகிறது.   

இந்தப் போராட்டத்தை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்துக்கொண்டு, வெளியில் நிற்பவர்களும் தங்களது தொழிற்துறைக்கு இந்த மாணவர்களின் எதிர்ப்பு, எதிர்காலத்தில் ஒரு தடையாக அமைந்துவிடக்கூடாது என்ற கரிசனையின் வெளிப்பாடாகவே காணப்படுகிறது.    

 தற்போதுள்ள திராவிட அரசியல் கட்சிகளால், தாங்கள் நினைக்கும் மாற்றம் எதுவும் நடைபெறப்போவதில்லை என்று இந்த மாணவர்கள் கருதினால், அதனை முறியடிப்பதற்குத் தாங்கள் களத்தில் குதித்து, இந்த அரசியலைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளைக் கையிலெடுப்பதாகவும் தெரியவில்லை.   

“நாங்கள் நாங்களாகவே இருந்து கொண்டு உங்களை எதிர்ப்போம். நீங்கள் நீங்களாக இருந்துகொண்டிராமல் இறங்கிவரவேண்டும்” என்று ஆணையிடுவதானது, மிகப்பெரிய ஆளும் தரப்புகளையும் ஆக்கிரமிப்பு சக்திகளையும் அடக்குமுறையாளர்களையும் எதிர்கொள்வதற்கான அணுகுமுறை அல்ல.

அவர்களது பாதையில் சென்று மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வழிகளில் இறங்கவேண்டும். அந்த வழியில் இடர்படும் அனைத்துத் தடைகளையும் தந்திரமாக சமாளிக்கவேண்டும்.  

மெரினாவில் பெருகியுள்ள மக்கள் கூட்டத்தைப் பார்த்து நண்பர் ஒருவர், “இவ்வளவு மக்களும் கடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள்” என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கான பதில்தான் தற்போது இடம்பெற்றுவரும் போராட்டத்தினைச் சீர்திருத்திக் கொண்டு, செழுமைபெறச் செய்வதற்கு உரிய படிக்கல்லாக அமையும்.   

மற்றும்படி, தடியடி நடத்தி மெரினாவிலிருந்து மக்களைக் கலைத்திருப்பதன் ஊடாகவும் போராட்டக்காரர்களை விரட்டிக்கொண்டதாலும் கடந்த எட்டு நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவடைந்துவிட்டதாக எவரும் கருதிவிடமுடியாது.

போராட்டக்களங்களிலிருந்து போராட்டக்காரர்களை அகற்றிவிட்டால் போராட்டத்தை நிறுத்திவிடலாம் என்று நினைப்பது தலையிடிக்கு மருந்துவேண்டி தலையணையை மாற்றுவது போன்றது.

இந்த உணர்வினை மக்கள் உணர்வாகவும் அறிவார்ந்த தளத்தில் சிந்திக்கும் புரட்சிப்பொருளாகவும் மாற்றிக்கொண்டு, தங்களது அனைத்து அத்தியாவசிய அபிலாசைகளுக்குமான எதிர்ப்பாக மாற்றும்போது, தற்போது போராட்டக்காரர்கள் எதிர்பார்க்கும் அந்தத் தமிழகத்தின் வசந்தம் மலரும். அது ஆசியாவுக்கான வசந்தமாகவும் இருக்கும்.  

அதுவரை இந்தப் போராட்டத்துக்கு விஜயின் அறிக்கையும் சிம்புவும் பேச்சும் மாத்திரம் போதுமானதாகவே இருக்கும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X