2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழில் 8ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சி

Princiya Dixci   / 2017 ஜனவரி 24 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த்

யாழ்ப்பாண வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் யாழில்  இடம்பெறும் சர்வதேசக் கண்காட்சி, இம்முறை 8ஆவது ஆண்டாகவும், எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, அச்சம்மேளத்தின் தலைவர் வி.கே.விக்னேஸ் தெரிவித்தார்.

யாழ். வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த 8ஆவது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை எம்முடன் இணைந்து இலங்கை கண்காட்சி மற்றும் ஒன்றுகூடல் சேவை தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இக்கண்காட்சியானது, யாழ். மாநகர சபை மைதானத்தில் இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாவுள்ள நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளவுள்ளார். ஜனாதிபதி மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கான பதில் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் கலந்துகொண்டால் எமக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த கண்காட்சி நிகழ்வானது, 'வடக்குக்கான நுழைவாயில்' என அழைக்கப்படுகின்றது. இங்கு வட பகுதியின் உள்ளூர் உற்பத்திகள், தென்னிலங்கை வர்த்தக நிறுவனங்கள், இந்திய வர்த்தக நிலையங்கள், கல்வி என நான்கு பிரிவுகளைக் கொண்டு 300க்கும் மேற்பட்ட காண்காட்சி கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் இம்முறை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இம்முறை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை மக்களை கவர்வதற்காக சாகச நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் என்பவற்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

நுழைவுக் கட்டணமாக 30 ரூபாய் சிட்டை வழங்கப்படுவதுடன், சீருடையுடன் பங்குபற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக நுழைவு அனுமதி வழங்கப்படும்.

வடக்கில் முதலீடு தொடர்பான விடயங்களை பரிசீலிப்பதற்கு 75 பேர் கொண்ட இந்திய வர்த்தகக் குழுவொன்று, இங்கு விசேடமாகப் பங்குபற்றவுள்ளது. இக்குழு, வடக்கின் உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் எதிர்வரும் 27ஆம் திகதி யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் மாலை 4 மணிக்கு சந்திப்பொன்றையும் மேற்கொள்ளவுள்ளது. இதன் மூலம் உள்ளூர் வர்த்தகர்கள் நன்மையடைய முடியும் என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .