2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'திட்டமிடல் பணிகளை துரிதப்படுத்துங்கள்'

Princiya Dixci   / 2017 ஜனவரி 24 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மற்றும் சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான திட்டமிடல் பணிகளை துரிதப்படுத்துமாறு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அமைச்சின் கேட்போர்கூடத்தில், திங்கட்கிழமை  நடைபெற்ற கல்முனை மற்றும் சம்மாந்துறை அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தின்போதே, அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டமிடலை மேற்கொள்வதற்காக, நகர திட்டமிடல் அமைச்சுக்கு, 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கீழ், 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி கல்முனை மற்றும் சம்மாந்துறை ஒருங்கிணைந்த பெருநகர அபிவிருத்தி தொடர்பான கருத்திட்டத்தை, மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு, இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இந்த அபிவிருத்தித் திட்டங்களை ஆராய்வதற்கு, அரசாங்க அதிபர் அல்லது அவரது பிரதிநிதி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, கல்முனை மற்றும் சம்மாந்துறை பாரிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டத்துக்குள் உள்ளடங்கும் முக்கியமான அணைக்கட்டு பாதையை செப்பனிட்டு நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் ஏற்கெனவே அங்கிகாரம் அளிக்கப்பட்ட மாவடிப்பள்ளி - துறைநீலாவணை வரையான வீதியை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஒரு வழிப்பாதையாக அமைக்கப்படும். இவ்வீதி கரைவாகு வட்டை, இறைவெளி கண்டம் ஊடாக நற்பிட்டிமுனை தமிழ் பகுதியை ஊடறுத்து துரைவேந்திர மேடு ஊடாக பெரிய நீலாவணையை வந்தடையும்.

அபிவிருத்தி திட்டம் உள்ளடங்கும் பிரதேசத்தில் தண்டவாயங்கள் அமைக்கப்படும் பட்சத்தில், அதனையும் கருத்திற்கொண்டு அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அபிவிருத்தி திட்டத்துக்காக 800 ஏக்கர் பரப்பளவிலான காணிகளை சுவீகரிக்கவேண்டியுள்ளது. இதன் முதற்கட்டமாக 200 ஏக்கர் காணிகளை தற்போது சுவீகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த காணி சுவீகரிப்பின்போது ஏற்படும் பிரச்சினைகளை கையாள்வதற்காக கமநல சேவை அதிகாரிகள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலளார்கள், நில அளவியல் திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்கிய அதிகாரிகள் குழுவொன்றை அமைப்பதற்கும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், பெரிய நீலாவணை தொடக்கம் காரைதீவு வரையான கடற்கரை வீதியை செப்பனிடுவதற்கும், கடற்கரை பிரதேசத்தில் பீச் பார்க் அமைப்பதற்கும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி திட்டத்துக்கு 45 மில்லியன் ரூபாய் செலவில் 500 மீற்றர் வரை கருங்கல் சல்லடை வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதன் எஞ்சியுள்ள வேலைகளை இயன்றவரை துரிதமாக பூர்த்திசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், காணி மீள்நிரப்பு அபிவிருத்தி கூட்டுத்தாபன அதிகாரிகள் உள்ளடங்கி குழுவொன்று குறித்த பிரதேசங்களில் ஒரு வாரத்துக்குள் விஜயம் செய்து, நிலைமையை நேரில் பார்வையிட்டு அறிக்கையொன்றை தயாரிக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .