எளியவர்களைத் தண்டித்தல்
27-01-2017 11:19 AM
Comments - 0       Views - 18

எனது நாட்டுச் சட்டம்  
மிகவும் வலியது  
அதனால்தான்  
வலியவர்களைத் தண்டிக்க முடியாமல்  
தினமும் தினறிப் போகிறது  எனது நாட்டுச் சட்டம்  
ஓர் இரைகவ்வி  
எளியவர்களைத் தேடித் தேடி  
வேட்டையாடும் வல்லமை  
அதற்கேயுரிய தனித்துவம்  
பணத்துக்குத்  தலைவணங்கி  
பிணத்தைத் தூக்கில் போட்டு  
வசதிகளை வாரி வழங்கி  
சல்யூட் அடித்தே நிர்வாணப்படும்  
அதிகாரிகளால் காக்கப்படுகிறது  
சட்டத்தின் முன்எல்லாமும் சமம்  
யாரோ ஒரு மடையனின் எதிர்பார்ப்பு  
நீதிக்குக் கண்கட்டப்படவில்லை  
எளியவர்கள் தெரியாதபடி  
குருடாக்கப்பட்டிருக்கிறது  
தேச விரோதிகளும் சமூக விரோதிகளும்  
நீதிமன்றங்களால்தான்   
உருவாக்கப்படுகிறார்கள்.  
கள்வனைக் கொள்ளைக்காரனாக  
இலவசமாகக் கற்பித்து வளர்க்கும்  
அரச கல்விக் கூடம்  
சிறைச்சாலை  
பல வருடங்கள் சிறைப்பட்ட  
ஞானிகளால்  
கைதிகள் பட்டைதீட்டப்பட  
உணவும் உறையுளும் கூட இலவசம்  
தனியாகச் சிறைப்பட்டு  
கூட்டத்துடன் வெளியேறும் விந்தை  
யாருக்கும் கவலையில்லை  
எதைப்பற்றியும் சிந்தனையில்லை  
அதிகாரிகளுக்குக் கிடைத்தவரை லாபம்  
எளியவர்களைத் தண்டித்தல் அத்தனை  
எளிது
எளியவன் பின்னொருநாளில்
விடும்
சவால்  மிகவும் வலியது  
எதிர்கொள்ளமுடியாது  
சட்டம் தோற்றுத்தான் போகிறது  
எல்லாம் அடிபணிந்துபோக  
அவன் வலியவனாகி  
எலும்புத் துண்டுவீசத் தயாராக
இருப்பான்  
வாசற்படியில்  
காக்கிச் சட்டையுடன்   
நாய்கள் காத்துக் கிடக்கும்  
முன்னொருநாளில்   
விலங்கிட்டு இழுத்துச்
சென்றவீரவேங்கைகள்   
ஒடிந்துவிடுமளவுக்குமடிந்துநிற்பர்  
எளியவனைத் தண்டித்தல்  
அத்தனைஅதிர்வுமிக்கது  
இன்னுமின்னும் எனதுதேசம்  
பின்னோக்கித்தான் ஓடுகிறது  
தீவிரவாதத்தைத் தோற்கடித்த
இறுமாப்புடன்  
நாளைகளை வெற்றிகொள்வதாய்  
கொள்கைப் பிரகடனம் வேறு  
நிதிதீர்மானிக்கும் நீதியுடன்  
பணம் தின்னும் அவாவுடன்  
கறுப்புஅங்கிப் பேய்கள் வேறு  
பல்லாயிரம் பேர் காத்திருக்கிறார்கள்  
ஒன்றில் தண்டனைபெற  
அன்றில் தடுப்புக் காவலுக்குச் செல்ல.

"எளியவர்களைத் தண்டித்தல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty