2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொடரைக் கைப்பற்றியது இந்தியா

Shanmugan Murugavel   / 2017 பெப்ரவரி 01 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

முதலிரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வென்றிருந்த நிலையில், பெங்களூரில், இன்று (01) இடம்பெற்ற தீர்க்கமான மூன்றாவது போட்டியில், 75 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி, 2-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஒயின் மோர்கன், இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். இந்திய அணி சார்பாக, றிஷாப் பண்ட் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைக் குவித்தது.

இந்திய அணியின் தலைவர் விராத் கோலி, அணியின் ஓட்ட எண்ணிக்கை நான்கு ஆக இருக்கும்போதே ஆட்டமிழந்தபோதும், இந்திய அணியின் இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுலும் சுரேஷ் ரெய்னாவும் 61 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரெய்னாவும் மகேந்திர சிங் டோணியும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்ததுடன், நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த டோணியும் யுவ்ராஜ் சிங்கும் 57 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர். இந்திய அணியின் இனிங்ஸின் 18ஆவது ஓவரை கிறிஸ் ஜோர்டான் வீசியிருந்த நிலையில், மூன்று, 6 ஓட்டங்கள், ஒரு 4 ஓட்டங்கள் உள்ளடங்கலாக, 23 ஓட்டங்களை அந்த ஓவரில் யுவ்ராஜ் சிங் பெற்றிருந்தார்.

துடுப்பாட்டத்தில், இந்திய அணி சார்பாக, சுரேஷ் ரெய்னா 63(45), மகேந்திர சிங் டோணி 56(36), யுவ்ராஜ் சிங் 27(10), லோகேஷ் ராகுல் 22(18) ஓட்டங்களைப் பெற்றனர். இதில், தனது 76ஆவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் விளையாடிய டோணி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதத்தைப் பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில், இங்கிலாந்து அணி சார்பாக, தைமல் மில்ஸ், பென் ஸ்டோக்ஸ், லியாம் பிளங்கெட், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு, 203 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணியின் இரண்டாவது விக்கெட்டுக்காகவும், மூன்றாவது விக்கெட்டுக்காகவும், முறையே 47, 64 ஓட்டங்களைப் பகிரப்பட்டபோதும், இறுதி எட்டு விக்கெட்டுக்களையும் எட்டு ஓட்டங்களுக்கு, 18 பந்துகளில் இழந்திருந்தது.

துடுப்பாட்டத்தில், இங்கிலாந்து அணி சார்பாக, ஜோ றூட் 42(37), ஒயின் மோர்கன் 40(21), ஜேசன் றோய் 32(23) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், இந்திய அணி சார்பாக, யுஸ்வேந்திர சஹால், நான்கு ஓவர்களில், 25 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், மூன்றாவது சிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும். சஹால் தவிர, ஜஸ்பிரிட் பும்ரா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, அமித் மிஷ்ரா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் சஹால் தெரிவானார்.

அந்தவகையில், டெஸ்ட் தொடரில், 4-0 என்ற ரீதியில் தோற்ற இங்கிலாந்து, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 2-1 என்ற ரீதியில் தோற்று, தற்போது இருபதுக்கு-20 சர்வதேச போட்டித் தொடரிலும் தோற்று, எல்லா வகையான தொடரிலும் தோற்று வெற்றுக்கையுடன் இந்தியாவை விட்டு இங்கிலாந்து செல்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .