2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியா எதிர் இங்கிலாந்து இ-20 ச.போ.தொ மீள்பார்வை

Shanmugan Murugavel   / 2017 பெப்ரவரி 04 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச.விமல்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேச போட்டித் தொடர், இந்திய அணிக்கு வெற்றியாக அமைந்தது. தோல்வியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மிகவும் சிறப்பாக இங்கிலாந்து அணி விளையாடியது, இருபதுக்கு-20 சர்வதேச போட்டிகளில் அதிக விறுவிறுப்பைத் தரும் என்று எதிர்பார்த்த போதும் அந்த தொடரளவுக்கு, இந்த இருபதுக்கு-20 சர்வதேச போட்டித் தொடர் விறுவிறுப்பை தரவில்லை. இங்கிலாந்து அணி முதற் போட்டியில் இலகுவான வெற்றியையும், இறுதிப் போட்டியில் இந்தியா அணி இலகுவான வெற்றியையும் பெற்றுக்கொண்டன. இரண்டாவது போட்டி மிகுந்த விறுவிவிறுப்பை தந்தது. இந்தியா அணி 5 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இருபதுக்கு-20 சர்வதேச போட்டித் தொடரிலும்  வெற்றிபெற்றதன் மூலம் முழுமையாக தலைமைப் பொறுப்பையேற்று, மூன்று வித தொடர்களையும் விராத் கோலி வெற்றிபெற்று வெற்றிகரமான தலைவராக தன்னை வெளிக்காட்டியுள்ளார். ஆனால் வெளிநாட்டுத் தொடர்களையும் வெற்றி பெறுவதன் மூலமாகவே அவர் தன்னை நிரூபித்துக்காட்ட வேண்டும். இந்த தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் வாய்ப்புகளை முழுமையாகவே கொண்டிருந்தது. இரண்டாவது போட்டி முழுமையாக இங்கிலாந்து அணிக்கான வெற்றி வாய்ப்புகளை கொண்டிருந்தது. இந்திய அணியின் இறுதி நேர இறுக்கமான பந்துவீச்சு, நடுவரின் பிழையான தீர்ப்பு, நல்ல பந்துவீச்சு மாற்றங்கள் என்பன இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தன. விராத் கோலி தலைவராக பொறுப்பேற்றிருந்தாலும் கூட களத்தடுப்பு வியூகங்கள், சில பந்துவீச்சு மாற்றங்கள் என்பனவற்றில் தோனி தலையிட்டதும் அணியாக எல்லோரும் சேர்ந்து செயற்பட்ட விதமும் இந்தியா அணி முழுமையாக ஒற்றுமையான அணியாக செயற்படுகின்றது என்பதனை வெளிக்காட்டியது.

இங்கிலாந்து அணி இந்தளவுக்கு இந்திய ஆடுகளங்களில் விளையாடியது மிகச்சிறப்பானது. இங்கிலாந்து அணி பலமான அணியாக மாறியுள்ளது. இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக ஆசிய ஆடுகளங்களில் போட்டிகளில் பங்குபற்றினால் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் ஆசிய அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நல்ல அதிரடி வீரர்கள், சிறந்த பந்துவீச்சு என சிறப்பான அணியாக தென்படுகின்றனர். இரு அணிவுகளுக்குமிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் இங்கிலாந்து அணி பலமாகவே இருந்துள்ளது. முதற் தடவையாக இந்திய அணி இங்கிலாந்து அணியை பலமாக வெற்றிகொண்டுள்ளது.

இந்தத் தொடர் முடிவின் மூலம் தரப்படுத்தல்களில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. இந்திய  அணி ஒரு புள்ளியை பெற்றுள்ள அதேவேளை, இங்கிலாந்து அணி ஒரு புள்ளியை இழந்துள்ளது. இந்திய அணி இரண்டாமிடத்திலும்  இங்கிலாந்து அணி ஐந்தாமிடத்திலுமே உள்ளன. 

இந்திய அணி , இருபதுக்கு-20 சர்வதேசப்  போட்டிகளில் ஒரு புதிய அணியை உருவாக்கியுள்ளது. இந்த அணி இந்த தொடரை வெற்றி பெற்றுள்ளமை அவர்கள் அடுத்த அணியை சிறப்பாக உருவாக்கி வருகின்றார்கள் எனவும் கூறலாம். கடந்த வருடத்தில் அதிக வெற்றிகளை பெற்றுள்ள போதும் ஏன் இன்னுமொரு புதிய அணி? வெற்றிகளை பெற்றபோதும் வீரர்கள் தொடர்ச்சியாக மாறி வந்துள்ளார்கள். ஒரு நாள் சர்வதேசப்போட்டிகள் போன்றே 20-20 போட்டிகளிலும் ஆரம்ப இடம் பிரச்சினையாக இருந்துள்ளது. விராத் கோலி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். முழுமையாக ஏமாற்றிவிட்டார். லோகேஷ் ராகுல் அடித்த 71 ஓட்டங்கள் அவரை இனி ஆரம்ப வீராக தொடர்ந்து விளையாடும் வாய்ப்புகளை உருவாக்கும்.

சுரேஷ் ரெய்னா தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பாவித்துளார். இறுதிப் போட்டியில் அரைச்சதமடித்தார். தொடரில் 104 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மிகச்சிறந்த மீள் வருகையை புரிந்த யுவராஜ் சிங் இந்த தொடரில் ஏமாற்றிவிட்டார். ஆனாலும் இறுதிப்போட்டியில் 10 பந்துகளில் அடித்த 27 ஓட்டங்கள் அவரை நம்பலாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. தோனி இறுதிப் போட்டியில் நான்காமிடத்தில் களமிறங்கி தனது முதல் அரைச்சதத்தை பெற்றுக்கொண்டார். தோனியின் இடம் தொடர்ந்தும் அணிக்கு தேவை என்ற நிலை உள்ளது. அணியில் இன்னமும் சில காலம் விளையாட வேண்டும் என்பது இந்த தொடரில் தென்பட்டது.

மனிஷ் பாண்டே ஒரு நாள் சர்வதேசப்போட்டிங்களிலும் தன்னுடைய இடத்தை இழந்துவிட்டார். தற்போது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் தனது இடத்தை இழந்து விட்டார். ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் கேதார் ஜாதவ் அடித்த அடி பின் மத்திய வரிசையில் யாரும் அடிக்காத வேளையில் நினைவுக்கு வந்தார். இந்தளவுக்கு ஆக்ரோஷமாக வேகமாக அடித்தாடக் கூடிய வீரர் ஏன் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் சேர்க்கப்படக்கூடாது? அடுத்த தொடரில் நிச்சயம் சேர்க்கப்படுவார் என நம்பலாம். ஹர்டிக்   பாண்ட்யா அணிக்கு தேவையானவரே. ஆனால், சரியாக துடுப்பாட்டத்தில் அவரால் அடித்தாட முடியவில்லை. பந்துவீச்சில் அதிகம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அறிமுகத்தின் போது சிறப்பாகவே பந்துவீசினார். ஆனாலும் கோலி அவரை அதிகம் இந்த தொடரில் பாவிக்கவில்லை.

ஆசிஷ் நெஹ்ரா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் மிகவும் சிறப்பாகவே பந்துவீசினார்கள். இவர்களின் சிறந்த வேகப் பந்துவீச்சே இந்தியா அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது. இந்திய ஆடுகளங்களில் இறுதி நேரத்தில் வேகப்பந்து வீசி வெற்றியைப் பெற்றுக் கொடுப்பது என்பது அபூர்வமான விடயமே. முதற் போட்டியில் இருவருமே விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லை. அதனாலேயே இந்தியா அணி தோல்வியை சந்தித்தது.

இறுதிப் போட்டியில் ஆறு விக்கெட்களை கைப்பற்றி, இந்தியாவின் சிறந்த இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி பந்துவீச்சுப் பெறுதியையும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், மூன்றாவது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் யுஸ்வேந்திர சஹால் பெற்றுக்கொண்டார். மிகவும் சிறப்பான மீள் வருகை. கடந்தாண்டு சிம்பாப்வே தொடரில் தனது அறிமுகத்தை மேற்கொண்டவர். இந்தத் தொடரில் மிகவும் சிறப்பாக தன்னை நிரூபித்துள்ளார்.  முதற் போட்டியிலும் சிறப்பாக பந்துவீசினார். இரண்டாவது போட்டியிலும் விக்கெட்களைக் கைப்பற்றாவிட்டாலும் இறுக்கமாகப் பந்துவீசினார். போட்டியின் தொடர் நாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார்.

இவரின் வருகை மூலம் இரவீந்திர ஜடேஜா அல்லது இரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரில், ஒருவரின் இடம் நிச்சயம் இல்லாமல் போகலாம். இவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்துவதனாலும்  முக்கியத்துவம் வழங்குவதனாலும் இனி இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் அதிகம் ஓய்வு வழங்கப்படும். எனவே இன்னுமொருவர் தேவை. இவர்கள் இருவரையும் சுழற்சி முறையில் பாவிப்பது நல்லது. அடுத்த தொடரில் இது ஓரளவு தெரிய வரும்.

அமித் மிஷ்ரா, தான் விளையாடிய இரு போட்டிகளிலும் அதிகம் ஓட்டங்களை வழங்கவில்லை. தலா ஒவ்வொரு விக்கெட்களை ஒவ்வொரு போட்டிகளிலும் கைப்பற்றிக்கொண்டார். முதற் போட்டியில் அறிமுகத்தை மேற்கொண்ட பர்வீஸ் ரசூல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய போதும் அடுத்த போட்டியில் நீக்கப்பட்டு மிஸ்ரா சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்த வாய்ப்பு தேவைதானா? நேரடியாக மிஷ்ரா விளையாடியிருந்தால் சிலவேளைகளில்  போட்டியில் முடிவும் கூட மாறியிருக்கலாம்.

 ரிஷப் பண்ட் 19 வயதான விக்கெட் காப்பாளர். துடுப்பெடுத்தாடக் கூடியவர். மூன்றாவது போட்டியில் அறிமுகத்தை மேற்கொண்டார். ஆட்டமிழக்காமல் ஐந்து ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். தோனியின் இடத்துக்கு இவரையே வளர்க்கப் போகின்றார்கள் என்பது தெளிவாக தென்படுகின்றது. அடுத்த போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வார் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஜேசன் ரோய், சாம் பில்லிங்ஸ் ஆகியோரின் ஆரம்பம் முதற் போட்டியில் ஓரளவு சிறப்பாகவே அமைந்தது. அதனாலேயே வெற்றி பெறமுடிந்தது. ஆனாலும் அடுத்த இரண்டு இடங்களிலும், ஜோ ரூட், ஒய்ன் மோர்கன் ஆகியோரின் துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்த்து. தொடரில் கூடுதல் ஓட்டங்களை பெற்றவர்கள் இவர்களே. இரண்டாவது போட்டியில் ஜோ றூட்டின் ஆட்டமிழப்பே தவறுதலாக வழங்கப்பட்டது. அந்த ஆட்டமிழப்பு போட்டியை  இந்திய அணிக்கு சாதகமாக மாற்றியது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையே. பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது போட்டியில் தங்கள் அணியின் பக்கமாக போட்டியினை மாற்றிக்கொடுத்தார். மற்றைய வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடமல் போனது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவைத் தந்தது. குறிப்பாக ஜொஸ் பட்லர் இரண்டு போட்டிகளிலும் ஏமாற்றினார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு போதுமான அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. கிறிஸ் ஜோர்டான் 5 விக்கெட்களை கைபப்ற்றினார். லியாம் பிளங்கெட் பெரியளவில் கைகொடுக்கவில்லை. பென் ஸ்டோக்சும் பந்துவீச்சில் கைவிட்டார். வெற்றி பெற்ற முதற் போட்டியில்  மொய்ன் அலி சிறப்பாக பந்துவீசி போட்டி நாயகன் விருதைப் பெற்றுக்கொண்டார். ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளும் அதிக ஓட்டங்களை வழங்காமல் பந்துவீசினார். ஒரு விக்கெட்டை மாத்திரமே கைப்பற்றினார். அடில் ரஷீட் முதற் போட்டியில் பந்துவீசவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளிலும் மோசமாகவே அமைந்தது. சமநிலையான அணியாக நல்ல வீரர்கள் உள்ள அணியாக இங்கிலாந்து அணி விளையாடிய போதும் அந்த வீரர்கள் சரியாக சோபிக்க தவறிவிட்டாரக்ள்.

 

தொடரில் 50 ஓட்டங்களை தாண்டியவர்கள்

ஜோ றூட்                       3              3              126         46*         63.00     121         104.13                   0             

ஒய்ன் மோர்கன்            3              3              108         51           36.00     82           131.70                   1             

சுரேஷ் ரெய்னா             3              3              104         63           34.66     78           133.33                   1             

லோகேஷ் ராகுல்          3              3              101         71           33.66     74           136.48                   1             

MS  தோனி                     3              3              97           56           48.50     70           138.57                   1             

ஜேசன் றோய்               3              3              61           32           20.33     45           135.55                   0             

விராத் கோலி               3              3              52           29           17.33     45           115.55                   0             

(போட்டி, இனிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, எதிர்கொண்ட பந்துகள்,  ஸ்ட்ரைக் ரேட், அரைச்சதம்)

தொடரில் மூன்று விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியவர்கள்

யுஸ்வேந்திர சஹால்      3              3              12.0        0              85           8              6/25       10.62     7.08       

ஜஸ்பிரிட் பும்ரா                3              3              9.4          0              60           5              3/14       12.00     6.20       

கிறிஸ் ஜோர்டான்             3              3              12.0        0              105         5              3/22       21.00     8.75       

மொய்ன் அலி                     3             3              12.0        0              71           3              2/21       23.66     5.91       

ஆஷிஷ் நெஹ்ரா               3              3              10.0        1              83           3              3/28       27.66     8.30       

டைமல் மில்ஸ்                   3              3              12.0        0              94           3              1/27       31.33     7.83       

(போட்டி, இன்னிங்ஸ், ஓவர்கள், ஓட்டமற்ற ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓட்ட சராசரி வேகம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X