ரஷ்ய தொடர்புகளையடுத்து ட்ரம்ப்பின் பாதுகாப்பு ஆலோசகர் இராஜினாமா
15-02-2017 12:11 PM
Comments - 0       Views - 84

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் மைக்கல் பிளின், நேற்று முன்தினமிரவு (13), தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.  

ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னரே, ரஷ்யா மீதான ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தாரா என்பது குறித்து, கூர்ந்தாய்வுக்கு உட்பட்ட நிலையிலேயே, தனது பதவியிலிருந்து பிளின் இராஜினாமா செய்துள்ளார்.  

பிளின் தொடர்பான நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும் உப ஜனாதிபதி மைக் பென்ஸுடன் உரையாடி வருவதாகவும் பேச்சாளரொருவரினால் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த சில மணித்தியாலங்களிலேயே, தனது இராஜினாமாவை பிளின் சமர்ப்பித்திருந்தார்.  

ரஷ்யர்களுடன் பொருளாதாரத் தடைகள் குறித்து கலந்துரையாடியிருக்கவில்லை என பென்ஸிடம், பிளின் உறுதியளித்திருந்தபோதும், குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டிருந்ததாகப் பின்னர் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.  

இந்நிலையில், “எதிர்பாராதவிதமாக, வேகமாக நடைபெற்ற நிகழ்வுகள் காரணமாக, ரஷ்யத் தூதுவருடனான எனது தொலைபேசி அழைப்புகள் குறித்து, உப ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தவரிடமும் ஏனையோரிடமும் முழுமையற்ற தகவல்களை, உள்நோக்கமற்று கூறினேன். ஜனாதிபதியிடமும் உப ஜனாதிபதியிடமும் தாழ்மையாக மன்னிப்புக் கோரினேன். அவர்கள் எனது மன்னிப்பை ஏற்றுக் கொண்டார்கள்” என தனது இராஜினாமா கடிதத்தில் பிளின் கூறியுள்ளார்.  

இச்சந்தர்ப்பத்தில், வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்புச் சபையின் பணியாட் தொகுதியின் தலைவரான ஓய்வுபெற்ற ஜெனரலான கீத் கெல்லொக், பதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பெயரிடப்பட்டுள்ளார்.  

இந்நிலையில், மத்திய புலனாய்வு முகவரகத்தின் முன்னாள் பணிப்பாளரான, ஓய்வுபெற்ற ஜெனரல் டேவிட் பிற்றயஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு கருத்திற்கொள்ளப்படுவதாக, வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.  

ரஷ்ய அதிகாரிகளுடன் கொண்டிருக்கும் தொடர்பு காரணமாக, பிளின், அச்சுறுத்தப்படக்கூடிய அபாயத்திலிருப்பதாக, ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த மாதம் 20ஆம் திகதி பதவியேற்க முன்னர், வெள்ளை மாளிகைக்கு நீதித் திணைக்களம் அறிவித்ததாக தகவல் வெளியாகியமையைத் தொடர்ந்தே, பிளினின் இராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.    

"ரஷ்ய தொடர்புகளையடுத்து ட்ரம்ப்பின் பாதுகாப்பு ஆலோசகர் இராஜினாமா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty