தாமதமான சிரிய சமாதான பேச்சுவார்த்தை: அடுத்த வாரம் ஆரம்பிக்கும்: ஐ.நா
15-02-2017 09:15 AM
Comments - 0       Views - 26

சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக, ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டிருந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தை இம்மாதம் 23ஆம் திகதி, ஜெனீவாவில் ஆரம்பிக்கப்படும் என்று, சிரியாவுக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவர் ஸ்டபான் டி மிஸ்டுராவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த இந்தப் புதிய சுற்று சமாதானப் பேச்சுவார்த்தைக்கான, தன்னுடைய 21 பிரதிநிதிகளை சிரிய எதிரணி அறிவித்தமையைத் தொடர்ந்தே, மேற்கூறப்பட்ட அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.  

தயாராகுவதற்கு எதிரணிக்கு மேலதிக நேரத்தை வழங்கும் பொருட்டு, இந்தப் பேச்சுவார்த்தையை, இம்மாதம் 8ஆம் திகதியில் முன்னெடுப்பதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தபோதும், அது 20ஆம் திகதிக்கு தள்ளிப்போடப்பட்டமை தொடர்பில், மிஸ்டுரா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.  

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு, சரியான நேரத்தில், தனது பிரதிநிதிகளை சிரிய எதிரணி தேர்ந்தெடுக்காவிட்டால், பிரதிநிதிகளை தானே தேர்ந்தெடுப்பதாக, கடந்தவாரம்,  மிஸ்டுரா எச்சரிக்கை விடுத்திருந்தார்.  

இந்தப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முன்னர், மிஸ்டுராவை சந்திக்கும் பொருட்டு, சிரிய அரசாங்கமும் சிரிய எதிரணியும் இம்மாதம் 20ஆம் திகதியளவில், ஜெனீவாவை வந்தடைவர் என மிஸ்டுராவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.    

"தாமதமான சிரிய சமாதான பேச்சுவார்த்தை: அடுத்த வாரம் ஆரம்பிக்கும்: ஐ.நா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty