2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அமெரிக்கக் கூட்டணியின் தாக்குதலினால் மொசூலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனரா?

Gavitha   / 2017 பெப்ரவரி 19 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ. எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் கட்டளை நிலையத்தை கொண்டமைந்திருந்தது எனச் சந்தேகிக்கப்படும் மேற்கு மொசூலின் பிரதான மருத்துவ வளாகத்திலுள்ள கட்டடமொன்றை அழித்துள்ளதாக, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, நேற்று முன்தினம் (18) தெரிவித்துள்ளது.  

மேற்கூறப்பட்ட ஐந்து மாடிக் கட்டடத்தை, இராணுவக் கட்டளையகமாகவும் கட்டுப்பாட்டு வசதியாகவுமே, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு பயன்படுத்தியதாக, கூட்டணி தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற தாக்குதலில், பெரும்பாலாக, சிறுவர்கள், பெண்களை உள்ளடக்கிய 18 பேர் கொல்லப்பட்டதாகவும் 47 பேர் காயமடைந்ததாகவும், இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு தெரிவித்துள்ளது.  

இந்தச் சந்தர்ப்பத்தில், குறித்த கட்டடத்தை, எந்தவொரு மருத்துவத் தேவைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு பயன்படுத்தவில்லையென, புலனாய்வு, கண்காணிப்பு, உளவு நடவடிக்கைகள் மூலம், கூட்டணியால் உறுதிப்படுத்த முடிந்ததாகவும் அதனால், குறித்த இடத்தை பொதுமக்கள் பயன்படுத்தியிருக்கவில்லையென, கூட்டணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேற்கு மொசூல் அல்லது ஈராக், சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள ஏனைய இடங்களில், சுயாதீன ஊடகங்கள் செல்ல முடியாது என்ற நிலையில், மேற்கூறப்பட்ட இரண்டு தகவல்களிலும் எது உண்மை என்று அறிவது கடினமாகவுள்ளது.  

மொசூலைக் கைப்பற்றுவதற்கான முதலாவது படி, கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், ஐக்கிய அமெரிக்காவினால் ஆதரவளிக்கப்படும் படைகள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் ஆயுததாரிகளை, கிழக்கு மொசூலிருந்து விரட்டியுள்ளதுடன், தற்போது மேற்கு மொசூலைச் சூழ்ந்துள்ளன. இங்கு, 650,000 பொதுமக்கள் இருக்கின்றார்கள் என மதிப்பிடப்படுகிறது.   மொசூலின் மேற்குப் பகுதியில், பொதுமக்களுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் மறைந்திருப்பதாகவும் இலக்கு வைக்கப்படுவதிலிருந்து தப்பும் உபாயமாக, வைத்தியசாலைகள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள், தேவாலயங்களில் ஆயுதங்களை சேமித்து வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, மேற்கூறப்பட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .