2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முதலாவது ஜனாதிபதி தேர்தலும் தமிழர் அரசியலும்

Administrator   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே. அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 80)

அர்த்தமற்றதாக நீண்டு சென்ற பேச்சுவார்த்தைகள்

ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, மிகுந்த நல்லெண்ணத்துடனும் அதன்பாலாகத் தமக்கேற்றதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் முன்னெடுத்தன.  

 ஏனென்றால், குறித்த பேச்சுவார்த்தைகளின் நிமித்தமாக அரசாங்கத்தோடு மிகுந்த இணக்கப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டிய சூழல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இருந்தது.   

புலம்பெயர் தமிழ் மக்களினது எதிர்ப்புக்கு மத்தியில் மட்டுமல்லாது, உள்நாட்டிலும், குறிப்பாக வடக்கு, கிழக்கிலும் எழுச்சிபெற்ற தமிழ் இளைஞர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அந்த எதிர்ப்பை எதிர்கொண்டு, தமது இணக்கப்பாட்டுக்கு எந்தப் பங்கமும் வராமல் ஒரு வருடகாலமளவுக்கு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நம்பிக்கையோடு ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டது.   

இந்த எதிர்ப்பு எந்த அளவுக்குச் சென்றதென்றால், தமிழ் இளைஞர்கள், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் வாகனத்தைச் சூழ்ந்து நின்று அமிர்தலிங்கத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் எதிர்த்துக் குரலெழுப்பும் அளவுக்கு எதிர்ப்பு வலுத்தது.  

இத்தனைகளையும் தாண்டியும் பேச்சுவார்த்தையைத் தவிர வேறு வழியில்லை என்ற எண்ணப்பாட்டில்தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பயணித்தது. ஆனால், நீண்ட இந்தப் பேச்சுவார்த்தைகள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கோ, தமிழ் மக்களுக்கோ எந்தவகையான சாதகமான பலனையும் தரவில்லை.   

வடக்கில் தமிழ் பேசும் பொலிஸாரின் எண்ணிக்கை அதிகரித்தமை உட்பட, சில விடயங்கள் நடந்தேறினாலும் தமிழ் மக்கள் வேண்டிய அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு பற்றி எந்தக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களும் நிகழவில்லை.  

 மாறாக, தமிழ் மக்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் எனும் இரும்புக் கரம் கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருந்தது.   
ஜே.ஆரைப் பொறுத்தவரையில் அவரது கவனம் முழுவதும் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் மீதுதான் குவிந்திருந்தது. அது நடந்தேறும் வரை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தக்க அஸ்திரமாகவே ஜே.ஆர் இந்தப் பேச்சுவார்த்தைகளைக் கருதியிருக்க வேண்டும்.  

ஜனாதிபதித் தேர்தல் வரையிலான ஜே. ஆரின் போக்கும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னான ஜே.ஆரின் போக்கும் இதையே சுட்டி நிற்கிறது.   

ஜனாதிபதித் தேர்தல் 1982 ஒக்டோபர் 20 ஆம் திகதி நடத்தப்படவிருந்தது. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதியாக 1982 செப்டெம்பர் 17 அமைந்தது.   

‘குட்டிமணி’ என்ற செல்வராஜா யோகசந்திரன்

தமிழ் இளைஞர்களின் விருப்பம் தனித் தமிழீழமாக மாறியிருந்ததை அன்றைய சூழல் உணர்த்தி நின்றது. குறிப்பாக, அன்று தோன்றியிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் சில இதனை அடைவதற்குரிய முறை ஆயுத வழியே என்று, அதன் வழி பிரயாணிக்கத் தொடங்கியிருந்தன.   

ஆங்காங்கே பொலிஸ் நிலையங்களும் பொலிஸாரும் தாக்கப்பட்டனர். இந்தச் சூழலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தா. திருநாவுக்கரசு, 1982 ஓகஸ்ட் முதலாம் திகதி காலமானார். இதனைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு புதிய நியமனம் செய்யும் சந்தர்ப்பம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்டது.   

இதேவேளை, வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்ற கருத்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள் உருவானது. குட்டிமணியைத் தமிழ் மக்கள் சார்பில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அழுத்தமும் வலுப்பெறத் தொடங்கியது. யார் இந்த குட்டிமணி?   

‘குட்டிமணி’ என்ற யுத்தப் பெயரால், இயக்கப் பெயரால் (nom de guerre) பரவலாக அறியப்பட்ட செல்வராஜா யோகசந்திரன் என்பவர், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) என்ற தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராவார்.   

பொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை எனக் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டிருந்த ஆயுதப் போராளியான குட்டிமணி, 1981 ஏப்ரல் முதலாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது, அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டார்.அவரோடு தங்கதுரை என்பவரும், தேவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டார்கள்.   

பல்வேறு குற்றங்கள் தொடர்பில் அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு நடத்தப்பட்டது.  

 வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் படி, கைதுசெய்யப்பட்ட குட்டிமணியும் ஜெகன் என்பவரும் பல மாதங்களுக்கு எந்த வெளியுலகத் தொடர்புமின்றி, சட்டத்தரணிகள் கூட அணுகமுடியாதபடி, தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.   

தடுத்து வைத்திருக்கப்பட்ட போது, சொல்லொணாச் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். குறித்த சித்திரவதைகள் பற்றிய விவரணங்கள் வழக்கின் சாட்சியப் பதிவுகளில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.   

மனிதம் ஓர் அணுவிலேனும் இருக்குமாயினும்கூட இத்தகைய சித்திரவதைகளை இன்னொரு மனிதன் மேல் எந்த மனிதனும் பிரயோகிக்க மாட்டான். அத்தகைய மிகக் கர்ணகொடூரமான சித்திரவதைகளுக்கு குட்டிமணியும் ஜெகனும் முகங்கொடுக்க வேண்டியிருந்ததாக அந்தச் சாட்சிப்பதிவுகள் தெரிவிக்கின்றன.   

குட்டிமணி மற்றும் ஜெகனுக்கு எதிரான கொழும்பு உயர்நீதிமன்றில் நடந்த வழக்கில் 1982 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.   

குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டபின், மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட முன்பதாக, குட்டிமணி ஏதேனும் தெரிவிக்க நீதிபதியினால் தரப்பட்ட வாய்ப்பில் குட்டிமணி தெரிவித்த விடயமானது, தமிழ் இளைஞர் மத்தியில் நீண்ட தாக்கம் செலுத்தியதொரு கூற்றாக அமைந்து.   

தன்னுடைய கூற்றிலே குட்டிமணி “நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. நான் ஒரு நிரபராதி. பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட என்னை, அவர்கள் சித்திரவதை செய்து சில வாக்குமூலங்களில் கையெழுத்துப் பெற்று, அவை எனக்கெதிரான சான்றாக இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டு, நான் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறேன். 

இந்த நீதிமன்று இன்று வழங்கியுள்ள ஆணையைப் பற்றி, நான் என்னுடைய சில அடிப்படை எண்ணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இன்று இந்த வழக்கிலே, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது தமிழீழம் அமைக்கப்படுவதற்கான புதிய உத்வேகத்தையும் வளம்மிக்க உரத்தையும் ஊக்கத்தையும் வலுவான காரணங்களையும் வழங்கும். 

இன்னும் வேறும், தமிழ் இளைஞர்களும் இந்த நீதிமன்றின் முன் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் நிற்கவைக்கப்படுவார்கள். இது தொடருமானால், விதிக்கப்படும் தண்டனையானது தமிழர்களின் விடுதலைக்கான ஊக்கமாக அமையும்.

நான் தமிழீழத்திலேயே தூக்கிலிடப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

என்னுடைய கண்கள், கண்பார்வையற்ற ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போதுதான் தமிழீழம் நிதர்சனமாவதை குட்டிமணி இந்தக் கண்களால் காணமுடியும். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார்.  

ஜனாதிபதித் தேர்தலைப்  புறக்கணித்தல்

ஆனால், குட்டிமணியை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்ற கருத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு உடன்பாடு இருக்கவில்லை.   

ஜே.ஆர் ஜெயவர்த்தன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தனக்கு ஆதரவு தர வேண்டும் என அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திடம் வேண்டியிருந்தார்.  இது, அமிர்தலிங்கத்துக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியிருந்தது. 

அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை என்ற இணக்கவழியில் பயணித்துக் கொண்டிருந்தமைக்கே கடுமையான எதிர்ப்பினை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தித்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆரை வெளிப்படையாக ஆதரித்தல் என்பது சாத்தியமே இல்லை என்பதை அமிர்தலிங்கம் நிச்சயமாக அறிந்தும் உணர்ந்தும் இருக்கக்கூடும்.   

ஆகவே, ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தல் என்ற முடிவுக்கு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வந்திருந்தார். “ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரைக் களமிறக்கும் கேவலமான அரசியல் சித்து விளையாட்டினைச் செய்யத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தயாராக இல்லை. எங்கள் நோக்கம் நன்கறியப்பட்டதே. ஈழம் என்ற எமது இலக்கை நோக்கியே நாம் பயணிக்கிறோம்” என்று சொன்ன அமிர்தலிங்கம், “தமிழ் மக்கள், 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் குடியரசு யாப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதைவிட வேறு வழி எமக்கில்லை” என்று ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதற்கொரு வியாக்கியானத்தையும் முன்வைத்தார்.   

முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழன்

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு என்பது, ஏறத்தாழ ஜே.ஆரின் வெற்றிக்கு உறுதுணை செய்யக்கூடிய ஒன்றாகவே அமைந்தது.   

அன்றிருந்த சூழலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஜே.ஆருக்கு வெளிப்படையான ஆதரவினைத் தெரிவித்திருந்தால் தமிழ் மக்கள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைப் புறக்கணித்திருப்பார்களேயன்றி ஜே.ஆருக்கு வாக்களித்திருக்கும் நிலை இருக்கவில்லை.   

இந்த நிலையில், ஒரு தமிழனாகத் தமிழ் மக்கள் சார்பில், 1982 ஒக்டோபரில் நடைபெறவிருந்த இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த குமார் பொன்னம்பலம் முடிவெடுத்திருந்தார்.  

அவர், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இரண்டு முக்கிய காரணங்களை முன்வைத்தார். 
முதலாவதாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது வடக்கு, கிழக்குக்கு அப்பால் வாழும் தமிழர்களிடம் தமிழீழம் என்ற தனிநாட்டுக்கான அங்கிகாரத்தையும் மக்களாணையையும் பெறத் தவறிவிட்டது, ஆகவே, அதனைப் பெற்றுக்கொள்ள இது ஒரு வாய்ப்பு.   

என்றும்,  
இரண்டாவதாகத் தமிழர்களுக்கான தனிநாட்டுக்கான மக்களாணையை வடக்கு, கிழக்கில் பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இதுவரை அதற்காக எதுவும் செய்யவில்லை. அதனை ஓரமாக வைத்துவிட்டது. 

ஆகவே, இக்குறைகளை நிவர்த்தி செய்து, இலங்கை முழுவதிலும் வசிக்கும் தமிழ் மக்களிடம் தனிநாட்டுக்கான புதிய மக்களாணையைப் பெறத் தாம், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.   

வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதியான 1982 செப்டெம்பர் 17 அன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களில் ஆறு பேரின் வேட்புமனுக்களைத் தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டிருந்தார்.   

அந்தவகையில், இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்த்தனவும் சிறிமாவோவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக ஹெக்டர் கொப்பேகடுவவும் லங்கா சமசமாஜக் கட்சி சார்பாக கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வாவும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலமும் நவ சமசமாஜக் கட்சி சார்பில் வாசுதேவ நாணயக்காரவும் ஜே.வி.பி சார்பில் றோஹண விஜேவீரவும் வேட்பாளர்களாகக் களமிறங்கினார்கள்.   

நாடாளுமன்ற உறுப்பினராகக் குட்டிமணி நியமனம்

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு எடுத்த நிலையில், குட்டிமணியை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள் இருந்த கருத்தையும் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு இருந்தது.   

ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசின் மரணத்தின் காரணமாக வெற்றிடமான யாழ். வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, குட்டிமணியை நியமிக்க அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி முடிவெடுத்தது.  

 அந்தவகையில், 1982 ஒக்டோபர் 14 ஆம் திகதி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வெற்றிடமான வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தமது கட்சி குட்டிமணி என்ற செல்வராஜா யோகசந்திரனை நியமிப்பதாகத் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தார்.   

தேர்தல் ஆணையாளர் இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், 1982 ஒக்டோபர் 16 ஆம் திகதி, சிறைச்சாலைகள் ஆணையாளர், மரணதண்டனை விதிக்கப்பட்ட குட்டிமணியை நாடாளுமன்றம் சென்று, நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளச் சிறையிலியிருந்து வெளியே அனுமதிக்க முடியாது என்று அறிவித்தார். 

இதற்கெதிராகக் குட்டிமணி, தான் நாடாளுமன்றம் சென்று நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கு அனுமதிகோரி மேன்முறையீட்டு நீதிமன்றை நாடினார்.   

(அடுத்த வாரம் தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .