2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘முக்கிய விவகாரங்களில் மந்தம்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளனர். 

இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், நேற்று (20) இடம்பெற்றது.  

இந்த சந்திப்பு தொடர்பில், கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கருடனான சந்திப்பு மிகவும் சுமூகமான முறையில் இடம்பெற்றது. 

இச்சந்திப்பின்போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளான, வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில், அவரை தெரிவுபடுத்தினோம்.  

அத்துடன், புதிய அரசியல் யாப்பு உருவாக்கமானது தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை தொடர்பிலும், இந்த விவகாரத்தில் தமது கரிசனையையும் கூட்டமைப்பு பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.  

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனது சந்திப்பின் போது எடுத்துரைப்பதாக, இந்திய வெளியுறவுச் செயலாளர், கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் உறுதி வழங்கினார். 

இந்த சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .