2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி‘ஐ.தே.கவில் இணைய முற்படுகிறார் ரத்தன’

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையில் 2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, ஐ.தே.கவில் சேர்வதற்காக, ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வண. அத்துரெலியே ரத்தன தேரர், ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளதாக, ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது. 

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அக்கட்சியின் இணைத்தலைவர் வண. ஹெடிகல்லே விமலசர தேரர், இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். 

இரு கட்சிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், ஹெல உறுமயவுக்கென ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் மூலமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான இடத்திலேயே, ரத்தன தேரர் நியமிக்கப்பட்டதாகத் தெரிவித்த விமலசர தேரர், எனவே, ஐ.தே.கவில் இணைவதற்கு, ரத்தன தேரருக்கு உரிமை கிடையாது என்று குறிப்பிட்டார். 

எனினும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் முடிவை, ரத்தன தேரர் மீளப்பெற்றுக் கொண்டால், அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதற்குத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

“வண. ரத்தன தேரர், தனது முடிவை வாபஸ் பெற்று, ஹெல உறுமயவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டதைப் போல, ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் அவர் இணைய முடியாது. ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஐ.தே.கவினதும் ஜனாதிபதியினதும் விருப்பை வெல்வதற்கு, அவர் முயல்கிறார். அவருக்கெதிரான ஒழுக்காற்று விசாரணைகளிலிருந்து தப்புவதற்கு, இது வழி கிடையாது” என்று விமலசர தேரர் குறிப்பிட்டார். 

ரத்தன தேரர் தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வதற்காக, தனது தலைமையில் ஹெல உறுமயவின் மத்திய குழுவினால் செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்த விமலசர தேரர், அச்செயற்குழு, தனது பணிகளை ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .