2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சர்வஜன வாக்கெடுப்பு தீர்வைத் தருமா?

Administrator   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தேச புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட அக்கட்சியின் சில தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.   

மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தென் பகுதிளைத் தளமாகக் கொண்ட சில அரசியல் கட்சிகள் அதனை வரவேற்றிருக்கிறார்கள்.  

சர்வஜன வாக்கெடுப்பு என்பது ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கும் சிறந்ததோர் அம்சம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், நாட்டில் வாக்களிக்கத் தகுதியுள்ள அனைவரும், தமது பிரதிநிதிகள் மூலமல்லாது தாமாகவே குறிப்பிட்டதோர் விடயத்துக்குத் தமது ஆதரவை அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்க அது வாய்ப்பளிக்கிறது.   

எனவே, நாட்டில் பெரும்பாலான மக்கள் தாமாகவே அங்கிகரித்த அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வதாயின், அது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.   

ஆனால், அரசியலமைப்பு மாற்றத்தோடு இனப்பிரச்சினைக்கும் தீர்வு தேடும் விடயத்தில், குறிப்பாகத் தமிழ்த் தலைவர்கள் நீண்டகாலமாகக் கோரி வரும் சமஷ்டி ஆட்சி முறையை அறிமுகப்படுத்துவதில் சர்வஜன வாக்கெடுப்பு, எந்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாகும்.  

தற்போதைய அரசியலமைப்பின்படி, இரண்டு வகையிலான விடயங்ளைப் பொது மக்கள் வாக்கெடுப்புக்கு விடலாம். ஒன்று, அரசியலமைப்பின் சில குறிப்பிட்ட வாசகங்களை மாற்றுவற்காக நடத்தப்பட வேண்டியவை. மற்றையது, அரசியலமைப்பின் வாசகங்களல்லாத விடயங்கள் தொடர்பானது.  

அரசியலமைப்பின் வாசகங்கள் அல்லாத விடயங்கள், சட்ட மூலங்களாகவும் இருக்கலாம். அல்லது சட்டமூலம் அல்லாத விடயங்களாகவும் இருக்கலாம்.   

அரசியலமைப்பிலுள்ள ‘இலங்கை சுதந்திர, இறைமையுள்ள, ஜனநாயக,சோஷலிஸ குடியரசாகும்’ என்ற வாசகத்தையோ, ‘இலங்கை ஒற்றையாட்சி நிலவும் நாடு’ என்ற வாசகத்தையோ, ‘இறைமையானது மக்களுடையதே’ என்ற வாசகத்தையோ, ‘தேசியக் கொடி, தேசிய கீதம்’ மற்றும் ‘தேசிய தினம்’ ஆகியவற்றைப் பற்றிய வாசகங்களையோ, ‘பௌத்த மதத்துக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும்’ என்ற வாசகத்தையோ, கருத்து மற்றும் மத சுதந்திரத்தைப் பற்றிய வாசகத்தையோ, ‘எவரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படக் கூடாது’ என்ற வாசகத்தையோ அல்லது ‘எல்லோரும் சட்டத்தின் முன் சமம்’ என்ற வாசகத்தையோ சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாமல் திருத்தவோ நீக்கவோ முடியாது.  

அதேவேளை, ஒரு சட்ட மூலம் அல்லது அதன் ஒரு பகுதி சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என அமைச்சரவை முடிவு செய்த போதும், ஒரு சட்டமூலம் அல்லது அதன் ஒரு பகுதி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு வாக்குப் பலத்தால் நிறைவேற்றப்படுவதற்கு மேலதிகமாக அது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் முடிவு செய்த போதும், அரசியலமைப்புத் திருத்தம் அல்லாத ஒரு சட்டமூலம் நாடாளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட போதும், ஜனாதிபதி அவற்றை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடலாம்.  

 அதேவேளை, தேசிய நலனுக்கு அவசியம் என ஜனாதிபதி கருதும் ஒரு விடயத்தையும் அவர் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடலாம்.  

இவற்றில், இறுதியாகக் கூறப்பட்ட நிலைமையைப் பாவித்து மட்டுமே, இதுவரை இலங்கையில் சர்வஜன வாக்கெடுப்புப் பரிட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.   

1982 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய பொதுத் தேர்தலை, மேலும் ஆறு வருடங்களுக்கு ஒத்திப் போட முடியுமா என்ற விடயத்தை, அதே ஆண்டு டிசெம்பர் மாதம் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன சர்வஜன வாக்கெடுப்புக்கு விட்டார்.   

உண்மையிலேயே அரசியலமைப்புக் கூறுவதைப்போல், இது தேசிய நலன் கருதி நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு அல்ல. ஆனால், அது தேசிய நலன் கருதி நடத்தப்படவில்லை எனச் சட்டப்படி நிரூபிக்கவும் முடியாது.   

ஏனெனில், ஒரு விடயம் தேசிய நலன் சார்ந்ததா இல்லையா என்பதை அறிவதற்கான அளவுகோலொன்று இல்லை.   
1977 ஆம் ஆண்டு, தொகுதி வாரியாக நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் பெற்றுப் பதவிக்கு வந்திருந்தது.   

1982 ஆம் ஆண்டு விகிதாசார முறையில் நடத்தப்படவிருந்த தேர்தலில் சாதாரண பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வதும் அக்கட்சிக்குக் கடினமாக இருந்தது.  

எனவே, தொடர்ந்தும் ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தை வைத்திருக்கும் நோக்கத்துடனேயே ஜே.ஆர் அந்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார். அதில் தேசிய நலன் அல்ல; ஐ.தே.கவின் நலனே இருந்தது.   

தேர்தலை ஒத்திப் போட விரும்புவோர், விளக்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அதனை விரும்பாதோர் குடம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அந்த வாக்கெடுப்பின் போது கேட்கப்பட்டனர். எனவே, இதனைப் பல எதிர்க்கட்சியினர் விளக்கு, குடம் விளையாட்டு என ஏளனம் செய்தனர்.  

தோல்வியை தவிர்ப்பதுதான் ஜே.ஆரின் நோக்கம் என்பதைத் தெளிவாகக் காட்டும் வகையில் அந்த வாக்கெடுப்பு வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த வாக்கெடுப்பாகியது.   

நாட்டின் சகல பகுதிகளிலும் குண்டர்களின் அராஜகம் காணப்பட்டது. சில இடங்களில் வாக்குப் பெட்டிகளில் தனித்தனி வாக்கு அட்டைகளுக்குப் பதிலாக அட்டைக் கட்டுகள் காணப்பட்டன. ஆனால், அந்த வாக்கெடுப்பின் முடிவுகளும் சட்ட பூர்வமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.   

இந்தப் பின்னணியும் அரசியலமைப்புத் தொடர்பான உத்தேச வாக்கெடுப்பின் போது கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.  
மக்கள் கருத்தை அறிந்து, ஜனநாயக முறையில் ஆட்சி செய்வதை உறுதி செய்வதற்கே சர்வஜன வாக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும்.   

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது அந்த ஒன்றியத்திலிருந்து பிரிய வேண்டுமா என்பதைப் பற்றிய கருத்துக் கணிப்பொன்று, அண்மையில் பிரிட்டனில் நடைபெற்றது.  

 பெரும்பாலான மக்கள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றித்திலிருந்து பிரிய வேண்டும் என்று வாக்களித்தனர். அதன்படி தற்போது பிரிட்டன் பிரிந்து செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது.  

அதேவேளை, தத்தமது அரசியல் நோக்கங்களின்படி, பலர் சர்வஜன வாக்கெடுப்புகளை ஆதரிப்பதையும் நிராகரிப்பதையும் காண முடிகிறது.   

இந்தியாவும் பாகிஸ்தானும் 1947 ஆம் ஆண்டு பிரிந்தபோது, பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்ட காஷ்மீர், பாகிஸ்தானுக்குச் சொந்தமாக வேண்டுமா அல்லது இந்தியாவுக்குச் சொந்தமாக வேண்டுமா என்ற பிரச்சினை எழுந்தது.   

அதனைப் பின்னர் அம்மாநிலத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பொன்றின் மூலம் தீர்த்துக் கொள்ள இடமளித்துவிட்டு, அம்மாநிலம் இந்தியாவுடன் தற்காலிகமாக சேர்க்கப்பட்டது.   

ஆனால், இந்தியா பல காரணங்களை முன்வைத்து, அந்த வாக்கெடுப்பை இன்று வரை நடத்தவில்லை. எனவே, அந்த மாநிலத்தில் இன்னமும் பிரிவினைவாதப் போராட்டம் நிலவி வருகிறது.  

1987 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட கால கட்டத்தில், தமிழ் கட்சிகளும் இயக்கங்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிர்வாக ரீதியாக இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.   

அதேவேளை, இலங்கை அரசாங்கம், கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் அதனை விரும்பவில்லை என்ற அடிப்படையில், அதனை எதிர்த்தது. எனவே, கிழக்கு மாகாணத்தின் மக்களின் கருத்தறிந்து அந்த இணைப்பை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.  

ஆனால், தமிழ் ஆயுதக் குழுக்களை ஒப்பந்தத்துக்கு இணங்கச் செய்வதற்காக, முதலில் மாகாணங்களை இணைத்துவிட்டு, பின்னர் மக்கள் விருப்பத்தை அறிய கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த இந்தியா, இலங்கை அரசாங்கத்தை இணங்கச் செய்தது.   

அதன்படி, அந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாகாண சபைச் சட்டத்தில், அதற்கான வாசகமொன்று சேர்க்கப்பட்டது. அதன் பிரகரம், ‘1987 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர், வட மாகாணத்தோடு இணைந்து இருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதைக் கிழக்கு மாகாண மக்கள் முடிவு செய்யும் வகையில் அம் மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படும்’.  

ஆனால், இந்தியா அந்த வாக்கெடுப்பை நடத்தவிடாது, தொடர்ந்து இலங்கைக்கு நெருக்குதலை கொடுத்து வந்தது. தமிழ்க் கட்சிகள் மற்றும் இயக்கங்களும் அந்த வாக்கெடுப்பை விரும்பவில்லை.  

ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் போதே, தாம் அதனை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை வழங்கியதாக, அண்மையிலும் சில தமிழ்த் தலைவர்கள் கூறியிருந்தனர். 

அதேவேளை, அந்த வாக்கெடுப்பை நடத்தினால் கிழக்கில் இனக் கலவரம் ஏற்படும் என இலங்கை அரசாங்கமும் அஞ்சியது. எனவே, 1987 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, அந்த வாக்கெடுப்பு நடைபெறவில்லை.இறுதியில் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன.  

மாகாண சபைச் சட்டத்தின்படி, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முதலில் இணைக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு அந்த மாகாணங்களை இணைப்பதாயின், அதற்கு முன்னர் தமிழ் இயக்கங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும். அது நடைபெறவில்லை. எனவே சட்டத்தை மாற்றியாவது இரு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என இந்தியா, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவை வற்புறுத்தியது.  

ஆனால், அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணக்கத்தைப் பெறுவது கடினமான விடயம் என்பது ஜே.ஆருக்குத் தெரியும். எனவே, அவர் தமிழ் இயக்கங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் என்பதற்குப் பதிலாகத் தமிழ் இயக்கங்கள் ஆயுதங்களை கீழே வைக்க ஆரம்பித்தால், இரு மாகாணங்களை இணைக்க முடியும் என அவசர கால சட்டத்தைப் பாவித்து ஜனாதிபதி பணிப்புரையொன்றின் மூலம் மாகாண சபைச் சட்டத்தைத் திருத்தினார்.   

நாடாளுமன்றத்தினாலல்லாது ஜனாதிபதியின் கட்டளையின்படி சட்டமொன்று திருத்தப்பட்ட ஒரே சந்தர்ப்பம் அதுவே. இதன் காரணமாகவே 2005 ஆம் ஆண்டு ஹெல உருமயவின் மனுவொன்றை விசாரித்த உயர் நீதிமன்றம், வடக்கு கிழக்கு இணைப்பு சட்டவிரோதமானது எனத் தீர்ப்பு வழங்கியது. எனவே, சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமலே இரு மாகாணங்களும் பிரிந்துவிட்டன.  

முறையாக நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பானது, ஜனநாயகத்தை மிகவும் சிறந்த முறையில் பிரதிபலித்த போதிலும், அதனால் தாம் கொண்டுள்ள கருத்து வலியுறுத்தப்படுமேயானால் மட்டுமே மக்களும் அரசியல்வாதிகளும் அதனை விரும்புகிறார்கள்.   

இலங்கையில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்கெடுப்பு நடத்தி, அங்கு தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும் எனத் தமிழகத்தின் சில அரசியல்வாதிகள் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர்.  

அதனை இலங்கைத் தமிழர்கள் கோராவிட்டாலும், அவ்வாறானதோர் சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறுமானால் அவர்களும் அதனை விரும்புவார்கள்.  

ஆனால், ஜனநாயக முறைப்படி வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றி, கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடைபெறுவதை அவர்கள் விரும்புவதில்லை.

இதேபோல், வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றி கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடைபெறுவதை விரும்பும் சிங்கள மக்கள், வடக்கு, கிழக்கு இரு மாகாணங்களும் இலங்கையுடன் இணைந்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு அம்மாகாணங்களின் மக்களிடையே வாக்கெடுப்பை நடத்துவதை விரும்புவதில்லை.  

புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ள, சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதைப் பற்றி, இதற்கு முன்னர் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது அரசியலமைப்புத்துறை அமைச்சராகவிருந்த பேராசிரியர் 
ஜீ.எல் பீரிஸூம் கருத்து வெளியிட்டு இருந்தார்.   

பீரிஸூம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் எம்.பி காலஞ்சென்ற நீலன் திருச்செல்வமும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஒரு திட்டத்தை அக்காலத்தில் அதாவது, 1995 ஆம் ஆண்டு முன்வைத்திருந்தனர்.   

ஆனால், அதனை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு வாக்குப் பலம் அவசியமாகியது. ஐ.தே.க அதற்கு ஆதரவு வழங்க மறுத்தது. அந்த நிலையிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாது சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மட்டும் அதனை நிறைவேற்றிக் கொண்டால், அது செல்லுபடியாகும் எனச் சட்டத்துறை பேராசிரியரான பீரிஸ் நாடாளுமன்றத்தில் வாதாடினார். 

மக்கள் ஒரு விடயத்தை ஏற்றுக் கொண்டால் மக்களின் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் ஏற்படாது என்றும் எனவே, மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டாலும் மக்களே நேரடியாக இனப் பிரச்சினைக்கான தீர்வை அங்கிகரித்தால் அது போதுமானது என்றும் அவர் வாதாடினார்.   

ஆனால், அவ்வாறு செய்வதற்கும் தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்பின் ஏதாவது ஒரு வாசகத்தின் மூலமாவது அனுமதி வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சம்பந்தப்பட்ட எந்தவொரு விடயமும் மூன்றில் இரண்டு வாக்குப் பலத்தால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியே ஆக வேண்டும்.   

எனவே, பீரிஸின் கருத்துக்கு அரசாங்கத்தின் அமைச்சர்களாவது ஒத்துழைப்பு வழங்கவில்லை.   
தற்போதைய நிலையில், அரசியலமைப்பு மாற்றத்துக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதை தாம் விரும்பவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூறியுள்ளது. 

ஸ்ரீ ல.சு.க தலைவரான ஜனாதிபதியும் அவ்வாறே கருதுகிறாரா என்பது தெளிவாகவில்லை.   
அவரும் அவ்வாறு கருதினால் சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறாது. ஏனெனில், சட்டப் படி அவர்தான் எந்தவொரு விடயத்தையும் வாக்கெடுப்புக்கு விட வேண்டும். 

வாக்கெடுப்புக்கு சகலரும் விரும்பினாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வின்போது, தமிழ்த் தலைவர்கள் எதிர்ப்பார்க்கும் சில விடயங்களை நாட்டில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டு வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே.   

அரசியலமைப்பின் இரண்டாவது வாசகத்தில் நாடு ஒற்றை ஆட்சி உள்ள நாடாகவே கூறப்பட்டுள்ளது. அது கட்டாயம், சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலமே மாற்றி அமைக்க முடியும்.   

அதேவேளை, நாட்டில் ஒன்பது மாகாணங்கள் இருப்பதாக அரசியலமைப்பின் இணைப்பொன்றில் கூறப்பட்டுள்ளது. அதாவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டுமானால், அதுவும் சாதாரண சட்டத்தினாலன்றி அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றின் மூலமாகவே மேற்கொள்ள முடியும்.  

பொதுவாக, அரசியலமைப்பு மாற்றத்துக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறுமானால் மாகாணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் சிங்கள மக்கள் விரும்புவார்களா என்ற பிரச்சினை எழுகிறது.   

மஹிந்த ராஜபக்ஷ அணி அவர்களைத் தூண்டிவிட மாட்டார்கள் என்று எதிர்ப்பார்க்கவும் முடியாது. எனவே, சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தற்போது தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தும் சில விடயங்களை அடைய முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .