புலித் தொப்பி விவகாரம்: மூவருக்கும் மறியல் நீடிப்பு
22-02-2017 09:37 PM
Comments - 0       Views - 64

பேரின்பராஜா திபான்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரின் இலட்சிணை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை இலண்டனுக்கு அனுப்ப முயன்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை, மார்ச் மாதம் 1ஆம் திகதிவரை  கொழும்பு நீதவான் நீதிமன்றம் நீடித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, முன்னிலையில் இன்றைதினம் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியால் பூர்வாங்க ஆட்சேபணை எழுத்துமூலம் சமர்பிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்குறித்த வழக்கை எடுக்கக் கூடாது என அந்த ஆட்சேபணையில் தெரிவிக்கப்பட்டது.  

பூர்வாங்க ஆட்சேபணையை நிராகரித்த நீதவான், சந்தேகநபர்களான ஜேசுரத்னம் ஜெகசம்சன், மகாதேவா பிரசன்னா, சுப்பிரமணியம் நகுலராசா ஆகியோரின் விளக்கமறியலையும் நீடித்து உத்தரவிட்டார்.

நாரஹேன்பிட்டியிலுள்ள விரைவு அஞ்சல் (கொரியர்) நிறுவனத்தினூடாக, புலிகளின் இலட்சிணை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை மிகவும் சூட்சுமமான முறையில் பொதியொன்றுக்குள் மறைத்து வைத்து, அதனை இலண்டனுக்கு அனுப்பமுயன்றமை தொடர்பில் விசாரிக்கப்பட்டு, வவுனியாவைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

அதன் பின்னர், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, அரச புலனாய்வுச் சேவையில் கடமையாற்றிய சுப்பிரமணியம் நகுலராசா என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

"புலித் தொப்பி விவகாரம்: மூவருக்கும் மறியல் நீடிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty