‘தமிழ் மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது’
23-02-2017 09:07 AM
Comments - 0       Views - 34

ஜே.ஏ.ஜோர்ஜ்  

காணி விடுவிப்பு, காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள், எதிர்பார்த்தளவு நிறைவேற்றப்படாமை, பாரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளளதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.  

புதிய அரசாங்கம் மீது, தமிழ் மக்கள் பாரிய நம்பிக்கையைக் கொண்டிருந்தபோதும், கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும், தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தும் வகையில் நடத்துவதாக அவர் கூறினார்.  

சபை ஒத்திவைப்பு பிரேரணையை, நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் கூறியதாவது,

“பாரியதொரு எதிர்பார்ப்புடனேயே, தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். எனினும், அரசாங்கம் தம்மை நடத்தும் முறை தொடர்பில் தமிழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாதுள்ளன. கேப்பாப்பு வில் மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மக்களின் காணிகளை, புலிகள் பிடித்துவைத்திருந்தபோது போராட்டம் நடத்தாது, தற்போது போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறுகின்றனர். புலிகள் அமைப்பு, தமிழ் இளைஞர்களைக் கொண்ட போராட்டக் குழு. அவர்களை எதிர்த்து மக்களால் அன்று போராட முடியாத சூழ்நிலை காணப்பட்டது.

எனினும், அரசாங்கம் அவ்வாறு கூற முடியாது. புலிகள் செய்தனர் என்பதற்காக, அதனையே அரசாங்கம் செய்ய முடியாது. தமது காணிகளில் வாழ்வதென்பது, மக்களுக்கு பிறப்பினால் கிடைக்கும் உரிமை. இதனை அரசாங்கத்தினால் மறுக்க முடியாது. 

அதேநேரம், யுத்தத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள், வடக்கில் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இறுதி யுத்தத்தில் யுத்த மீறல்கள் இடம்பெற்றிருப்பதான குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசாங்கத்தின் சார்பில் யுத்தம் புரிந்த சகல இராணுவ வீரர்களும், யுத்தக் குற்றவாளிகள் எனக் கூற முடியாது. 

களத்திலிருந்து போராடிய இராணுவ வீரர்கள் உயர்மட்டத்திலிருந்து கிடைத்த கட்டளைகளையே நிறைவேற்றினார்கள். இருந்தபோதும், களத்திலிருந்து போராடிய இராணுவ வீரர்கள், தனிப்பட்ட ரீதியில் குற்றமிழைத்திருக்கலாம். அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு தண்டனை வழங்குவதுடன், அவர்களுக்கு கட்டளையிட்டவர்களுக்கும் சட்டரீதியான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். 

அது மாத்திரமன்றி இராணுவத்தினருக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் காணப்படும் கடந்தகால கசப்புணர்வுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இராணுவத்தில் தமிழர்கள் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த காலத்தில், பல தமிழர்கள் முப்படைகளில் உயரதிகாரிகளாக இருந்தனர். இந்த நிலைமை மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும். 

அனைத்து மக்களுக்கும் நீதி, சமத்துவத்துடனான நிரந்தர சமாதானத்தை உறுதிசெய்யும் வகையில், இந்த நடைமுறைகள் நேர்மையானதும் ஒரு நோக்கம் கொண்டதுமான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுவது மிகவும் இன்றியமையாததாகும்.  

இலங்கையில் ஏற்பட்ட முரண்பாடு சர்வதேசமயமாக்கப்பட்டு, சர்வதேசத்தின் பொறுப்பில் இப்போது அப்பிரச்சினை இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைப் பேரவையில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐ.நா உள்ளிட்ட சர்வதேசத்துக்கு புதிய அரசாங்கம் வழங்கியிருக்கும் உறுதிமொழிகளிலிருந்து பின்வாங்க முடியாது. அவற்றை நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்கள், இந்நாட்டில் சமவுரிமையைப் பெற்ற பிரஜைகளாக வாழ வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

தமிழர்களுக்கு எதிரான இன அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பில், அரசியல் தீர்வு காணப்படும் வரை தொடர்வதான அச்சம் காணப்படுகிறது.

ஐக்கியமான, பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வொன்றையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கான அரசியலமைப்பொன்று தயாரிக்கப்பட்டு, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் மக்களின் ஆதரவையும் பெற்றதாக அமைய வேண்டும்” என்றார். 

"‘தமிழ் மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty