‘உண்மையைச் சொல்லாவிட்டால் சந்தேகம் வரும்’
23-02-2017 11:08 AM
Comments - 0       Views - 54

ஜே.ஏ.ஜோர்ஜ்

“மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி பிரதம நிறைவேற்று அதிகாரியின் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பிலான உண்மைத் தகவல்களை, அரசாங்கம் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், இதன் பின்னணியில் அரசாங்கம் இருக்கின்றது எனும் சந்தேகமே ஏற்படும்” என, எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி)அநுரகுமார திஸாநாயக்க, தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (22), நிலையியற்கட்டளை 23இன் கீழ் விசேடக் கூட்டொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,

“சைட்டம் பிரதம நிறைவேற்று அதிகாரியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில், பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. சைட்டத்துக்கு எதிரானவர்களால் தான் இது மேற்கொள்ளப்பட்டது என்றும், சில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டனர்.

அடையாளம் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை, அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதனைச் செய்ய, அரசாங்கம் தவறுமாக இருந்தால், இதன் பின்னணியில் அரசாங்கம் இருக்கின்றது எனும் சந்தேகமே ஏற்படும்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள், தற்போது எந்த கட்டத்தில் இருக்கின்றன? இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் எவை? சம்பவம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது உண்மையா? துரிதமாக விசாரணை நடத்தப்பட்டு, நாட்டு மக்களுக்கு உண்மை அறிவிக்கப்படுமா? போன்ற கேள்விகளுக்கு, அரசாங்கம் உடனடியாக பதில் வழங்க வேண்டும்” என்றார்.

"‘உண்மையைச் சொல்லாவிட்டால் சந்தேகம் வரும்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty