அதிகாரப் பகிர்வை ஐ.ம.சு.கூ ஆதரிக்கும்
23-02-2017 11:00 AM
Comments - 0       Views - 32

ஜே.எ.ஜோர்ஜ்

“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அதிகாரப் பகிர்வை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளது. அந்தக் கட்சியின் ஆசியுடன், வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை, விரைவில்  சமர்ப்பிக்கப்படும்” என, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“மொழி உரிமையையே தமிழர்கள் கேட்டார்கள். ஆனால், அந்தக் கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. பின்னர், அதை மையப்படுத்தியே ஏனைய பிரச்சினைகள் உருவெடுத்தன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், அவற்றைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

தற்போது பிரதான இருகட்சிகளும் கைகோர்த்துள்ளன. தீர்வைக் காண்பதற்குரிய வரலாற்றுச் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. அரசியலமைப்புச் சபையின் வழிநடத்தும் குழு, இதுவரையில் 50 தடவைகள் கூடியுள்ளது.

அதிகாரப் பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. 13 பிளஸ் என முதலில் கூறியதும் மஹிந்த ராஜபக்ஷதான் என்பதையும், இங்கு குறிப்பிடுகின்றோம்.

சிறுபான்மையின மக்கள், ஐ.தே.கவுக்கே வாக்களித்தனர். அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய பொறுப்பு, எமக்கு இருக்கின்றது. இதை மறந்துச் செயற்பட முடியாது” என்றார்.

"அதிகாரப் பகிர்வை ஐ.ம.சு.கூ ஆதரிக்கும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty