2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிலவுக்குடியிருப்பு விவகாரத்துக்கு ‘பகிர்வு’ இன்றேல் ‘நட்டஈடு’

Kogilavani   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேனகா மூக்காண்டி

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு விமானப் படை அமைந்துள்ள காணியில், பொதுமக்களுக்குச் சொந்தமான பகுதியை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.   இந்நிலையில், குறித்த படை முகாமில், 54 குடும்பங்களுக்குச் சொந்தமாகவுள்ள சுமார் 40 ஏக்கர் காணியினை, எதிர்வரும் சில நாட்களில் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சு சமிக்ஞை காட்டியுள்ளது. 

அவ்வாறில்லாவிடின், அந்தக் காணிகளுக்கான நட்டஈட்டினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பாதுகாப்பு அமைச்சில் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட, நாடாளுமன்றம் மற்றும் சிவில் விவகார மேலதிகச் செயலாளர் ஏ.பி.ஆர்.ராஜபக்ஷ, மேற்படி கேப்பாப்புலவு காணி விவகாரம் தொடர்பில் மேலும் கூறியதாவது,   

“பிலவுக்குடியிருப்பு விமானப்படை முகாம் அமைந்துள்ள காணியானது, அரசாங்கத்துக்குச் சொந்தமானதாகும். அதில், ஒரு பகுதி வனஇலாகா திணைக்களத்துக்குச் சொந்தமாக இருக்கின்றது.   

யுத்தம் நிலவிய காலப்பகுதியில், குறித்த பகுதிக் காணிகளை, மாவீரர் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்குமாறு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால், மாவட்ட அரசாங்க அதிபருக்கு அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. இந்த அழுத்தம் காரணமாக அக்காணி, 2005ஆம் ஆண்டில் அரசாங்க அதிபரினால் அரசாங்கத்துக்குச் சொந்தமாக எழுதிக்கொடுக்கப்பட்டது.   

அவ்வாறு அரசாங்கத்துக்குச் சொந்தமாக்கப்பட்ட காணியிலேயே, படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 40 ஏக்கர் காணி, பொதுமக்களுக்குச் சொந்தமாக இருக்கின்றதென, கண்டறியப்பட்டுள்ளது. 54 குடும்பங்களுக்குரிய அந்தக் காணியை, அம்மக்களிடமே கையளிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. மாவட்ட அரசாங்க அதிபரும், அதனையே வலியுறுத்தியுள்ளார்.   

எனவே, வெகு விரைவில் அக்காணி, பொதுமக்களிடம் பகிர்ந்தளிக்கப்படும். அல்லது, அக்காணிக்கான நட்டஈடு வழங்கப்படும். காணி பகிர்ந்தளிக்கப்படும் பட்சத்தில், அரசாங்கத்துக்கும் வனஇலாகாவுக்கும் சொந்தமாக எஞ்சியுள்ள காணியில், முகாம் அமைந்திருக்கும்” என்று, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .