‘தமிழர்கள் என்பதனாலா பாராமுகம்’
24-02-2017 11:24 AM
Comments - 0       Views - 40

-ஜே.ஏ.ஜோர்ஜ்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவுப் பிரதேசத்தில் கடந்த 24 நாட்களாகப் பொதுமக்கள், தமது நிலங்களை விடுவிக்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சுட்டிக்காட்டிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், “தமிழ் மக்கள் என்பதன் காரணமாகவா அவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கெடுக்க, அரசாங்கம் முன்வரவில்லை. இதே, தெற்கில் உள்ள சிங்கள மக்கள் போராடியிருந்தால், அரசாங்கம் இவ்வாறு பாராமுகமாக இருக்குமா?” என்று கேள்வியெழுப்பினார்.   

நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற காணி எடுத்தற் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“வடக்கில் உள்ள மக்களின் காணிகளைப் படையினர், வன வளத்திணைக்களத்தினர் மாத்திரமின்றி, தொல்பொருள் திணைக்களத்தினரும் கையகப்படுத்தி வருகின்றனர்.   

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள இடங்களை தமக்கு தேவையென தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. திருகேதீஸ்வரம் ஆலயத்துக்கு அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன், அதில் 3 ஏக்கர் காணியில் பௌத்த விகாரை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.   

பௌத்தர்களே இல்லாத இடத்தில், அதுவும் தனியார் காணியைக் கையகப்படுத்தி, தொல்பொருள் திணைக்களம், இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளமை கண்டிக்கத்தக்கது.   

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக வடக்கில் உள்ள மக்களின் நிலங்கள் தொடர்ந்தும் அபகரிப்புச் செய்யப்படுகின்றன. வட மாகாணத்தில் உள்ள ஒரு இலட்சத்து 50 ஆயிரம் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.   

நிலங்களை விடுவிப்பதாக இந்த அரசாங்கம் வாக்குறுதி அளித்தாலும், படையினரால் கைப்பற்றப்பட்ட நிலங்களில், 3.6 சதவீதம் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளன.   

முல்லைத்தீவில் 19,790 ஏக்கர், கிளிநொச்சியில் 12,840 ஏக்கர், வவுனியாவில் 23,778 ஏக்கர், யாழ்ப்பாணத்தில் 6,270 ஏக்கர் மற்றும் மன்னாரில் 7,314 ஏக்கர் என 69,992 ஏக்கர் நிலப்பரப்பு, படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வெறும் 2,500 எக்கர் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளன.   

20 -25 வருடங்களாகத் தமது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேறி வாழும் மக்கள், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும்.   

முல்லைத்தீவு, கேப்பாப்புலவுப் பிரதேசத்தில் கடந்த 24 நாட்களாகப் பொதுமக்கள், தமது நிலங்களை விடுவிக்கக்கோரி, கோரிக்கைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என யாருமே உரிய தீர்வு வழங்க முன்வரவில்லை.  54 மாணவர்கள் 24 நாட்களாகப் பாடசாலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   

இந்நிலையில், புதுக்குடியிருப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய நிலம் விடுவிக்கப்படுமென, கடந்த 9ஆம் திகதி கொழும்பில் வைத்து, பிரதமர் வாக்குறுதியளித்த போதும், அதன் பின்னர், 2014ஆம் ஆண்டு, குறித்த நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக, வர்த்தமானி வெளியிடப்பட்டதாகத் தகவல் வெளிவந்தது.   

நில அளவைத் திணைக்களத்தினால், மக்களுடைய காணிகள் சுவீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும்.   

தென் பகுதியில் உள்ள மக்களின் காணிகளைப் படையினர் கைப்பற்றி, அதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தால், நிலைமை இப்படி இருக்காது. பெளத்த மதத் தலைவர்கள் உள்ளிட்டவர்களும் ஆதரவு தெரிவித்து, இரண்டு நாட்களில் தீர்வைப் பெற்றுக் கொடுத்திருப்பார்கள்.   

கேப்பாப்புலவு மக்கள், தமிழர்கள் என்பதாலும் தமிழர்களின் நிலம் என்பதாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வர உதவிய தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் முன்வர வேண்டும்” என்றார். 

"‘தமிழர்கள் என்பதனாலா பாராமுகம்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty