சந்தேகநபர் மரணம்; 6 பொலிஸார் கைது
27-02-2017 10:08 AM
Comments - 0       Views - 93

பேலியகொடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த பியகம, ரக்கவத்த பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை (வயது 41) ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில், அந்த நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் அறுவர், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

சந்தேகநபர் மரணமடைந்தமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, நேற்றுக் காலை பணித்திருந்த நிலையில், நேற்று மாலையே இந்த அறுவரும் கைதுசெய்யப்பட்டனர்.  

பேலியகொடைப் பொலிஸாரினால் நேற்று (26) அதிகாலை கைதுசெய்யப்பட்ட அந்த நபர், பொலிஸ் கூண்டுக்குள் வைத்தே, சுகயீனமடைந்துள்ளார். அதன் பின்னர் அந்நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார். 

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரிலேயே, சந்தேகத்தின் பேரில் அந்நபரை பொலிஸார் கைதுசெய்திருந்தாக பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார். 

பிரேத பரிசோதனைக்கு பின்னரே, மரணம் தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும் என்றும் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார். 

எனினும், இந்த மரணத்தில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக, மரணமடைந்த நபரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

"சந்தேகநபர் மரணம்; 6 பொலிஸார் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty