பட்டினி, நோயால் 2 நாட்களில் 110 பேர் பலி
05-03-2017 09:19 PM
Comments - 0       Views - 23

வளைகுடாப் பகுதியில் நிலவும் வறட்சியொன்றால், 48 மணித்தியாலங்களில், பட்டினி, வயிற்றுப்போக்கினால் குறைந்தது 110 பேர் இறந்துள்ளதாக, சோமாலியப் பிரதமர் ஹசன் அலி கஹைய்ரே அறிவித்துள்ளார்.  

தேசிய பேரிடரொன்றுக்குச் சமமான வறட்சி நிலவுவதாக சோமாலிய அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையினைத் தொடர்ந்தே, பிரதமரின் மேற்படி அறிவிப்பு, நேற்று (04) வெளியாகியுள்ளது.  

“கால்நடை மேய்ப்பாளர்களுக்கும் அவர்களின் கால்நடைகளுக்கும்,  கடினமான நிலை இதுவாகும். சிலர் பட்டினியாலும் வயிற்றுப்போக்கினாலும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். வளைகுடாப் பிராந்தியத்தில், பட்டினியாலும் வயிற்றுப்போக்கினாலும் கடந்த 48 மணித்தியாலங்களில் 100 பேர் இறந்துள்ளனர்” என அறிக்கையொன்றில் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

பஞ்சப் பதிலளிப்பு செயற்குழுவுடனான சந்திப்பொன்றையடுத்து வெளியிடப்பட்ட மேற்படி அறிக்கையில், “தன்னால் முடிந்ததை சோமாலிய அரசாங்கம் செய்யுமென்றும், இறந்து கொண்டிருக்கின்ற சோமாலியர்களுக்கு உதவுமாறு, எங்கும் இருக்கின்ற அனைத்து சோமாலியர்களையும் வலியுறுத்துகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.  

சோமாலியாவின் தென்மேற்குப் பகுதியே, மேற்குறிப்பிடப்பட்ட வளைகுடாப் பிராந்தியமாகும்.  

பைடோ நகரத்தைச் சூழவுள்ள கிராமங்களில், சிறுவர்களும் வயதானவர்களுமே பெரும்பாலாக இறந்ததாக, அரசாங்கத்தின் பிராந்திய மனிதாபிமானத் தலைவர் அப்துல்லாஹி ஓமர் றோப்லே தெரிவித்துள்ளதுடன், அனைத்து நோயாளர்களுக்கும் சிகிச்சையளிப்பதற்கு, போதுமான மருந்துகள் இல்லையென்றும் கூறியுள்ளார்.  

வறட்சியினால், கடுமையான வயிற்றுப்போக்கு, கொலரா, தட்டம்மை போன்றவை பரவுவதுடன், நீரினால் ஏற்படும் நோய்களினால் பீடிக்கப்படும் அபாயத்தில், 5.5 மில்லியன் பேர் உள்ளனர்.  

கொலராவினால், கடந்த வெள்ளிக்கிழமை (03) முதல் குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, உள்ளூர் அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 70 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

"பட்டினி, நோயால் 2 நாட்களில் 110 பேர் பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty