ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான தாக்குதல்களில் 21 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்
05-03-2017 10:00 PM
Comments - 0       Views - 10

ஈராக், சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் இலக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான விமானத் தாக்குதல்களில், பொதுமக்கள் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அதிகாரிகள், நேற்று (04), ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அந்தவகையில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகள் 2014ஆம் ஆண்டு ஆரம்பித்தது முதல் பொதுமக்கள் 220 பேர், தற்செயலாகக் கொல்லப்பட்டுள்ளனர். எவ்வாறெனினும், விமர்சகர்களின் கருத்துப்படி, கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகமாகும். 

கூட்டணியின் அறியப்பட்ட விமானத் தாக்குதல்களை பட்டியற்படுத்துகின்ற, ஊடகவியலாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் கொண்டுள்ள இலண்டனைத் தளமாகக் கொண்ட எயார்வோர்ஸின் கருத்துப்படி, கூட்டணியின் தாக்குதல்களினால், ஏற்படுத்தப்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புகள், குறைந்தது 2,463 ஆகும்.     

விமானத் தாக்குதல்களினால் ஏற்படுத்தப்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புகள் என்று கூறப்படுபவை குறித்த தொடர் அறிக்கைகளை விசாரணையாளர்கள் விசாரணை செய்வதாக, கூட்டணியினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஒரு வீட்டிலிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் ஆயுததாரிகள் மீது ஜனவரி 13ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதலொன்றில், தற்செயலாக  பொதுமக்கள் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக, விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  

தாக்குதலுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட காணொளி ஆராய்ச்சியில், தாக்குதலுக்கு முன்னர் காணப்பட்டிருக்காத பொதுமக்கள், வீடொன்றுக்கு அருகில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அறிக்கையொன்றில் கூட்டணி தெரிவித்துள்ளது.  

இதேவேளை, தலைக்கு மேலே வட்டமிடும் விமானமொன்றிலிருந்தோ அல்லது ட்ரோனொன்றிடமிருந்தோ குண்டு வீசப்பட்ட பின்னர், குண்டினால் ஏற்படுத்தப்படும் அழிவடையும் வலயத்துக்குள் பொதுமகன் நுழையும்போதும்,  தற்செயலாக இறப்புக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒரு குண்டு, தனது இலக்கை அடைவதற்கு 30 செக்கன்கள் எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

"ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான தாக்குதல்களில் 21 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty