‘கிம்’-இன் கொலையையடுத்து வடகொரிய தூதுவரை வெளியேற்றுகிறது மலேஷியா
05-03-2017 10:45 PM
Comments - 0       Views - 22

வடகொரியத் தூதுவர் கங் சோல்-ஐ வெளியேற்றுவதாக, நேற்று (04), மலேஷியா தெரிவித்துள்ளது. தூதுவர் கங் சோல் ஏற்றுக்கொள்ளப்படாத நபர் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், 48 மணித்தியாலங்களுக்குள் மலேஷியாவை விட்டு வெளியேறுமாறு வினவப்பட்டுள்ளார்.  

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்-இன் ஒரு வழிச் சகோதரரான கிம் ஜொங்-நம், மலேஷியத் தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, கடந்த மாதம் 13ஆம் திகதி கொல்லப்பட்டிருந்தார்.  

இந்நிலையில், மலேஷியா விசாரணையைக் கையாளும் முறைமையை வடகொரியா நம்பாது என கடந்த மாதம் தெரிவித்திருந்த தூதுவர் கங் சோல், தமது பரம வைரியான தென்கொரியாவை சுட்டிக்காட்டும் முகமாக, வெளிச்சக்திகளுடன் மலேஷியா கூட்டுச்சதி மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.  

இந்நிலையில், மேற்படி கருத்துகள், இராஜதந்திர ரீதியாக மரியாதையற்றவை என மலேஷியாவின் பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்திருந்தார்.  

இதேவேளை, வடகொரியத் தூதுவரிடமிருந்து மன்னிப்பை மலேஷியா கோரியதாகவும், ஆனால், எதுவும் வரவில்லை என, அறிக்கையொன்றில் மலேஷிய வெளிநாட்டமைச்சர் அனிபாஹ் ஹஜி அமன், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், ஐக்கிய நாடுகளினால் வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மலேஷியா மீறியிருக்கலாம் என்ற கருத்துகளை, நேற்று முன்தினம் மலேஷியா நிராகரித்துள்ளது. வடகொரியாவுடன் தொடர்புடைய நிறுவனங்கள், மலேஷியாவில் ஆயுத வலையமைப்பொன்றை நடாத்தின என அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தமையைத் தொடர்ந்தே, மலேஷியாவின் இந்த நிராகரிப்பு வந்துள்ளது.

"‘கிம்’-இன் கொலையையடுத்து வடகொரிய தூதுவரை வெளியேற்றுகிறது மலேஷியா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty