பிரம்பு
07-03-2017 01:44 PM
Comments - 0       Views - 69

                          - முகம்மது தம்பி மரைக்கார்  

ஏட்டிக்குப் போட்டியாக முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு கூட்டங்கள் கடந்த வாரம் நிந்தவூரில் நடைபெற்றன.   

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி கலந்து கொண்ட கூட்டம், அவரின் சொந்த ஊரான நிந்தவூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனக்கும், சமூகத்துக்கும் ஏகப்பட்ட அநியாயங்களைச் செய்ததாக, அந்தக் கூட்டத்தில் கூறிய ஹசன் அலி, அவற்றினைப் பட்டியலிட்டுப் பேசினார்.   

மறுநாள் சனிக்கிழமை, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் நிந்தவூருக்கு வந்து, கூட்டமொன்றில் கலந்து கொண்டார். ஹசன் அலியின் கூட்டத்துக்குப் பதிலடியாக அந்தக் கூட்டம் அமைந்தது. ஹசன் அலியின் கூட்டம் திறந்த வெளியிலும், ஹக்கீமுடைய கூட்டம் பிரதேச சபை மண்டபத்திலும் நடைபெற்றிருந்தன.  

ஹசன் அலியின் கூட்டத்தை, நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான எம்.ஏ.எம். தாஹிர் தலைமையேற்று நடத்தினார்.   

அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் முன்னின்று செயற்பட்டார்.

ஹசன் அலியின் கூட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர், அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் காண்பதற்கு வந்திருந்தனர்.  

ஹசன் அலியின் கூட்டத்தை நடத்துவதற்கு சம்மாந்துறை பொலிஸாரிடம் கூட்ட ஏற்பாட்டாளர்கள் எழுத்து மூலம் அனுமதி கோரியிருந்தனர்.

ஆனால், அனுமதி வழங்க முடியாது என்று, கூட்டம் நடைபெறவிருந்த தினம் சம்மாந்துறை பொலிஸார் கூறிவிட்டனர். இதனையடுத்து, கூட்ட ஏற்பாட்டாளர்கள், விடயத்தை நீதிமன்றம் கொண்டு சென்றார்கள். கூட்டத்தை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஹசன் அலி தரப்பினருக்கு இது உற்சாகம் தரும் வெற்றியாக அமைந்தது. 

முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், சுகாதார பிரதியமைச்சருமான பைசால் காசிமும் நிந்தவூரைச் சொந்த இடமாகக் கொண்டவராவார். இவர் ஹக்கீம் தரப்பைச் சேர்ந்தவர். ஹசன் அலியின் கூட்டத்துக்கு பைசால் காசிம் தரப்பினர், களத்தில் நின்று நேரடி எதிர்ப்பினை வெளியிடுவார்களென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியெதுவும் நடக்கவில்லை.  

ஹசன் அலியின் கூட்டத்துக்கு பதிலடியாக நிந்தவூரில் நடைபெற்ற மு.கா தலைவரின் கூட்டத்தை, ஹசன் அலியின் இளைய சகோதரரான ஜப்பார் அலி என்பவர் தலைமையேற்று நடத்தினார். குறித்த கூட்டத்துக்கு ஹக்கீம் வருகை தருவதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில், வீதியில் டயர்கள் எரிக்கப்பட்டன.   

ஹக்கீம் வருவதற்கு முன்பாக, எரிந்து கொண்டிருந்த டயர்களை கூட்ட ஏற்பாட்டாளர்கள் அணைத்து விட்டனர். அந்தக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களில் கணிசமானோர் கலந்து கொண்டனர்.   

அங்கு உரையாற்றியவர்கள் அனைவரும் ஹசன் அலியின் கூட்டம் தொடர்பாகவே பேசினார்கள். மு.கா தலைவர் ஹக்கீமும், ஹசன் அலியின் கூட்டம் பற்றியும் அதனை முன்னின்று நடத்தியவர்கள் குறித்தும்தான் அதிகம் பேசினார். ஹசன் அலியின் கூட்டம் மு.கா தலைவரை வெகுவாகப் பாதித்திருந்ததை அவரின் உரை வெளிப்படுத்தியது.  

“ஹசன் அலி வேதனையுடன் இருக்கின்றார். அவர் கூட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், ஹசன் அலியைப் பகடையாக வைத்து, சிலர் சித்து விளையாட்டுக் காட்டுகின்றார்கள்” என்று மு.கா தலைவர் ஹக்கீம், நிந்தவூர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது கூறினார்.   

ஆனாலும், ஹசன் அலியைப் பகடையாக வைத்து, சித்து விளையாட்டுக் காட்டுபவர்கள் யார் என, மு.கா தலைவர் இதன்போது பெயர் குறிப்பிடவில்லை. இருந்தாலும், நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் தாஹிர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில் ஆகியோரைத்தான் ஹக்கீம் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதை, அவரின் முழு உரையினையும் செவிமடுத்தவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.  

“கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் தொடர்பில் என்னிடம் அவர்கள் முறையிட்டனர். நஸீர் தொடர்பில் நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள். நான் பிரம்பெடுக்கத் தொடங்கினால், கட்சியில் ஒருவரும் எஞ்ச மாட்டார்கள். ஆனால், இப்போது எனக்கே பிரம்பெடுத்துள்ளார்கள்” என்றும் மு.கா தலைவர் ஹக்கீம் தனது உரையில் குறிப்பிட்டார்.  

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கூறிய மேற்படி விடயமானது மிகவும் கவனத்துக்குரியதாகும். கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக, தான் தண்டனை வழங்கத் தொடங்கினால், அனைவரும் சிக்கிக் கொள்வார்கள் என்பதைத்தான், பிரம்புக் கதையின் மூலமாக அவர் குறிப்பிட்டார்.   

அதாவது, கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் தண்டிக்கப்படக் கூடிய வகையிலான குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்பதைத்தான் ஹக்கீம் அப்படிக் கூறினார். மேலும், கட்சியின் முக்கியஸ்தர்கள் செய்த குற்றங்கள் குறித்து தான், அறிந்து வைத்திருப்பதையும், இதனூடாக ஹக்கீம் வெளிப்படுத்தியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. ‘பிரம்பெடுத்தல்’ என்பதற்கு இந்த இடத்தில் ‘தண்டித்தல்’ என்று அர்த்தமாகும்.  

இது இவ்வாறிருக்க, அம்பாறை மாவட்டத்திலுள்ள 17 முஸ்லிம் ஊர்களிலும் நிந்தவூரில் நடத்தியது போன்று, கூட்டங்களை தாம் நடத்தவுள்ளதாக, ஹசன் அலி தரப்பு அறிவித்துள்ளது.   

இந்த நிலையில், “முடிந்தால் அவ்வாறான கூட்டங்களை நடத்திக் காட்டட்டும்” என்று, மு.கா தலைவர் ஹக்கீம் நிந்தவூரில் வைத்து சவால் விடுத்திருக்கின்றார். இது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்துவற்கான உரிமைகளுக்குச் சவால் விடுப்பதை, ஜனநாயக விரும்பிகள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

ஹசன் அலியின் நிந்தவூர்க் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. முஸ்லிம் காங்கிரஸின் கட்சிக் கீதம் ஒலிக்க விடப்பட்டது. கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மற்றும் கட்சியின் மரச்சின்னம் ஆகிவற்றினை உள்ளடக்கிய பதாகை மேடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்து.   

அங்கு உரையாற்றிய சட்டத்தரணி அன்சில், “முஸ்லிம் காங்கிரஸின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே, இந்தக் கூட்டத்தை நாங்கள் நடத்துகின்றோம்” என்று கூறினார். 

  

கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகச் செயற்படும் தலைமையின் தவறுகளை அம்பலப்படுத்துவதுதான் தமது நோக்கம் என்றும், தாம் உண்மையின் பக்கம் நிற்பதாகவும் ஹசன் அலியின் கூட்டத்தில் பேசியோர் தெரிவித்தனர்.  

மேலும், “தனிப்பட்ட நலன்கள் குறித்து யோசிப்பவர்களாக நாங்கள் இருந்தால், ஹக்கீமை சார்ந்திருப்பதுதான் எமக்கு இலாபமாகும். ஆனால், நாங்கள் உண்மையின் பக்கம் இருக்க விரும்புகிறோம்.

மு.கா தலைவர் தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை, கண்களால் கண்டதன் பின்னர்தான், இவ்வாறானதொரு நிலைப்பாட்டினை நாங்கள் எடுத்தோம்” என்று, ஹசன் அலியின் மேடையில் உரையாற்றிய அன்சில் மேலும் கூறினார். இருந்தபோதும், தாங்கள் கண்ணால் கண்ட அந்த ஆதாரங்கள் எவை என்று அன்சில் குறிப்பிடவில்லை.  

அந்தக் கூட்டத்தில் ஹசன் அலி இறுதியாக உரையாற்றினார். அவரின் உரை உணர்வுபூர்மாக அமைந்தது. “என்னிடமிருந்த செயலாளர் பதவியைப் பறித்தெடுத்து விட்டு, அழுகையுடன் என்னை வெளியேற்றினார்கள்” என்று ஹசன் அலி கூறியபோது, கூட்டம் உணர்ச்சிவசப்பட்டது.  

“மு.கா தலைவருக்கு எதிராக இந்தக் கூட்டத்தை நாங்கள் நடத்தவில்லை, அவரைத் திருத்துவதற்காகவே, இந்த முயற்சியை எடுத்துள்ளோம். மு.காவுக்கு ஹக்கீம்தான் தலைவர்” என்று ஹசன் அலி தனது உரையைத் தொடர்ந்தபோது, கூட்டத்தைக் காண வந்தோர் ஆக்ரோசமாகச் சத்தமிட்டார்கள்.  

“ஹக்கீமின் தலைமை எமக்குத் தேவையில்லை” என்று, அவர்கள் கோசமிட்டார்கள். அவர்களை அடக்கி விட்டு, ஹசன் அலியின் உரையைத் தொடரச் செய்வதற்கு, ஏற்பாட்டாளர்கள் பெரும் சிரமப்பட்டனர். ஹசன் அலி தரப்பினருக்கு நிந்தவூர் கூட்டம் பெரு வெற்றியாக அமைந்தது. 

ஆனாலும், இவ்வாறான கூட்டங்களை நடத்துவதனூடாக, மு.காங்கிரஸுக்குள் அந்தக் கட்சியின் தலைவர் ஹக்கீமுக்குள்ள ஆதரவினை அத்தனை இலகுவாக உடைத்தெறிந்து விட முடியாது என்கிற உண்மையினையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.  

அதனை ஹசன் அலி தரப்பினரும் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். முஸ்லிம் காங்கிரஸின் யாப்புத் திருத்தங்களினூடாக, கட்சிக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பு ஹக்கீமுக்கு மிகவும் சாதகமானதாகும்.

அதாவது, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உள்ளிட்ட நிருவாகப் பதவிகளுக்கு நபர்களைத் தெரிவு செய்யும் அதிகாரம், அந்தக் கட்சியின் உயர்பீடத்துக்கு உள்ளது. மு.காவின் உயர்பீடத்தில் 90 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்களில் 56 பேரை மு.கா தலைவர்தான் தனது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தெரிவு செய்வார். இவ்வாறான உயர்பீடமானது மு.கா தலைவருக்கு விசுவாசமாகவே இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  

எனவே, இப்போதைக்கு, உயர்பீடத்தினூடாக மு.கா தலைமைப் பதவியிலிருந்து ரவூப் ஹக்கீமை அகற்றுவதென்பது அத்தனை இலகுவான காரியமல்ல.

எனவேதான், மக்களை விழிப்புணர்வூட்டுவதனூடாக, எதிர்வரும் தேர்தல்களில் ஹக்கீம் தரப்பினரைத் தோற்கடித்து, அதனூடாக மு.காவின் தலைமைப் பதவியிலிருந்து ஹக்கீமை அகற்ற முடியும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான், ஹசன் அலி தரப்பினர் பொதுக் கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளனர்.

தமது இந்த நடவடிக்கைக்கு ‘உண்மையைத் தேடும் பயணம்’ என்று, ஹசன் அலி தரப்பினர் பெயர் வைத்துள்ளனர்.   

ஹசன் அலியின் மேற்படி கூட்டத்தில் மு.காவின் இடைநிறுத்தப்பட்டுள்ள தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தை பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஆனால், பஷீர் கலந்து கொள்ளவில்லை. முஸ்லிம் காங்கிரஸின்ஆதரவாளர்களான இளைஞர்களைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடும் நடவடிக்கையொன்றினை ஏற்கெனவே, பஷீர் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸ் அல்லாத அரசியல் பிரமுகர்களை, தமது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில்லை என்று ஹசன் அலி மற்றும் பஷீர் தரப்பு தற்போதைக்குத் தீர்மானித்துள்ளனர் என அறிய முடிகிறது.   

முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரானவர்களை ஹசன் அலி மற்றும் பஷீர் தரப்பினர் தமது மேடைகளிலோ பிரசார நடவடிக்கைகளிலோ ஈடுபடுத்துவார்களாயின், அவர்களை ஹக்கீம் தரப்பு மிக இலகுவாக மலினப்படுத்தி விடக்கூடிய சந்தர்ப்பமுள்ளது.

‘ஹசன் அலியும், பஷீரும் எதிராளிகளின் கூட்டாளிகள்’என்று, ஹக்கீம் தரப்பு செய்துவரும் பிரசாரத்தை, அது உண்மைப்படுத்திவிடும். எனவே, மு.காவின் அரசியல் எதிராளிகளை தமது மேடைகளில் ஏற்றுவதில்லை என்று ஹசன் அலி மற்றும் பஷீர் தரப்பினர் எடுத்திருக்கும் முடிவு சாதுரியமானதாகும்.   

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸுக்குள் தமக்குப் பதவிகளையும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் பெற்றுக் கொள்வதற்காகவே, ஹசன் அலியும் பஷீரும் இவ்வாறு ஹக்கீம் எதிர்ப்பு நடவடிக்கையில் குதித்திருப்பதாக விமர்சனமொன்று இருப்பதையும் மறைத்து விட முடியாது.   

ஆனாலும், பிரதிநிதித்துவ அரசியலில் இனி ஈடுபடப் போவதில்லை என்று பஷீர் சேகுதாவூத் ஏற்கெனவே அறிவித்து விட்டமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது. அதாவது, உள்ளூராட்சி மன்றம் தொடங்கி நாடாளுமன்றம் வரையிலான உறுப்பினர் பதவிகளை இனி வகிக்கப் போவதில்லை என்று, பஷீர் கூறிவிட்டார்.   

இந்த நிலையில், மு.காவின் செயலாளர் பதவியோ, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியோ தனக்கு வழங்கப்பட்டாலும், அதனை - இனிமேல் தான் ஏற்கப்போவதில்லை என்று, நிந்தவூர் கூட்டத்தில் வைத்து ஹசன் அலி பகிரங்கமாகத் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

ஏற்கெனவே, ஹக்கீமுக்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் எதிர்ப்புணர்வுகள் தோன்றியுள்ள நிலையில், ஹசன் அலி மற்றும் பஷீர் ஆகியோர் எடுத்துள்ள அவதாரங்கள் நிலைமையினை இன்னும் பாரதூரமாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘நகத்தால் கிழிப்பதற்கு, தட்டுக்குத்தியும் ஆப்பும் எதற்கு’ என்று கிராமப்புறத்தில் ஒரு சொற்றொடர் உள்ளது. எளிமையாக முடிக்கும் ஒரு விடயத்தை பெரிதாக்கி கூடவே பிரச்சினையாக்குவதைக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு அந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படும்.   

ஹசன் அலி மற்றும் பஷீர் விவகாரங்களைக் கையாள்வதற்கு, மு.கா தலைவர் ‘தட்டுக்குத்தி மற்றும் ஆப்பு’ ஆகியவற்றினைத் தெரிவு செய்து விட்டார் என்கிற பேச்சுக்கள், கட்சியின் முக்கியஸ்தர்களிடம் பரவலாகவே உள்ளன.

இந்த நிலையில், ஹசன் அலி தரப்பினர், தனக்கு எதிராகப் பிரம்பினைத் தூக்கியுள்ளதாக மு.கா தலைவர் ஹக்கீம் தெரிவித்திருப்பதும் இங்கு கவனத்துக்குரியது.

அரசியல்வாதிகளின் பிரம்புகளை விடவும், மக்களின் பிரம்புகள் ஆபத்தானவையாகும். தேர்தல்களில் தோற்றுப்போன மந்திரிமார்கள் அதற்கு மிகச் சிறந்த சாட்சிகளாவர்.  

"பிரம்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty