“அணு, ஏவுகணைச் சோதனைகளை நிறுத்துக”
08-03-2017 10:30 PM
Comments - 0       Views - 37

அணு, ஏவுகணைச் சோதனைகளை நிறுத்துமாறு வடகொரியாவை நேற்று (08) கோரியுள்ள சீன வெளிநாட்டமைச்சர் வாங் யி, போருக்கான தயார்படுத்தல் என வடகொரியா கருதும் இணைந்த இராணுவ ஒத்திகைகளை நிறுத்துமாறு, ஐக்கிய அமெரிக்காவையும் தென்கொரியாவையும் கோரியுள்ளார்.  

இராணுவ ஒத்திகைகளுக்குப் பதிலடியாக, நான்கு ஏவுகணைகளை வடகொரியா, கடந்த திங்கட்கிழமை (06) ஏவியிருந்தது.  

இந்நிலையில், வேகப்படுத்தப்படுகின்ற ரயில்கள் இரண்டு, ஒன்றையொன்று நோக்கி வருவதுபோன்று, ஏவுகணைச் சோதனைகளும் இராணுவ ஒத்திகைகளும், கொரியத் தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரிப்பதா,க வாங் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, ஐக்கிய அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான “தாட்”ஐ தரையிறக்கி, தென்கொரியா தவறைப் புரிவதாகத் தெரிவித்த வாங், தரையிறக்கத்தை நிறுத்துமாறு, தென்கொரியாவை வலியுறுத்தியுள்ளார்.  

இந்நிலையில், வடகொரியாவின் அண்மைய ஏவுகணைச் சோதனைகளை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை, நேற்று முன்தினம் (07) கடுமையாகச் சாடியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு, ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்திலேயே,  குறித்த கண்டனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  

இதேவேளை, ஆசியாவுக்கான தனது முதல் விஜயத்தை, ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் றெக்ஸ் டிலெர்சன்,  மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை (15), ஜப்பானைச் சென்றடையும் அவர், 17ஆம் திகதி தென்கொரியாவுக்குச் செல்வதுடன், 18, 19ஆம் திகதிகளில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

"“அணு, ஏவுகணைச் சோதனைகளை நிறுத்துக”" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty