புதிய சர்ச்சையில் பொஸ்வா பியோன்
09-03-2017 01:04 AM
Comments - 0       Views - 13

சர்சையில் சிக்கியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான பொஸ்வா பியோன், முன்தினம் (07) வெளியிடப்பட்ட புதிய தகவலொன்றினால் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார். 

தனது கோடீஸ்வர நண்பரான லட்ரைட் டி லிஷோரேயிடமிருந்து 2013ஆம் ஆண்டு பெற்ற 50,000 யூரோ வட்டியில்லாக் கடனை வெளிப்படுத்தாத சர்ச்சையிலேயே, முன்னாள் பிரதமரான பியோன் தற்போது சிக்கியுள்ளார். இந்தத் தகவலை, லு ஹஷனா ஹொஷினே என்ற பத்திரிகையே வெளியிட்டுள்ளது.  

மேற்கூறப்பட்ட கடனை, அரச வெளிப்படைத்தன்மைக் கண்காணிப்பகத்துக்கு வெளிப்படுத்தவில்லை என்றே, நேற்று (08) வெளியான குறித்த பத்திரிகையின் பதிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், கடனானது வெளிப்படுத்தத் தேவையில்லை என பியோனின் வழக்கறிஞர் அந்தோனின் லெவி தெரிவித்துள்ளதுடன், கடன் முழுமையாகத் திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஆயினும், எப்போது கடன் திருப்பிச் செலுத்தப்பட்டது எனத் தெரிவித்திருக்கவில்லை.  

பியோன் பிரதமராகவிருந்தபோது, லட்ரைட் டி லிஷோரேக்கு, 2011ஆம் ஆண்டு, பிரான்ஸின் உயர் அரச கெளரவம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

பியோன் தனது மனைவிக்கு வழங்கிய போலி வேலைகள் தொடர்பான குற்றச்சாட்டையும் குறித்த லு ஹஷனா ஹொஷினே பத்திரிகையே முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள முதலாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலில், 18.5 சதவீதமான வாக்குகளை மட்டுமே பியோன் பெற்று மூன்றாவது இடத்தையே பெறுவார் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றனர். தீவிர வலதுசாரிக் கொள்கைகளையுடைய மரின் லு பென் 26.5 சதவீதமான வாக்குகளையும் மத்திய கொள்கைகளையுடைய இம்மானுவேல் மக்ரோன், 25.5 சதவீதமான வாக்குகளைப் பெற்று, இரண்டாம் சுற்று ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வார்கள் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.    

"புதிய சர்ச்சையில் பொஸ்வா பியோன்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty