விக்கிலீக்ஸிடம் சி.ஐ.ஏ ஹக்கிங் கருவிகள்
09-03-2017 02:17 AM
Comments - 0       Views - 35

அலைபேசிகள், தொடர்பாடல் செயலிகள், ஏனைய சாதனங்களுக்குள் உள்நுழைய அல்லது அவற்றின் பாதுகாப்பை மீறுவதற்கு, ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரகத்தால் (சி.ஐ.ஏ) பயன்படுத்தப்பட்ட இரகசியமான ஹக்கிங் கருவிகளின் தொகுதியொன்றைத் தாம் பெற்றுள்ளதாக நேற்று முன்தினம்  (07) தெரிவித்த விக்கிலீக்ஸ், இந்தத் திட்டங்கள் பற்றி கூறுகின்ற இரகசிய ஆவணங்களையும் பிரசுரித்துள்ளது.  

விக்கிலீக்ஸ் கூறியவற்றில் முக்கியமானதாக, ஐக்கிய அமெரிக்காவின் ஏனைய, வெளிநாட்டு முகவரகங்களுடன் சி.ஐ.ஏ இணைந்து, கூகிள் நிறுவனத்தின் அன்ட்ரொய்ட் இயக்குதளத்தை பயன்படுத்தி, குறியீட்டுச் சொற்களால் மறைக்கப்படுவதற்கு முன்னர் குரல், தகவல்களைச் சேகரிக்கின்ற அலைபேசிகளை ஹக் செய்வதன் மூலம் பிரபலமான தகவல் பரிமாற்றச் செயலிகளான வட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்றவற்றின் குறியீட்டுச் சொற்களால் மறைக்கப்படுவதைத் தாண்டிச் சென்றுள்ளது.  

இதேவேளை, சம்சுங் திறன் தொலைக்காட்சியினுள் ஊடுருவக் கூடிய வழிவகைகளை, ஐக்கிய அமெரிக்க, பிரித்தானிய அதிகாரிகள் வடிவமைத்ததாக,  ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சி நிறுத்தப்பட்டிருந்தது போன்று தோன்றச் செய்து, அறையினுள் நடக்கும் கலந்துரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  

விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட ஆவணங்களை உடனடியாக உறுதி செய்ய முடியவில்லையென்றபோதும், 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை திகதியிடப்பட்டுள்ள இந்த ஆவணங்கள் உண்மையானவை என, சில ஒப்பந்தக்காரர்களும் தனியார் இணையப் பாதுகாப்பு நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.  

எவ்வாறெனினும், மேற்படி விடயம் குறித்து கருத்துத் தெரிவிக்க சி.ஐ.ஏயும் வெள்ளை மாளிகையும் மறுத்துள்ளன. உளவு ஆவணங்கள் குறித்த உண்மைத்தன்மை குறித்து தாம் கருத்துத் தெரிவிப்பதில்லை என சி.ஐ.ஏ-இன் பேச்சாளர் ஜொனத்தன் லியு, அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.  

தனது அன்ட்ரொய்ட் இயக்குதளத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஹக்கிங் குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ள கூகிள், இந்த விடயத்தை விசாரணை செய்வதாகக் கூறியுள்ளது.  

விக்கிலீக்ஸினால் பிரசுரிக்கப்பட்ட பட்டியலொன்றில், அப்பிளின் ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் காணப்பட்ட குறைபாடுகளை, சி.ஐ.ஏயும் ஏனைய புலனாய்வு முகவரகங்களும் வாங்கியதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பத்தை மீறுவதற்காக, ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்,  இரகசியமான மென்பொருட்களை வாங்குவதற்கான முதலாவது பொதுவெளி ஆதாரம், இந்த ஆவணங்களாக இருக்குமென்று எட்வேர்ட் ஸ்னோடன் டுவிட்டரில் கூறியுள்ளார்.  

மேற்கூறப்பட்ட தகவல்கள், 7,818 இணையப் பக்கங்களிலும் 943 சேர்க்கைகளிலும் இருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

"விக்கிலீக்ஸிடம் சி.ஐ.ஏ ஹக்கிங் கருவிகள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty