‘அரசியல்வாதிகளுக்கும் மாணவர்களுக்கும் பொலிஸார் பாகுபாடு’
10-03-2017 02:00 AM
Comments - 0       Views - 43

ஜே.ஏ.ஜோர்ஜ்

“எம்.பிகளுக்கு, காயங்கள், சிராய்வுகள் ஏற்படக்கூடும் என்ற அவதானத்தினாலேயே சபைக்குள் நுழையும் பொலிஸாரின் சின்னங்கள், இலக்கங்கள், இடுப்புப்பட்டி போன்றவை கழற்றப்படுகிறன. ஆனால், இலவசக் கல்வியை பாதுகாப்பதற்காக இன்று போராடும் மாணவர்களுக்கு, இந்த அரசாங்கம் கண்ணீர்புகை, தடிகளால் பதில் கூறி வருகின்றது” என்று, எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க கூறினார். 

சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரி தொடர்பில், நேற்று (09) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “முதலீட்டுச் சபையின் அனுமதி, பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி என்பவற்றை மோசடியான முறையில், சைட்டம் நிறுவனம் பெற்றுக்கொண்டது. நீதிமன்ற தீர்ப்பின் போதும் சுகாதார அமைச்சும், சைட்டம் நிறுவனமும் மோசடி செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.  

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்திலும் இந்தத் திருட்டு மருத்துவப் பட்டத்தினை வழங்கும் சைட்டம் நிறுவனத்தின் மோசடி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, சைட்டம் நிறுவனம் தொடர்பில் நடைபெறும் இந்த விவாதத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும்.  

ரணில் - மைத்திரி கூட்டணி சேர்ந்து அமைத்துள்ள இந்த தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சைட்டம் விவகாரம் தொடர்பில் உரிய தீர்வொன்று பெற்றுக்கொடுக்கவில்லை. ஜனாதிபதி ஒரு புறம், சைட்டம் தொடர்பில் விசாரணைக் குழுக்களை நியமிக்கிறார். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இப்பிரச்சினை தொடர்பில் தொடர்ந்து நழுவல் போக்கை பின்பற்றி வருகின்றார்.  

ஆகவே, சைட்டம் நிறுவனம் தொடர்பிலான இந்த விவாதத்தில் தற்போதைய அரசாங்கத்தின் பிரதானிகளான ஜனாதிபதியும் பிரதமரும், தமது நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும்” என்றார்.  

"‘அரசியல்வாதிகளுக்கும் மாணவர்களுக்கும் பொலிஸார் பாகுபாடு’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty