‘சைட்டத்தை தடைசெய்தால் சிறைசெல்ல நேரிடும்’
10-03-2017 01:10 AM
Comments - 0       Views - 65

ஜே.ஏ.ஜோர்ஜ்

“நீதிமன்றத் தீர்ப்பை மீறி, சைட்டத்தை (மருத்துவத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான தெற்காசிய நிறுவகம்) தடை செய்தால், எமக்கு சிறைக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்” என்று, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்க்கல்வி அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற, சைட்டம் விவகாரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், “சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பிலான ஆரம்பகட்ட நடவடிக்கைகள், அக்காலத்தில் எடுக்கப்பட்டபோது, எந்தவோர் ஆர்ப்பாட்டமும் எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. 

ஆனால், தற்போது இவ்விவகாரம் பெரிதாகியுள்ள பின்னணில், மோசமானதோர் அரசியல் காரணி இருக்கிறது. இது தொடர்பில், வைத்தியபீட உபவேந்தர்களை அழைத்து நான் பேச்சு நடத்தியபோது, சைட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மருத்துவபீடத்தால் நடத்தப்படும் பரீட்சையில் தோற்றுவதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை” என்று தெளிவாகக் கூறினர்.  

எனினும், சில மோசமான ஆட்சி மோகம் கொண்ட அரசியல் நடவடிக்கையினால் தான் தற்போது இந்தப் பிரச்சினை பெரிதாகியுள்ளது. 

அந்தவகையில், பல்கலைக்கழக மாணவர்களையும் வைத்தியர்களையும் தூண்டிவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றவே சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அக்காலத்தின்போது இதுவிவகாரம் குறித்து எவரும் பேசவில்லை. தற்போது நீதிமன்றில், சைட்டம் தொடர்பில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

கொத்தலாவெல மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டபோது, மருத்துவசபை பேணிய தரக்கட்டுப்பாட்டுக்கும், சைட்டம் தொடர்பிலான தரக்கட்டுப்பாட்டுக்கும் இடையில் வித்தியாசங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.  

எனவே, தயவு செய்து மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். இவர்களை மருத்துவசபையினால் நடத்தப்படும் பரீட்சைக்கு அனுமதித்துள்ள நிலையில், அதனைத் தடுக்க முயல வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்த இந்த மாணவர்களின் எதிர்க்காலத்தைப் பாதுகாக்க வேண்டும். 

மேலும் சைட்டம் தொடர்பில் நீதிமன்றினால் தீர்ப்பொன்று வெளியிடப்பட்டுள்ளமையால் அதனை தடை செய்யும் வகையில் நாம் செயற்பட்டால் எமக்கு, சிறைச்செல்லவும் நேரிடும்” என்றார்.  

"‘சைட்டத்தை தடைசெய்தால் சிறைசெல்ல நேரிடும்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty