‘கிளி.யில் புலிகள் கொல்லவில்லை’
10-03-2017 01:27 AM
Comments - 0       Views - 60

ஜே.ஏ.ஜோர்ஜ்

“1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களது விவரங்கள் தொடர்பான சரியான தரவுகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை” என, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, நாடாளுமன்றில் நேற்று (09) தெரிவித்தார். 

வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

விடுதலைப் புலிகளால், 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்களது விவரங்களை உதயசாந்த எம்.பி கேட்டிருந்தார். 

அதற்கு பதிலளித்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், “கிளிநொச்சி மாவட்டமானது, 1983ஆம் ஆண்டு முதல் 2009 வரையிலான காலப்பகுதியினுள் அரச நிர்வாகத்துக்கு உட்பட்டிருக்கவில்லை. யுத்தம் நிறைவடைந்த பின்னர்,  

 2009 ஆம் ஆண்டிலே அங்கு பொலிஸ் நிலையங்கள் இயங்கத்தொடங்கின. அதன் காரணமாக, 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் அங்கு, புலிகளால் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. 

இதேவேளை, 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, புலிகளால் எந்தவொரு படுகொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை” என்றார். 

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தொடர்பில் எழுப்பப்பட்டிருந்த மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “1983 முதல் 2009 வரை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 190 பேர் மாத்திரமே கொலை செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.   

"‘கிளி.யில் புலிகள் கொல்லவில்லை’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty