50 பேரைக் கொன்றது சூறாவளி
12-03-2017 09:03 PM
Comments - 0       Views - 13

மடகஸ்காரை கடந்த வாரம் தாக்கிய எனவோ சூறாவளி, குறைந்தது 50 பேரைக் கொன்றுள்ளதாகவும் 176,000 பேரைப் பாதித்துள்ளதாகவும், தேசிய அனர்த்த முகாமைத்துவ முகவரகம், நேற்று (11) தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தச் சூறாவளியினால் ஆயிரக்கணக்கானோர் அவசர புகலிடங்களுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.  

நான்கு பேர் மட்டுமே இறந்ததாகவும் 10,000 பேர் இடம்பெயர்ந்ததாகவும் கடந்த வியாழக்கிழமை (09) தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த எண்ணிக்கையை விட தற்போது வெளியிடப்பட்ட எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (10) வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், புயலினால் 53,000க்கு அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் 180 பேர் காயடமைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மடகஸ்கார் தலைநகர் அன்டனனரிவோவில் மாத்திரம் 32,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 137 அடைக்கல நிலையங்களை அமைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

மடகஸ்காரின் ஒதுக்குப்புறமான வடகிழக்கை, எனவோ சூறாவளி கடந்த செவ்வாய்க்கிழமை (07) தாக்கியிருந்த நிலையில், ஆறுகள் பெருக்கெடுத்ததுடன், பரந்தளவிலான வெள்ளம் ஏற்பட்டிருந்தது.  

சூறாவளி நிலத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து, அது பலமிழந்தபோதும், தற்போது குறைந்த வெப்பமண்டல தாழமுக்கமாக மாறி தெற்கு நோக்கிச் சென்று, மடகஸ்காரிலிருந்து அகன்றுள்ளது.  

இந்நிலையில், சூறாவளியினால் 700,000 பேர் வரையில் பாதிக்கப்படலாம் என செஞ்சிலுவைச் சங்கம் எதிர்வுகூறியுள்ளது.    

"50 பேரைக் கொன்றது சூறாவளி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty