1982 ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் மக்களது எதிர்ப்பை காட்ட ஒரு வாய்ப்பு
13-03-2017 02:08 PM
Comments - 0       Views - 195

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 83)

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழரசியலின் இருபெரும் பாசறைகள்  

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில், வடக்கு,கிழக்கைப் பொறுத்தவரை அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற இருபெரும் பாசறைகள் உருவாகியிருந்தமையை நாமறிவோம். 

காலத்தின் தேவை கருதி, 1972 இல் அப்பாசறைகளின் பெரும் தலைமைகளாக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலமும் சா.ஜே.வே.செல்வநாயகமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்ற ‘கூட்டணியில்’ ஒன்றிணைந்தனர். 

இது தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில் புரட்சிகரமான, புதிய மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது. தமக்குள் பிரிவுகள் இருக்கும்போது, தமிழர்களின் ஒருமித்த குரல் பலவீனமடையும் என்பதை அந்தத் தலைமைகள் உணர்ந்திருக்கலாம்.

ஆகவே, தமிழர்களுக்கான ஒருமித்த பலமான குரலாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அவர்கள் உருவாக்கினார்கள். ஆனால், இதன் உருவாக்கம் அந்தப் பெரும் தலைமைகளின் அந்திமகாலத்தில் உருவானது. இந்தக் கூட்டணியை முழுமையாக வழிநடத்த காலம் அவர்களை அனுமதிக்கவில்லை.

அடுத்தடுத்து இயற்கையெய்திய அந்தத் தலைமைகளுக்குப் பின்னர் தமிழரசுக் கட்சி சார்பிலான தலைமையை அமிர்தலிங்கமும் தமிழ் காங்கிரஸ் சார்பிலான தலைமையை எம்.சிவசிதம்பரமும் கூட்டணிக்குள் ஏற்றுக்கொண்டனர். 

இந்தத் தலைமைகளுக்கும் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் வாரிசான குமார் பொன்னம்பலத்துக்குமிடையில் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருந்தமை வௌ்ளிடைமலை. குமார் பொன்னம்பலத்தைத் தமது தலைமைப் பதவிக்கான சவாலாக இவர்கள் கண்டிருக்கலாம். 

எதையும் வௌிப்படையாகவும் துணிவாகவும் தான் எடுக்கின்ற முடிவு எதுவானாலும் அதனைப் பசப்பு வார்த்தைகள் இன்றி, நடிப்புகள், புரட்டுகள் இல்லாமல் நேரடியாகவே சொல்லவும் செய்யவும் கூடியவராகக் குமார் பொன்னம்பலம் இருந்தார். 

இவருடைய இந்தத் தன்மைதான், இவரது உயிர் பறிக்கப்படுவதற்கும் காரணமானது என்றால் மிகையில்லை. அதேபோல், இந்த நேர்மைதான் அவருக்கு அரசியலில் எந்த வெற்றிகளையும் பெற்றுத்தரவில்லை என்ற துரதிஷ்டத்தையும் இங்கே குறிப்பிடப்பட வேண்டியதாகிறது.

1977 தேர்தலில் குமார் பொன்னம்பலத்தை அமிர்தலிங்கமும் எம்.சிவசிதம்பரமும் ஓரங்கட்டினார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. 

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் மறைவுக்குப் பின் வெற்றிடமாக இருந்த யாழ்ப்பாணத் தொகுதியை குமார் பொன்னம்பலத்துக்கு வழங்குவதில் எந்தத் தடையும் இருந்திருக்க முடியாது. 

புதியதாக ஒருவரை அங்கு களமிறக்குவதைவிட, குமார் பொன்னம்பலத்தை அங்கே களமிறக்குவது எந்த வகையில் குறைபாடான ஒன்றல்ல; ஆனால், அமிர்தலிங்கமும் எம்.சிவசிதம்பரமும் யாழ்ப்பாணத் தொகுதியை குமார் பொன்னம்பலத்துக்கு வழங்கத் தயாராக இருக்கவில்லை.

வேறெந்தத் தொகுதியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதை ஏற்றுக்கொள்ளக் குமார் பொன்னம்பலம் தயாராக இருக்கவில்லை. நியாயமான காரணங்களின்றி யாழ்ப்பாணத் தொகுதியில் தான், போட்டியிடுவது மறுக்கப்பட்டதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் பின்னர் குமார் பொன்னம்பலம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து வௌியேறி, மீண்டும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸுக்கு உயிரூட்டுகிறார். 

மீண்டும் தமிழ் அரசியல் இரண்டு பாசறைகளாகப் பிரிகிறது. இம்முறை தமிழ்க் காங்கிரஸ் மற்றும் விடுதலைக் கூட்டணி என்ற இரண்டு பாசறைகள். இதன் தொடர்ச்சியாகத்தான் 1982 ஜனாதிபதித் தேர்தலில் குமார் பொன்னம்பலம் களமிறங்கியமையைப் பார்க்க வேண்டியதாகிறது.  

ஜனாதிபதித் தேர்தலும் 
குமார் பொன்னம்பலமும்  

1982 ஓகஸ்ட் முதலாம் திகதி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம் வௌியிட்டிருந்த அறிக்கையில், ‘தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பாகக் களமிறங்க வேண்டும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலை நாடு முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளைப் பறைசாற்றத்தக்க மக்களாணையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்ற வேண்டுகோளை முன்வைக்கிறார்.ஆனால், இதனைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஏற்றுக்கொள்ளவில்லை. 

ஓகஸ்ட் நான்காம் திகதி நடந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான குமார் பொன்னம்பலத்தை ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சி சார்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் களமிறக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தத் தீர்மானத்தைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் “இது ஓர் அரசியல் நாடகம்; குமார் பொன்னம்பலம் தன் தனிப்பட்ட பெருமைக்காக தேர்தலில் போட்டியிடுகிறார். உண்மையில், அவர் களமிறங்குவதானது ஜே.ஆருக்கு சாதகமானது.

ஜே.ஆருக்கு எதிரான வாக்குகள் மற்றைய பிரதான வேட்பாளருக்குப் போகாமல் சிதறடையச் செய்வதற்கான முயற்சி” என்ற தொனியில் விமர்சித்தார். 

குமார் பொன்னம்பலம் தேர்தலில் போட்டியிடுவது ஜே.ஆருக்கே மறைமுகமாகச் சாதகமானது என்ற அமிர்தலிங்கத்தின் தர்க்கம் சரியென்றால், அதேதர்க்கத்தின்படி, அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரியதும் மறைமுகமாக ஜே.ஆருக்கே சாதகமானதாகிறது.

ஏனென்றால், தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிப்பது கூட, ஜே.ஆருக்கு எதிரான வாக்குகள், ஜே.ஆருக்கு மாற்றான வேட்பாளர்களுக்குச் செல்வதைத் தடுக்கிறது!   

குமார் பொன்னம்பலத்தின் கோரிக்கை  

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தன்னுடைய நிலைப்பாட்டினைக் காரண காரியங்களுடன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குமார் பொன்னம்பலம் மிகத் தௌிவாக விளக்கியிருந்தார். ‘தமிழ் மக்களின் இறைமை’ என்பது குமார் பொன்னம்பலம் முன்னிறுத்திய தொனிப்பொருளாக இருந்தது.

1971 இல் சிறிமாவோவின் ஆட்சியில் முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்ட போது, அது ‘சுதந்திரம் மற்றும் இறைமையுள்ள இலங்கையை’ ஸ்தாபித்தமையானது தமிழர்களின் இறைமையை கேள்விக்குள்ளாக்கியது என்று குறிப்பிட்ட அவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கவில்லை.

ஆகவே, தமிழர்களின் ஆதரவின்றி, சம்மதமின்றி இந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் வாதிட்டாலும் பின்னர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், “இலங்கைக் குடியரசுக்கு விசுவாசமாக இருப்போம்” என்று 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுத்தமையானது, கூட்டணியினரின் மேற்சொன்ன வாதத்தைத் தோற்கடிப்பதாக இருக்கிறது என்று குமார் பொன்னம்பலம் சுட்டிக் காட்டினார். 

மேலும், இதே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, 1977 பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசத்தின் இறைமையையும் சுயநிர்ணயத்தையும் முன்னெடுக்கத் தனிநாட்டுக்கான மக்களாணையைக் கோரியது. 

1972 இல் ‘இலங்கையர்’ என்ற ஒன்றுபட்ட இறைமையின் கீழ் தமிழர் இறைமையைத் தொலைக்க வைத்தவர்கள் 1977 இல் மீண்டும் ‘தமிழர் இறைமையை’ நிலைநாட்ட மக்காளாணை கோரினார்கள்.

அப்படியானால் 1972 இல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தமிழர்களுக்கு செய்தது பெருந்துரோகமில்லையா? என்று குமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பினார்.

 1971- 1972 இல் தாம் இழைத்த தவறையும் தமது கொள்கைக்கே தாம் செய்த துரோகத்தையும் உணர்ந்துகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 1978 இன் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு உருவாக்கத்தை முற்றாகப் புறக்கணித்தது. 

ஆனால், மீண்டும் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் கீழும் குறித்த அரசியலமைப்புக்கு விசுவாசமாகவும் குறித்த அரசியலமைப்பைப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தொடர்கிறார்களே என்று குமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

தாம் குறித்த அரசியலமைப்புகளின் கீழ் உறுதிமொழி எடுத்தமையை நியாயப்படுத்த, “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், லங்கா சமசமாஜக் கட்சியானது, சோல்பரி அரசியலமைப்பை ஏற்காத போதும், அதன் அங்கத்தவர்கள் அவ்வரசியலமைப்பின் கீழ் உறுதிமொழியை ஏற்றமையைச் சுட்டிக்காட்டித் தமது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்கள்” என்று குறிப்பிட்ட குமார் பொன்னம்பலம், “ஜோன் தவறிழைத்தான்; ராமையா தவறிழைத்தான்; நான் ஏன் தவறிழைக்கக்கூடாது? என்ற ரீதியிலான அர்த்தமற்ற நியாயப்படுத்தல் இதுவாகும்” என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். 

அத்துடன், “லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை என்ற ஒற்றையரசை ஏற்றுக்கொண்ட கட்சி. அவர்கள் உறுதிமொழி எடுத்தமையினால் பெரும் முரண்பாடுகள் ஏதுமில்லை.

ஆனால், இங்கு இரண்டு அரசுகள் உண்டு. ஈழம் எனும் தனியரசை ஸ்தாபிப்போம் என்று சொன்னவர்கள் இலங்கையரசின் அரசியலமைப்பை ஏற்று, அதன் கீழ் உறுதிமொழியெடுத்தமை தவறு” என்று அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், “1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் ஐந்தாம் சரத்தானது, இலங்கையின் ஆள்புலமானது 24 நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியது என்கிறது. அப்படியானால் 24 மாவட்டங்களும் சேர்ந்ததுதானே இலங்கை?

அப்படியானால் வடக்கு,கிழக்கிலுள்ள மாவட்டங்களிலுள்ள பெரும்பான்மை மக்கள் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பினை உருவாக்க, அல்லது ஏற்க அல்லது நடைமுறைப்படுத்த எந்தவித மக்களாணையையும் வழங்கவில்லையே.

அப்படியானால், இம்மாவட்ட மக்கள் இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பதற்கு ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமல்லவா? இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததொரு விடயமல்லவா” என்று அவர் கேள்வியெழுப்பினார். 

“இலங்கையின் அரசியலானது எந்தவித ஜனநாயக அடிப்படையுமின்றி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதாவது தமிழ் மக்களின் அனுமதியின்றி, இலங்கையின் அரசியலானது அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஜனாதிபதித் தேர்தலானது தமிழ் மக்கள் தங்களுடைய மக்களாணையை வழங்குதற்கு ஓர் அரிய சந்தர்ப்பமாகும். தமிழ் வேட்பாளருக்கு தமது வாக்கினை அளிப்பதன் மூலம் தமிழ் மக்கள் தாம் தம்மீது தமது விருப்பமின்றித் திணிக்கப்பட்ட அரசியலமைப்பை நிராகரிக்கும் மக்களாணையை வழங்க முடியும்” என்று குமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார். 

அத்தோடு, “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியே தமிழர்களின் பெரும்பலம் கொண்ட கட்சியென்பதனால், அவர்களை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு அவர் மீள வலியுறுத்தியதுடன், வடக்கு, கிழக்கு தமிழர்களின் 90 சதவீத ஆதரவு இருக்கிறது என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சொல்கிறது; அப்படியானால் அந்த ஆதரவுடனும் ஏனைய வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் ஆதரவுடனும் மேலும் மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடனும் தமிழ் பேசும் மக்கள் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பை நிராகரிக்கிறார்கள் என்ற உறுதியான மக்களாணையைப் பெற இந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கோரினார். 

முத்தாய்ப்பாக, “இது தமிழர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவது பற்றிய விடயமல்ல; மாறாக தமிழ் என்ற அடையாளம் பற்றிய முக்கியமான கேள்வி” என்று குமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.   

குமார் பொன்னம்பலம், மற்றும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகிய இருவரின் அரசியல் வழிமுறைகள் வேறுபட்டிருந்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது. 

குமார், கொள்கை வழியில் உறுதியாக இருந்தார். அதுதொடர்பில் எந்தச் சமரசத்துக்கும் அவர் தயாராக இருக்கவில்லை. தமிழர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை முதலில் உறுதிசெய்து கொள்ளவேண்டும்; அதுவே முதன்மையானது என்று அவர் கருதினார். 

அவரைப் பொறுத்தவரையில், அரசியல் சமரசங்களெல்லாம் இரண்டாம் பட்சமாகவே இருந்தது. அமிர்தலிங்கத்தைப் பொறுத்தவரையில், தனிநாட,இ தனியரசு என்பது தொடர்பில் அவர் எவ்வளவு தூரம் உறுதியுடன் இருந்தார் என்பது சந்தேகத்துக்குரியது. 

இலங்கை அரசாங்கத்துடன் சமரசம் செய்து, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்ற அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கலைப் பெற்றுக்கொள்ளும் சமரசத் தீர்வு என்ற பாதையிலேயே அவர் பயணித்தார். 

இந்த அரசியல் முரண்பாடு, தமிழர் அரசியலில் இன்று வரை தொடர்கிறது. தமிழ் மக்கள் கூட, இந்த விடயத்தில் தௌிவானதொரு முடிவினை வழங்கமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.

 காரணம், சமரச அரசியலைக் கடைப்பிடிப்பவர்கள் கூடத் தேர்தல் காலத்தில் சமரச அரசியலுக்கு மக்களாணையைக் கோருவதில்லை. மாறாகத் தேர்தலின்போது, அடிப்படையான கொள்கையையே மக்கள் முன்கொண்டு செல்கிறார்கள். 

தேர்தலுக்குப்பின், அதிலிருந்து விலகி சமரச முகமூடியை அணிந்து கொள்கிறார்கள். அன்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பொதுத் தேர்தலின்போது, தமிழீழம் அமைக்க மக்களாணையைக் கேட்டது. தேர்தலின் பின்னர் மாவட்ட அபிவிருத்திச் சபைகளூடான அதிகாரப் பரவலாக்கல் பற்றியும் சமரச வழித் தீர்வு பற்றியுமே அது கவனம் செலுத்தியது.

இதையொத்த நிலையே இன்றும் தொடர்கிறது. இது, சரிபிழை என்ற இரட்டைப்படை நிலைகளில் பார்க்கப்படக்கூடியதொன்றல்ல; ஆனாலும், தமது உண்மையான எண்ணப்பாடுகளையும் நிலைப்பாடுகளையும் தமிழ் மக்களின் முன்னிலையில் சமர்ப்பித்து, மக்களை அதனை ஏற்றுக்கொள்ளச் செய்யும் திராணி, தமிழ் அரசியல் தலைமைகளிடம் இல்லாதிருந்ததனை இது சுட்டி நிற்கிறது.  


(அடுத்த வாரம் தொடரும்)  

"1982 ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் மக்களது எதிர்ப்பை காட்ட ஒரு வாய்ப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty