'வவுனியாவில் இடம்பெற்றது கூட்டமல்ல நாடகம்'
13-03-2017 03:06 PM
Comments - 0       Views - 23

-எஸ்.நிதர்ஸன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், ஜெனிவா கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அங்கு சென்று இரகசியமாக ஒத்துக் கொண்ட தீர்மானத்தை, ஐனநாயகத்  தீர்மானமாக மக்கள் மத்தியில் காட்டுவதற்கான நாடகமாகத் தான், வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் அமைந்துள்ளது” என, குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி, இந்த நாடகத்தை முதலமைச்சரும் ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருப்பதாக கூட்டிக்காட்டியுள்ளது.

சம்மந்தன், சுமந்திரன் ஆகியோர் இத்தனை காலமும் தனியாகச் செய்து வந்த திருட்டுத்தனமான வேலைகளுக்கான அங்கீகாரத்துக்காகவே, இந்தக் கூட்டத்தை நடாத்தி பலம் சேர்த்திருப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜெனிவா விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாதென்பதே தாயகத்திலுள்ள மக்களது கோரிக்கையாக இருக்கிறது. அதே நேரம் புலம்பெயர்ந்த மக்களதும் நிலைப்பாடும் அதுவாகத் தான் இருக்கின்றது.

அப்படிப்பட்டதொரு நிலையிலே, துரதிஷ்டவசமாக தமிழ்த் தரப்புகள், அந்த கால அவகாசம் வழங்குவதற்கு உடன்பட்டு ஒப்புதல் அளித்து செயற்படுவதென்பது, தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற நீதியை கிடைக்காமல் செய்வதற்கும் எதிர்காலத்தில் தமிழர்களை பேராபத்துக்குள் தள்ளிவிடுவதற்கான சூழலை உருவாக்கி விடுவதாகவே அமைகின்றது.
அந்த வகையிலே, சர்வதேச சமூகமானது மீளவும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாதென்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாகிய நாங்கள் கேட்டிருந்தோம். அதனையே இந்தச் சந்தர்ப்பத்திலும் மீளவும் வலியுறுத்திக் கேட்கிறோம்.

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமொன்றை நடத்தியிருக்கின்றது. அதிலே அக்  கட்சியின் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதன்போது கடும் வாதப் பிரதி வாதங்கள் நடைபெற்றதாக ஊடகங்கள் ஊடாக அறிகின்றோம்.

கூட்டத்தின் முடிவில் மிகக் கடுமையான நிபந்தனைகளோடு அத் தீர்மானம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வகையிலையே, தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளரால் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு கடுமையான நடைமுறைகள் என்று பேச்சாளர் சுமந்திரன் சொல்லிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகி? ஆணையாளரின் அறிக்கைகள் வெளிவந்த போது, இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்கள் வெளிநாட்டு நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அது ஒரு பொழுதும் நடைபெறாது என்றும் மிகத் திட்டவட்டமாகவே கூறியிருக்கின்றார்கள்.

கடந்தவாரம் யாழுக்கு வந்த ஜனாதிபதி படையினரின் நிகழ்வொன்றில் பேசும் போது கூட படையினருக்கு எதிரான விசாரணைகள் நடத்துவதற்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.
இலங்கை அரசாங்கம் அப்படிப்பட்டதொரு செயற்பாட்டை செய்யப் போவதில்லை என்பது சர்வதேச நாடுகளுக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். இதனை உணர்ந்து சர்வதேசம்  கால அவகாசத்தை வழங்கக் கூடாது” என அவர் மேலும் கூறினார். 

"'வவுனியாவில் இடம்பெற்றது கூட்டமல்ல நாடகம்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty