‘எங்களுடைய உறவுகள் எங்கே, அவர்களுக்கு நடந்தது என்ன?’
14-03-2017 12:32 AM
Comments - 0       Views - 34

எஸ்.றொசேரியன் லெம்பேட்

“காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய உறவுகள் எங்கே, அவர்களுக்கு நடந்தது என்ன?” உள்ளிட்ட பல கேள்வி​களைக் கேட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைப்பதற்காக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரியவிடம், மஜரொன்று நேற்று (13) கையளிக்கப்பட்டது. 

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தினரே இந்த மகஜரை, நேற்றுக் கையளித்தனர். இந்தச் சங்கத்தினர், தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தெரிவிக்கவேண்டுமென வலியுறுத்தி கடும் வெயிலுக்கு மத்தியிலும் நேற்று (13) பேரணியை நடத்தினர்.  

மகஜரை கையளித்த அவர்கள், மகஜரை குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டு அசமந்த போக்குடன் இருந்து விடாது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகளாகிய நாங்கள் எங்களுடைய உறவுகளை தேடிக் கண்டறிய தங்களுடைய உதவியை வேண்டி நிற்கின்றோம். 

எங்களுடைய உறவுகள் எங்கே இருக்கின்றனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை எங்களுக்குத் தெரிய வேண்டும். 

2009 மே மாதத்தில் மோதல் முடிவுக்கு வந்த காலம் தொடக்கம் இலங்கை அரசாங்கமானது ‘கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’ LLRC என அழைக்கப்பட்ட ஓர் ஆணைக்குழுவை உருவாக்கியது. ‘கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது வடக்கிலும் கிழக்கிலும் இரண்டு வருட காலத்துக்கும் மேலாக பகிரங்க அமர்வுகளை நடாத்தியது.  

அதில், ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த தனது இறுதி அறிக்கையில் ஆயுதமேந்தாத சிவிலியன்களின் படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, கடத்தல்கள் போன்ற மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தமையை ஏற்றுக்கொண்டது. எனவே, அவ்வாறான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கும், அந்த வன்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குமான தெளிவான ஒரு தேவை அங்கு காணப்பட்டது. 

கடந்த காலத்தின் காயங்களை ஆற்றுவதற்கான தெளிவான தேவையொன்றிருப்பதை ஏற்றுக்கொண்ட ‘கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது, யுத்தத்தால் பாதிப்புற்ற அனைவரையும் அங்கிகரித்து, அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கி அதன் மூலம் தேசிய ஐக்கியத்தையும் சமாதானத்தையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் செய்திருந்தது.  

மேலும், யுத்தம் பற்றிய உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் பற்றிய முழுமையான விசாரணையானது, சமாதானத்தை மீள ஏற்படுத்திப் பேணுவதற்கு மிகவும் அவசியமான பொறுப்புக்கூறல் மற்றும் நீதிச் செயன்முறை என்பவற்றின் அத்தியாவசியமான ஒரு கூறாகும் எனவும் தெரிவித்திருந்தது. 

‘கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘காணாமல் போனோர் ஆணைக்குழு’ ஒன்றை ஏற்படுத்தியிருந்தார். 

‘பரணகம ஆணைக்குழு’ என்றும் அறியப்பட்டிருந்த இவ்வாணைக்குழுவானது, மூன்றாண்டுகளுக்கு மேலாக வடக்கிலும் கிழக்கிலும் நடாத்தப்பட்ட பகிரங்க அமர்வுகளின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆயிரக் கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டன.  

இதேவேளை, யுத்தத்தின் இறுதி நாட்களின்போது காணாமல் ஆக்கப்பட்ட தம் அன்பிற்குரிவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்ததை கண்ணால் கண்ட சாட்சிகளான, காணாமல் ஆக்கப்பட்டோரின்; குடும்ப உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட நம்பத்தகுந்த சாட்சியங்கள் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகிய இரண்டுக்குமே வழங்கப்பட்டன.  

இவ்வாறான நபர்கள் இன்னும் உயிரோடுதான் உள்ளார்களா அல்லது இறந்து விட்டார்களா? என்பதை அறிவதே தலையாய கரிசனையாய் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே இருக்கின்றனர், இதற்கான வகைப்பொறுப்பு யாருடையது, இதற்கான பொறுப்பை வகிக்கின்றவர் யார் என்பதைக் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அறிய விரும்புகின்றன. இதற்கான பதில் கிடைக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். 

புலிகளுடனான யுத்தத்தில் இலங்கைப் பாதுகாப்புப் படையினர் வெற்றி பெற்றிருக்கலாம். இருப்பினும், யுத்தத்தின்போதும், யுத்தத்தின் முடிவிலும், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டத்துடன் பொருந்திய யுத்தத்தில் இலங்கையானது மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.  

குறிப்பாக, பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தவர்களினதும், கைதாகிப் பொறுப்பேற்கப்பட்டவர்களினதும் இருப்பிடங்களை அறியாத நிலையில் உள்ள குடும்பங்களின் மன வலி இன்னும் தீராது அப்படியேயுள்ளது.  

இக்குடும்பங்களுக்கு நம்பகமான பதிலொன்றை வழங்காமல் இருப்பதன் மூலம் நல்லிணக்கச் செயன்முறைக்குக் குழி பறிக்கப்படுகின்றது. நீதியை ஏற்படுத்துவதானது உண்மையான சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான ஒருமுன் நிபந்தனையாகும். 

இறுதியாக, நாங்கள் யுத்தகாலத்தின்போது நிகழ்ந்த மனித உரிமைகள் சட்டம், மற்றும் சர்வதேச மனித நேய சட்டம் என்பவற்றின் மோசமான மீறல்களை விசாரணைசெய்து, எங்களுக்கு பதிலை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரி நிற்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

"‘எங்களுடைய உறவுகள் எங்கே, அவர்களுக்கு நடந்தது என்ன?’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty