10 இராணுவ வீரர்கள் வழக்கிலிருந்து விடுவிப்பு
14-03-2017 03:33 PM
Comments - 0       Views - 21

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி, சிறுப்பிட்டி பகுதியிலிருந்து, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இரு பொதுமகன்கள் காணாமற்போன விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட 5 இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 10 இராணுவ வீரர்களையும், இந்த வழக்கிலிருந்து விடுவிக்க, யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதியன்று, கைது செய்யப்பட்ட சரஸ்வதி சவுந்தரராஜன் மற்றும் முத்துப்பிள்ளை ஜெயசீலன் ஆகிய இருவருமே, இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 இராணுவ வீரர்களில் 5 பேர், கடந்த ஜனவரி மாதம், பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 10 பேர் மாத்திரமே, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்ட ஐவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 பேரில் ஐவருமாக, மொத்தம் 10 இராணுவ வீரர்களை, இவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, சட்டமா அதிபரினால், வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமையவே, சந்தேகநபர்களான இராணுவ வீரர்கள் 10 பேரும், நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இது தொடர்பான சுருக்கமுறையற்ற விசாரணை, இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. எவ்விதமான சாட்சிகளின் சாட்சியங்களும் இதுவரைப் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே, மறு அறிவித்தல் வரும் வரை, குறித்த வழக்கினைத் தொடர்வதை, சட்டமா அதிபர் நிறுத்தி வைத்துள்ளார்.

1997ஆம் ஆண்டில், அச்செழு பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் 511ஆவது படையணியில் கடமையாற்றிய இராணுவ வீரர்கள், மேற்படி இரு சிவிலியன்களை சந்தேகத்தில் கைது செய்திருந்தனர். பின்னர் அவர்கள் காணாமற்போனதாகக் கூறி, இராணுவ பொலிஸாரினால்  அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு, கடந்த 19 வருடங்களின் பின்னர் கடந்த வருடம் மீண்டும் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபர்களான இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

"10 இராணுவ வீரர்கள் வழக்கிலிருந்து விடுவிப்பு " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty