முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்பில் 'பெண்களுக்கு முக்கியத்துவம் வேண்டும்'
15-03-2017 05:11 PM
Comments - 0       Views - 13

முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்பில், பெண்களை முக்கிய பங்குதாரர்களாகக் கொண்டு செயற்பட வேண்டுமென்பதை வலியுறுத்துவதாக, முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்புச் செயற்பாட்டுக் குழு, கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டத்தை மறுசீரமைக்கும் போது, அரசாங்கத்தால் உறுதிப்படுத்த வேண்டிய 4 வழிகாட்டும் கொள்கைகளை, அக்குழு வெளியிட்டுள்ளது.

சமவுரிமையையும் நீதியையும் பாகுபாடின்மையையும் உறுதிப்படுத்துவதற்காக நாட்டின் பொறுப்பு; இந்த மறுசீரமைப்பில், பிரதான பங்குதாரர்களாகப் பெண்கள்; முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் பல்வகைமையையும் காணப்படும் பல்வேறான கருத்துகளையும் மதித்தல் இஸ்லாமிய நீதிக் கட்டமைப்பின் இயங்காற்றலை அங்கிகரித்தல் ஆகியனவே, இந்த 4 வழிகாட்டும் கொள்கைகளாக, அக்குழுவால் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அதன் அறிக்கையில், இலங்கையின் அனைத்துப் பிரஜைகளும், பாகுபாடின்றி, சமமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது, அந்நாட்டின் கடமை என்று குறிப்பிட்டுள்ள அக்குழு, "சட்டத்தின் முன்னால் சமமான தன்மை, சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுதல் ஆகியன, அடிப்படை உரிமை" என்றும் குறிப்பிட்டுள்ளது.

முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டமும் காதி நீதிமன்றக் கட்டமைப்பும், விசேட சட்டமே எனத் தெரிவித்த அக்குழு, இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிம் பிரஜையினதும் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்கு, அவை பயன்படுத்தப்படலாகாது என்று தெரிவித்தது.

இந்த முறைமையால், முஸ்லிம் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அக்குழு, இதில் மறுசீரமைப்பு வேண்டுமென்ற அவர்களின் கோரிக்கையே, இந்த மறுசீரமைப்புக்கான முக்கியமான காரணமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தது. எனவே, அவர்களது குரல்களும் அவர்களது கோரிக்கைகளும், இவ்விடயத்தில் செவிமடுக்கப்பட வேண்டும் எனவும் அக்குழு தெரிவித்துள்ளது.

"முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்பில் 'பெண்களுக்கு முக்கியத்துவம் வேண்டும்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty