2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வடகொரியா: ஒரு கொலையின் கதை

Administrator   / 2017 மார்ச் 16 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கதைகள் பலவிதம். 

சொன்ன கதைகள், சொல்லாத கதைகள், சொல்ல விரும்பாத கதைகள், பழைய கதைகள், புதிய கதைகள், மறைக்கப்பட்ட கதைகள், கட்டுக்கதைகள் எனக் கதைகளின் தன்மை, அதன் விடயம் சார்ந்தும் சொல்லப்படும் அல்லது சொல்லாது மறைக்கப்படும் காரணங்களுக்காக வேறுபடுகிறது.   

சமூகத்தில் கதைகள் ஒரு வலுவான செய்தி காவும் ஊடகமாக நீண்டகாலமாக நிலைத்துள்ளது. குறிப்பாக ஊடகங்கள் பல செய்திகளைக் கதைகளின் வடிவில் தருவதன் ஊடு, அச்செய்தி சார்ந்து ஓர் உணர்வு நிலையை உருவாக்குகின்றன.   

அது ஏற்படுத்தும் தாக்கம் பெரியது. இதனால் கதைகளால் கட்டமைக்கப்பட்ட செய்திகள் மக்களிடையே ஊடுருவுவது அதிகம். இவ்வழியில் குறிப்பாக பொய்ச் செய்திகளைக் கதைகளின் ஊடாகக் கட்டமைப்பதன் மூலம், அவை உண்மை போலச் சொல்லப்படுவதோடு, அக்கதையில் உள்ளார்ந்து இருக்கின்ற உணர்வுநிலையைத் தட்டியெழுப்பும் பண்பு, அக்கதையை உண்மையென இலகுவில் பொதுப்புத்தி மனநிலையில் விதைக்கிறது.   

சிலவாரங்களுக்கு முன், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரர் கிம் ஜொங் நம், வடகொரிய உளவாளிகளால் மலேசியாவில் கொலைசெய்யப்பட்டார் என்ற கதை மேற்கத்தைய ஊடகங்களால் எமக்குச் சொல்லப்பட்டது.   

அக்கதை இன்றுவரை உண்மையென நம்பப்படுவதோடு, வடகொரியா பற்றிக் கட்டியெழுப்பப்பட்டுள்ள பிம்பம், அக்கதை உண்மையாகத்தான் இருக்கும் என்ற பொதுப்புத்தி மனநிலையை உருவாக்குவதன் ஊடு, அச்செய்தியை மெய்யாக்கியது.   

இந்நிலையில், இரண்டு கதைகள் தொடர்பில் சில தகவல்களைச் சொல்வது தகும். முதலாவது வடகொரியா பற்றிக் கட்டியெழுப்பப்பட்டுள்ள கதைகள்; அது பற்றி ஏற்படுத்தப்பட்டுள்ள பிம்பம் பற்றிய ஒரு மீள்பார்வை.  

 இரண்டாவது, கடந்த சில வாரங்களாக கிம் ஜொங் நம்மின் மரணம் தொடர்பில் சொல்லப்படுகின்ற கதையின் தகவல்களைச் சரிபார்க்கும் சில வினாக்கள்.   

1965 ஆம் ஆண்டு வடகொரியாவுக்கு விஜயம் செய்த சேகுவேரா, “புரட்சிகர கியூபா, முன்னுதாரணமாகக் கொள்ளப்பட வேண்டிய ஒரு நாடாகும்;அதோேபால், மக்கள் மையப்படுத்தப்பட்ட கொள்கைகளின் வழி, மக்கள் நல அரசாக வடகொரியா திகழ்கிறது” எனத் தனது அனுபங்கள் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.   

இன்று வடகொரியா பற்றி எழுப்பப்பட்டுள்ள பிம்பம் என்ன? உலகின் மிகவும் மோசமான சர்வாதிகார நாடு; மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடுகிறார்கள்; அணுஆயுதம் மூலம் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இவை காலம்காலமாய் விதைத்து அறுவடை செய்யப்பட்ட கதைகளாகும்.   

இப்பின்னணியில் வடகொரியாவை மீண்டும் உலகின் கவனம் பெறவைத்த, அண்மையில் நடந்த கொலையின் கதையை நோக்குதல் வேண்டும்.

வடகொரிய உளவாளிகளால் தடைசெய்யப்பட்ட ‘VX’ எனப்படும் இரசாயன ஆயுதத்தினால் கிம் ஜொங் நம் கொல்லப்பட்டதாகச் சொல்கிற மேற்குலக ஊடகங்கள், 1993 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இரசாயன ஆயுதப்பாவனைத் தடுப்பு உடன்படிக்கையில் அமெரிக்கா கைச்சாத்திடவில்லை என்பதைச் சொல்லவில்லை.  

இக்கொலையை விசாரணை செய்யும் மலேசியப் பொலிஸார், இக்கொலையில் வடகொரியா தொடர்புபட்டுள்ளது என்று இன்றுவரை சொல்லவில்லை.

வடகொரியா, கிம் ஜொங் நம் மாரடைப்பால் இறந்ததாகவும் அவர் நீண்டகாலமான இதயப்பிரச்சினைகளைக் கொண்டிருந்ததாகவும் சொல்லியது. அவரது உடல் மீது மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றியல் பரிசோதனையின் முடிவில், மலேசிய அதிகாரிகள் அவர் மாரடைப்பால் இறந்தார் என அறிவித்தனர்.

பின்னர் முதலாவது உடற்கூற்றியல் பரிசோதனை சரியாக மேற்கொள்ளப்படவில்லை எனச் சொல்லி, இரண்டாவது முறை பரிசோதனை மேற்கொண்டு, மரணத்தில் ‘VX’ தொடர்புபட்டிருப்பதாக அறிவித்தனர்.   

கிம் ஜொங் நம், மரணமடைந்த மறுநாள், தென்கொரிய அரசுதான் முதன் முதலில், இது வடகொரியாவினால் திட்டமிடப்பட்ட சதி என்றும் இதில் ‘VX’ என்கிற இரசாயனப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது.  

 மலேசிய அதிகாரிகள் உடற்கூற்றியல் பரிசோதனைகளின் விளைவாக ‘VX’ யின் பயன்பாட்டை அறிவிப்பதற்கு 10 நாட்களுக்கு முன், தென்கொரியாவுக்கு இது தெரிந்தது எவ்வாறு? இதனுடன் தொடர்புடைய இரண்டு பெண்களும் இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னான குறித்த காலப்பகுதியில் பலதடவைகள் தென்கொரியாவுக்கு பயணம் செய்தது எதற்காக?

இக்கொலையுடன் தொடர்புபட்டவர் எனச் சந்தேகத்தின் பெயரில் மலேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வடகொரியர் நிரபராதி என விடுவிக்கப்பட்டது எதைக் குறிக்கிறது.  

மலேசிய விமான நிலையத்தில் கிம் ஜொங் நம் மீது ‘VX’ இரசாயனப் பதார்த்தத்தை இரண்டு பெண்கள் தடவி, கிம் ஜொங் நம்மைக் கொலை செய்தார்கள் என்பதே இப்போது சொல்லப்படும் கதை.   

அதைத் தடவிய பெண்கள் கையில் கையுறை அணிந்திருக்கவில்லை. சொல்லப்படும் கதையின் படி, அவர்கள் ‘VX’ யைத் தங்கள் கைகளில் தடவிய பின்னர், கிம் ஜொங் நம்மின் மீது தடவிய பின்னர், தங்கள் கைகளைக் கழுவியுள்ளார்கள் என்றவாறு உள்ளது.  

 அவ்வாறெல்லால் இவ்வளவு வலுவுள்ள ஓர் இரசாயனத்தைப் பயன்படுத்தியவர்கள் நிச்சயம் சுகவீனமுற்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு ஏதும் நிகழவில்லை. மாறாக இவ் இராசயனப் பொருள் சூழலில் உள்ள ஏனையோரையும் நிச்சயம் பாதிக்க வல்லது.   

இது விமான நிலையத்தில் பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் நிச்சயம் சனநெரிசல் மிக்க விமான நிலையத்தில் ஏனையோரும் பாதிக்கப்பட்டிருப்பர். ஆனால், அவ்வாறெதுவும் நிகழவில்லை. சொல்லப்படுகின்ற கதையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் தெளிவாகியுள்ளது.  

வடகொரியா மீதான மேற்குலக விசமத்தனத்தை புரிந்து கொள்ள வரலாறு உதவும். கொரியாவின் வரலாறு கொரியக் குடாநாட்டின் கட்டுப்பாட்டுக்கான கேந்திர முக்கியத்துவத்துடனும் பசுபிக் பிராந்தியத்தின் மீதான ஆதிக்கத்துக்கான போட்டியுடனும் பின்ணிப் பிணைந்துள்ளது.  

வடமேற்கே சீனாவையும் வடகிழக்கே ரஷ்யாவையும் எல்லைகளாகக் கொண்ட கொரியாவின் கிழக்குப் பகுதி, ஜப்பானிடமிருந்து கொரிய ஜலசந்தியால் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிவடையும் வரை கொரியாவாகவிருந்த நாடு, பின்னர் வடக்குத் தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.   

1910 ஆம் ஆண்டு ஜப்பான், கொரியா மீது படையெடுத்து, ஜப்பானின் கொலனியாகக் கொரியாவை வைத்திருந்தது. 35 ஆண்டுகளுக்கு ஜப்பான் முதலாளிகளுக்கு மிகுந்த இலாபம் தரும் ஒரு கொலனியாக, கொரியா விளங்கியது.   

கொரிய ஆண்கள் அடிமைகளாகவும் பெண்கள் பாலியல் அடிமைகளாகவும் ஜப்பானுக்குக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டார்கள். ஜப்பானால் தனியாகக் கொரியாவைச் சூறையாடவியலாது.

எனவே, ஜப்பான் கொரியாவின் சொத்துடைய நிலவுடைமையாளர்கள், தொழிற்சாலை முதலாளிகளைத் துணைக்கழைத்துக் கொண்டது.   

இவர்கள்தான், பின்னர் தங்கள் ஆதரவை ஜப்பானுக்கு மறுத்து, அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பாக்கி, பின்னர் உருவான தென்கொரிய அரசின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.   

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க, ஜப்பான் நேரடிப் போருக்கான உடனடிக் காரணியாக அமெரிக்காவின் பேர்ள் துறைமுகத்தின் மீதான ஜப்பானின் தாக்குதல் இருந்தபோதும், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான போர் தவிர்க்கவியலாதது என்ற நிலையை பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்கான போட்டி ஏற்கெனவே உருவாக்கியிருந்தது.  

 பிலிப்பைன்ஸ், குவாம், ஹவாய், சமோவா ஆகிய நாடுகளில் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த அமெரிக்கா, தனது பொருட்களை எதுவித கட்டுப்பாடின்றி சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான திறந்த பாதையொன்றை வேண்டி நின்றது.   
அதற்கு வாய்ப்பான நாடாக கொரிய இருந்த, அதேவேளை வினைதிறன் மிக்க கடினமான வேலையாற்றும் மக்களாகிய கொரியர்களை பயனுள்ள மனிதவலுவாக அமெரிக்க அடையாளம் கண்டிருந்தது.   

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஜப்பானின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அதன் கொலனிகளில் தங்களது ஆதிக்கத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா மேற்கொள்ளத் தொடங்கியது. 

 1943 இல் அமெரிக்கா தனது பக்கத்தில் போரிட்ட நேசநாடுகளின் கூட்டணியில் உள்ள பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றிடம் கூட்டாகக் கொரியாவை கட்டுப்படுத்துவதற்கான வரைபொன்றை சமர்ப்பித்தது. ஆனால், பிரித்தானியாவும் பிரான்ஸும் இதை விரும்பவில்லை.   

அதேவேளை, ஜப்பானைத் தோற்கடிப்பது இலகுவானதல்ல என அவர்கள் அறிந்திருந்தார்கள். பிராந்திய ஆதிக்கத்துக்காகவும் பரிசோதனைக்காகவும் அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டை ஏவும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.   

ஜப்பானுக்கு எதிரான யுத்தத்தில் பங்கெடுத்த சோவியத் படைகள் கொரியாவிலிருந்து, ஜப்பானியப் படைகளை வெளியேற்றத் தொடங்கியபோது, அச்சமடைந்த அமெரிக்க, தனது படைகளை கொரியாவில் இறக்கி, 38 ஆவது அட்சரக் கோட்டால் கொரிய இரண்டாகப் பிரிவுண்டது.   

இது கொரிய மக்களின் விருப்புடன் செய்யப்பட்டதல்ல; மாறாக கொரியாவின் மீதான அமெரிக்காவின் ஆவல் இதைச் சாத்தியமாக்கியது. வடக்கு கொரியா, சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டுப் பகுதியாகவும் தெற்குக் கொரியா, அமெரிக்காவின் கட்டுப்பாட்டுப் பகுதியுமானது.   

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, 1950 இல் தொடங்கி 1953 வரை நீடித்த கொரிய யுத்தம், இரண்டரை மில்லியன் கொரியர்களைக் காவுகொண்டது.

கொரிய யுத்தத்தின் பின்னரான பத்து ஆண்டுகளில் வடகொரியப் பொருளாதாரம் ஆண்டொன்றுக்கு 25 சதவீதம் என்றளவில் வளர்ந்தது. 1965 முதல் 1978 வரையான காலப்பகுதியில் வளர்ச்சி வீதம் ஆண்டொன்றுக்கு 14 சதவீதமாகவிருந்தது.   

இதே காலப்பகுதியில், அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட தென்கொரியாவின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் இருந்தது. 1980 ஆம் ஆண்டளவில் வடகொரியாவின் தலைநகரான ‘பியென்யாங்’ ஆசியாவின் மிகவும் சிறந்த வினைத்திறனுள்ள நகராக அறியப்பட்டது.   

1960 களில் சோவியத் யூனியன், சீனா முகாம்களுக்கிடையிலான தத்துவார்த்த முரண்பாடு சோசலிச சித்தாந்தத்தைப் பின்பற்றும் நாடுகள் இவ்விரண்டில் ஏதாவதொரு பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளியது.  

சோவியத் முகாமின் தத்துவார்த்த முரண்களை இனங்கண்ட வடகொரியா, இம்முரண்பாட்டில் தன்னைச் சீனாவின் பக்கம் நிறுத்திக் கொண்டது.   

இதனால் கோபமடைந்த சோவியத் யூனியன், வடகொரியாவுடனான வர்த்தக உறவுகளைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கியது. இருந்தபோதும், தென்கொரியாவுடன் ஒப்பிடும் போது, ஒரு சமூகநல அரசாக வடகொரியா தனது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதில் முன்னின்றது.   

1989 இல் சோவியத் யூனியனின் முடிவு, அமெரிக்கா மைய ஒரு மைய உலகின் தோற்றம் என்பன வடகொரியாவுக்கு வாய்ப்பாக அமையவில்லை. தனது வலுத் தேவைகளுக்கான அணுமின் உலைகளை நிறுவ முயன்ற வடகொரியா, தண்டிக்கப்பட்டது.   

இதைத் தொடர்ந்து வடகொரியாவைத் தாக்கியழிக்கப்போவதாகத் தொடர்ச்சியாக அமெரிக்கா மிரட்டியது. இதற்குப் பதிலடியாக வடகொரிய அணுஆயுதப் பரிசோதனையொன்றைச் செய்தது.   

அமெரிக்க மிரட்டலை அலட்சியப்படுத்தி, வடகொரியா மேற்கொண்ட அணு ஆயுதப் பரிசோதனையை ஐ.நா பாதுகாப்புச் சபை கண்டித்தும் வட கொரியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.   

வடகொரியா அசைந்து கொடுக்கவில்லை. இன்னொரு பரிசோதனையை நடத்துகிற நோக்கம் இல்லை எனவும் அமெரிக்காவின் ஆயுத மிரட்டல் வலுப்படும் பட்சத்தில், பரிசோதனைகளைத் தொடருகின்ற உரிமையையும் வலியுறுத்தியது. பொருளாதாரத் தடைகள் வடகொரியாவை மோசமாகப் பாதித்துள்ளன. இவ்விடத்தில் சில விடயங்களை நினைவுறுத்தல் தகும்.   

உலகின் முதலாவது அணு ஆயுத வல்லரசு அமெரிக்கா. மக்களைக் கொன்றொழிப்பதற்காக அணு ஆயுதங்களை இதுவரை பயன்படுத்தியுள்ள ஒரே நாடும் அமெரிக்கா தான்.

அது மட்டுமன்றி, அணு உலைகளிலிருந்து பெறப்பட்ட கதிரியக்கம் கொண்ட உலோகங்கள் கொண்ட ஏவுகணைகளை ஈராக்கில் பயன்படுத்தியதும் அமெரிக்கா தான். 

 அதன் விளைவாகப் பத்தாயிரக் கணக்கானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான குழந்தைகள் புற்றுநோய் உட்படக் கடும் உபாதைக்குட்பட்டுள்ளார்கள்.   

கெடுபிடிக் காலத்தில் அணு ஆயுதக் குறைப்புப் பற்றிய உடன்படிக்கைகள் ஏற்பட்ட போதும், பழைய ஆயுதங்களின் இடத்தில் புதிய, பாரிய ஆயுதங்கள் வந்தனவே ஒழிய, அணு ஆயுத வலிமை குறைக்கப்படவில்லை.   

சோவியத் யூனியன் உடைந்த பின்பும் அமெரிக்கா தனது அணு ஆயுத வல்லமையை மேலும் அதிகப்படுத்தி வந்துள்ளது ஏன்? அது அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவா? 

நிச்சயமாக இல்லை. உலக நாடுகள் மீது போர் மிரட்டல் தொடுத்து, தான் எண்ணியதைச் சாதிக்கிற போக்கைக் கொண்ட அமெரிக்கா, பெரும் தொகையான ஆயுதங்களை வைத்திருப்பது பிற நாடுகளை மிரட்ட மட்டுமே. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கரமான இஸ் ரேலிடம் அணு ஆயுதங்கள் நிறைய இருப்பதும் அதற்காகவே.   

தனக்கு உவப்பில்லாத ஆட்சிகளை அமெரிக்கா தொடர்ந்து கவிழ்த்து வந்துள்ளது. அது இராணுவச்சதி, கொலை, நாடுகடத்தல், இராணுவத் தலையீடு, மனிதாபிமானத் தலையீடு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எனப் பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது.  

ஆனால், இன்றுவரை வடகொரியாவின் மீது ஒரு போரைத் தொடுப்பதற்கான துணிவு அமெரிக்காவுக்கு இல்லை. அதன் அர்த்தம் அமெரிக்காவின் விருப்பில்லை என்பதல்ல; வடகொரியாவிடம் உள்ள அணுஆயுதங்கள் இன்றுவரை அமெரிக்காவின் நேரடியான தலையீட்டிலிருந்து கொரியாவை தற்காத்து வந்துள்ளன. 

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின், சகோதரர் கிம் ஜொங் நம்மின் மரணம் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என கொரியாவை நீண்டகாலமாக அவதானிக்கும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.   

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்துக்கும் வடகொரிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று வொஷிங்டனில் ஏற்பாடாகியிருந்த நிலையில், இச்சந்திப்பு நீண்டகாலமாகத் தொடரும் அமெரிக்க, வடகொரிய முரண்பாட்டைத் தணிக்கும் ஒன்றாகவிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.   

இந்நிலையில் இம்மரணத்துக்கான பழியை வடகொரியாவின் மீது போடுவதன் மூலம் இச்சந்திப்பைத் தடுக்கும் முயற்சியாக இதை ஒரு சாரார் நோக்குகிறார்கள். இதற்காகத்தான், கிம் ஜொங் நம் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைப்பவர் என்ற பிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது.   

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடனான சந்திப்புக்கான வாய்ப்புகள் உள்ள காலப்பகுதியில் இவ்வாறான கொலை, சந்திப்பை இயலாததாக்கும் என நன்கறிந்த வடகொரியா இவ்வாறானதொரு கொலையைச் செய்யுமா?  

அவ்வாறு கொலை செய்ய முடிவு செய்தாலும், அரசியலிருந்து ஒதுங்கியுள்ள சகோதரரை தடைசெய்யப்பட்ட இரசாயனப் பொருளைப் பயன்படுத்தி கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புக்குள்ளாகும் ஓர் இடத்தில் அதுவும், வடகொரியாவுக்கு மிகவும் நட்பான நாடொன்றில் இக்கொலையை அரங்கேற்றியிருக்குமா?  

அவ்வாறு கொலை செய்ய வேண்டுமாயின் கிம் ஜொங் நம் அடிக்கடி தங்குகிற மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள வடகொரியத் தூதரக விடுதியில் அதை இலகுவில் செய்திருக்க முடியும்.   

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், தர்க்க ரீதியாகச் சிந்திக்கத் தெரியாத, அறிவற்ற பைத்தியக்காரன் என்ற பிம்பம் உருவாக்கப்பட்ட பின்னணியில், வடகொரியா பற்றிய இவ்வாறான பொய்யான கதைகள் கட்டமைக்கப்பட்டு உலாவருகின்றன.   

அதை நாமும் நம்புகிறோம் அல்லது நம்ப வைக்கப்படுகிறோம். இது கொலையின் கதையா அல்லது கதையின் கொலையா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .