'மட்டு. அனர்த்த முகாமைத்துவ நிலையம் உரிய முறையில் இயங்கவில்லை'
16-03-2017 02:50 PM
Comments - 0       Views - 53

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு கச்சேரியில் செயற்பட்டுவரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் செயற்பாடுகள் உருப்படியானதாக இல்லை. இதனாலேயே அந்த நிலையத்துடன் பல சந்தர்ப்பங்களில் முரண்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின்  இணைத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16)  நடைபெற்றது.

அங்கு மேலும் தெரிவித்த அவர், 'மட்டக்களப்பு மாவட்டம் பொதுவாகவே அனர்த்தத்துக்குரிய  மாவட்டமாகக் காணப்படுகின்றது.

எனவே, எந்த வேளையிலும் அனர்த்தம் இடம்பெறலாம் என்கின்ற முன்னெச்சரிக்கையோடு நாங்கள் இருக்க வேண்டும்.
அனர்த்தங்கள் இடம்பெறும்போது அங்கிருக்கின்ற அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த அலுவலர்களை அழைத்தபோதும் அவர்கள் உடனே வருவதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முறக்கொட்டாஞ்;சேனை எனும் கிராமத்தில் ஒரு வீடு தீப்பற்றிய செய்தி கேள்விப்பட்டு நான் திருகோணமலை மாவட்டத்திலிருந்து சில மணிநேரங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோதும், மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்திலிருந்து சுமார் 30 நிமிட பயணத் தூரத்திலுள்ள முறக்கொட்டாஞ்சேனைக்கு அலுவலர்கள் இரு தினங்களாகியும் சென்றடையவில்லை.

ஆகவே, இவ்வாறான நிலைமைகளில் விரைந்து செயற்பட வேண்டிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் உருப்படியாக இல்லாமல் கரிசனையற்று இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

சில அரசாங்க அலுவலர்கள் தங்களது கடமைகளை மறந்து கரிசனையற்று நடந்து கொள்வதால் பொதுமக்;கள் அரச சேவைகள் தொடர்பான அதிருப்தி நிலையில் இருக்கின்றனர். எனவே, இது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கடமை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்' என்றார்.

 

"'மட்டு. அனர்த்த முகாமைத்துவ நிலையம் உரிய முறையில் இயங்கவில்லை'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty